தமிழர் கைதை எதிர்த்து இ.தொ.கா அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்
இலங்கையில் தமிழர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இலங்கை அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மலையகக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அவசரகால நிலையை நீடிப்பதற்கான வாக்கெடுப்பிலும் அந்தக் கட்சி கலந்துகொள்ளவில்லை.
இப்படியான கைதுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெறவுமே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட துணைத் தலைவரான ஆர். யோகராஜன் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
தென்னிலங்கை பூசா முகாமில் மாத்திரம் சுமார் 450 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பல இடங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யோகராஜன், இந்த நிலைமை இனித் தொடரக்கூடாது என்றும் கூறினார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இது பற்றிய யோகராஜன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கெப்பித்திக்கொல்லாவ தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு
![]() |
![]() |
தாக்குதலில் காயமடைந்த ஒருவர் |
இலங்கையின் அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெப்பித்திக்கொல்லாவ பகுதியிலுள்ள அபிமானபுர என்னும் இடத்தில், பொதுமக்கள் பேருந்து மீது நேற்று நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலின்போது இதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 15 பொதுமக்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், மேலும் காயமடைந்த 23 பேரில் ஒருவர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டபின் சிகிச்சைகள் பயனளிக்காமல் இறந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் இன்று அறிவித்திருக்கிறார்கள்.
![]() |
![]() |
தாக்குதலில் காயமடைந்த ஒருவர் |
இந்த நிலையில் இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, விடுதலைப்புலிகள் மிகுந்த விரக்தியடைந்த நிலையிலேயே, பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதற்கு அரசங்கம் சித்தமாக இருப்பதாகவும் கூறிய ஊடகத்துறை அமைச்சர், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள், பொதுமக்களினதும், படையினரினதும் மனோதைரியத்தினை எவ்விதத்திலும் சிதைக்காத வகையில் பொறுப்புடன் செயற்படவேண்மென்றும் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, நேற்றைய கிளேமோர் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 23 பேரில் 18 சிவிலியன்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருப்பதாகவும், இவர்களில் இருவரின் நிலைமை இன்னமும் மோசமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்திய முகாம்களில் உள்ள இலங்கைப் பிரஜா உரிமையற்றவர்களுக்கு அதனை வழங்குவதற்கான தெரிவுக்குழு
![]() |
![]() |
நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் |
இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களில் பிரஜா உரிமை அற்ற சுமார் இருபத்தியெட்டாயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்குவது தொடர்பாக ஆராயுமுகமாக இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக்குழுவுக்குத் தலைவராக மலையகத்தைச் சேர்ந்தவரும், ஜேவிபி அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது சந்திப்பு இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
1970 களுக்குப் பிறகு இலங்கையில் நடந்த வன்செயல்களில் இடம்பெயர்ந்த சுமார் எண்பதினாயிரம் பேர் தற்போது இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களில் சுமார் இருபத்தெட்டாயிரத்து ஐந்நூறு பேருக்கு எந்த நாட்டின் பிரஜா உரிமையும் கிடையாது என்று கூறும் சந்திரசேகரன், அவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்குவது குறித்தே இந்த தெரிவுக்குழு ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.