Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vizha’ Category

Tamil Cine Artistes Association Felicitation for Chief Minister of Tamil nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

`திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, செப்.24-

தமிழ் திரை உலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

இங்கே கமலஹாசன் பேசும்போது கலைஞருக்கு ஞாபக சக்தி அதிகம் என்று சொன்னார். உடனே கலைஞர் என் காதில் எனக்கு ஞாபக சக்தி குறைவுதான் என்றார். அதனால்தான் கலைஞர் இந்த பாராட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.

சினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி வெளியில் இருக்கும் நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். திட்டுகிறார்கள். அவர்களுக்கு சினிமாவில் நன்றாக இருக்கும் பத்து பேர்களைத்தான் தெரிகிறது. சிரமப்படுகிற, கஷ்டப்படுகிற பத்தாயிரம் பேர்களை தெரியவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்படும் 10 பேர்களில் கூட உண்மையாகவே நன்றாக இருப்பவர்கள் 5 பேர்கள்தான். சினிமாவில் கொடிகட்டி பறந்த மிகப்பெரிய மனிதர்களெல்லாம் இப்போது எங்கே? மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, விஜயா வாஹினி, மேகலா பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் எங்கே? எத்தனை பெரிய தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் , நடிகர்கள் முகவரி தெரியாமல் போய் விட்டார்கள். நான் எல்லாம் எம்மாத்திரம்?

அமிதாப்பச்சன் வீடு ஏலத்துக்கு வந்தது. சோப்ராவிடம் அவர் வாய்ப்பு கேட்டு போனார். அவருக்கே இந்த நிலை என்றால் ரஜினி மாதிரி ஆளெல்லாம் எந்த மூலைக்கு?

தாய்க்கு கூட குழந்தை அழுதால்தான் பால் கொடுக்க தெரியும். ஆனால் குழந்தை அழாமலே இந்த தாய் (கருணாநிதி) பால் கொடுத்து இருக்கிறார். இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.

அரசியல்வாதிகளுக்கே 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் ஜாதகம் மாறும். ஆனால் சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜாதகம் மாறும். திரையுலகுக்கு பல சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு லட்சம் முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-

“இங்கே வைரமுத்து பேசும்போது கலைஞர்தான் சூரியனை தட்டி எழுப்புகிறார்” என்று கூறினார். நீண்ட நேரம் பேசி இதை நான் பொய்யாக்கி விடக்கூடாது. அவருக்குத்தான் காலையில் எழுந்ததும் அமைச்சர்களையும், கலெக்டர்களையும் தட்டி எழுப்ப வேண்டிய கடமை இருக்கிறது. அவருக்கு இன்று திருமண நாள் என்று சொன்னார்கள். திருமண நாளும் அதுவுமாக அவருடைய தூக்கத்தை நாம் கெடுக்கக் கூடாது.

கால் நூற்றாண்டு காலம் அவர் ஆட்சியில் இருந்திருக்கிறார். இன்னும் கால் நூற்றாண்டு காலம் அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

டைரக்டர் கே.பாலசந்தர் பேசுகையில், கலைஞர் நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்.

டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:-

சில விழாக்கள் சில நேரங்களில் சம்பிரதாயத்துக்காக நடைபெறுவதுண்டு. ஆனால் இந்த விழா ஆத்மார்த்தமாக, உணர்வுப்பூர்வமாக எடுத்த விழா. 35 ஆண்டுகளாக தமிழகத்தை திரையுலகம் ஆட்சி செய்து இருக்கிறது. ஆனால் இதுவரை எந்த முதல்வரும் இத்தனை சலுகைகளை அளித்ததில்லை.

`இளம் கன்று பயம் அறியாது’ என்று சொல்வார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நான் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசியதுண்டு. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு தாய்ப்பசுவாக இருந்து பாலூட்டியவர் கருணாநிதி. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நான் சில சமயங்களில் உங்களுடன் முரண்பட்டு இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் முட்டி மோதிக் கொண்டதில்லை.

நீர் உள்ள அளவும், நிலம் உள்ள அளவும், நீங்கள் நீடூழி வாழ வேண்டும். தமிழ் இனத்தையும், மொழியையும் பாதுகாப்பதற்கு உங்களை விட்டால் வேறு யாருமில்லை.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

டைரக்டர் ஷங்கர் இங்கே பேசியபோது இரண்டரை மணி நேரம் திரையை ஆளுவதற்கு நாங்கள் திணறுகிறோம். ஐந்தாண்டு கால ஆட்சியை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டார். அறுபது ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் வரலாற்றை கட்டிக்காத்த புகழ் கலைஞர் ஒருவருக்குத் தான் உண்டு. தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் பல முதல்-அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். கலைஞருக்கு பின்னாலும் பல நூறு முதல்-அமைச்சர்கள் வர இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட ஒரேயொரு கலைஞர் இவர்தான். எங்களுடன் நீங்கள் இருந்து தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு நன்றி.

கலைஞருக்கு சிவாஜிக்காக நாலு பக்கங்களில் வசனமும் எழுத தெரியும். எம்.ஜி.ஆருக்காக 4 வார்த்தைகளில் வசனமும் எழுத தெரியும். 83 வயதில் இந்த உற்சாகம், இந்த ஆற்றல், இந்த சுறுசுறுப்பு அவருக்கு எப்படி வந்தது? என்று எல்லோரும் கேட்கிறார்கள். சிலருக்கு பணம் ஒரு நோக்கமாக இருக்கும். சிலருக்கு பதவி ஒரு நோக்கமாக இருக்கும். சிலருக்கு பெண் ஒரு நோக்கமாக இருக்கும். அளவுக்கு மீறி பணம் வரும்போது அந்த பணத்தின் மீது வெறுப்பு வரும். பதவியும் ஒரு கட்டத்தில் அலுத்துப் போகும். மனமும், உடலும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் பெண்ணாசையும் வெறுத்து விடும். ஆனால் கலைஞர் அவர்களுக்கு லட்சியம், இனம், மொழி ஆகியவையே நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் அவர் இன்னும் இளமையுடன் காணப்படுகிறார்.

அதிகாலை 5 மணிக்கு எழுகிற ஒரே முதல்-அமைச்சர் கலைஞர்தான். அவர்தான் பல அமைச்சர்களையும், கலெக்டர்களையும் தட்டி எழுப்புகிறார். சூரியனையே தட்டி எழுப்புபவர் இவர்தான். சூரியனை தட்டி எழுப்பி தமிழகத்தை விழித்திருக்க வைத்த சூரியனுக்கு சூரியன் இவர்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

நடிகர் விஜய் பேசியதாவது:-

சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை போன்ற படங்களில் கலைஞரின் வசனத்தை நான் பேசி நடித்திருக்கிறேன். சமீபத்தில் அவருடைய வசனத்தில் நான் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அதற்குள் அவர் முதல்-அமைச்சராகி விட்டார். எந்தவொரு விழாவில் அவரை சந்திக்கும்போதும், நீ நன்றாக இருக்கிறாயா? என்ன படத்தில் நடிக்கிறாய்? என்றெல்லாம் அவர் என்னை விசாரிக்கும்போது சந்தோஷப்படுவேன்.

நாங்கள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொடர்ந்து நடனம் அல்லது சண்டை காட்சியில் நடித்தால் களைப்பு வந்து விடுகிறது. அடுத்த நாள் விடுமுறை எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. ஆனால் இந்த வயதில் முதல்-அமைச்சர் கருணாநிதி எத்தனை விழாக்களில் கலந்து கொள்கிறார். மதுரை, சேலம், டெல்லி என்று பறந்து கொண்டே இருக்கிறார். அவருடைய உடம்பை விட அவருடைய மனதுக்கு வலிமை அதிகம் என்று கருதுகிறேன். அவரை ஒரு அரசியல்வாதி, முதல்-அமைச்சர் என்பதையெல்லாம் விட நல்ல மனிதராக பார்க்கிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.

பட அதிபர்கள்

 • ஏவி.எம்.சரவணன்,
 • கே.ஆர்.ஜி.,

டைரக்டர்கள்

 • கே.பாக்யராஜ்,
 • விஜய டி.ராஜேந்தர்,
 • ஷங்கர்,

தியேட்டர் அதிபர்கள்

 • அபிராமி ராமநாதன்,
 • பன்னீர்செல்வம்,
 • பெப்சி விஜயன்,

நடிகர்கள்

 • சத்யராஜ்,
 • சிவகுமார்,
 • பார்த்திபன்,

நடிகைகள்

 • சரோஜாதேவி,
 • மனோரமா,
 • ஸ்ரீபிரியா,
 • பிலிம் சேம்பர் தலைவர் கே.சி.என்.சந்திரசேகர்,
 • கவிஞர் வாலி,
 • விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் கோவை சண்முகம் ஆகியோரும் பாராட்டி பேசினார்கள்.

முன்னதாக அனைவரையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வரவேற்று பேசினார்.

தமிழ் திரையுலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வெள்ளி சிம்மாசனமும், வெள்ளிப் பேனாவும் வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சிகளை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்கள்

 • காஜா மைதீன்,
 • அன்பாலயா பிரபாகரன்,
 • செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன்,
 • கே.எஸ்.சீனிவாசன்,
 • பொருளாளர் அழகன் தமிழ்மணி,
 • டைரக்டர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர்,
 • செயலாளர் அமீர்ஜான் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

Posted in Actors, Actresses, Association, Chief Minister, Cinema, Felicitation, Film, Functions, Kalainjar, Kalinjar, Kamalhassan, Karunanidhi, M karunanithi, Movies, Mu Ka, Mu Karunanidhy, Rajiniganth, Tamil, Tamil Nadu, Vijay, Vizha | 1 Comment »