மங்கையர் போற்றும் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது
சென்னை, அக்.11-
“ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, மங்கையர்க்கு 9 இரவு நவராத்திரி;” என்று மங்கையர் போற்றும் நவராத்திரி விழா இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேத வாத்தியார் ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-
புண்ணியம் தரும் புரட்டாசி
தமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்று போற்றப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமின்றி அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை புண்ணியமாக கருதுகிறார்கள்.
நவராத்திரி
புரட்டாசி மாதம் மற்றொரு வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது. புரட்டாசி மாதம் மங்கையர் போற்றும் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
நவராத்திரி பெண்களுக்கான பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போல் பெண்களுக்கு நவராத்திரி ஒன்பது நாட்கள் போற்றுதலுக்குரிய நாட்களாக கருதப்படுகிறது. எனவே, நவராத்திரியை மங்கையர் போற்றும் நவராத்திரி என்று சொல்கிறார்கள்.
சக்தி வழிபாடு
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (துர்கா, லட்சுமி, சரஸ்வதி) ஆகிய முப்பெரும் சக்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது நவராத்திரி விழாவில் தான். இந்த மூன்று சக்திகளும் சேர்ந்தே லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரியாக தேவி புராணங்களில் சொல்லப்படுகிறது.
இதையே ஸ்ரீசக்ர பூஜா விதியில் ஸ்ரீகாமேஸ்வரி, ஸ்ரீபகமாலினி, ஸ்ரீநித்தியக்லின்னா, ஸ்ரீபேருண்டா, ஸ்ரீவன்னிவாசினி, ஸ்ரீவஜரேஸ்வரி, ஸ்ரீத்வரிதா, ஸ்ரீகுலசுந்தரி, ஸ்ரீநித்யா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீசர்வமங்களா, ஸ்ரீஸ்வாலாமாலினி, ஸ்ரீலலிதா, ஸ்ரீவாராகி, ஸ்ரீசியாமளா உள்பட 18 சக்திகளாக சொல்லப்பட்டு உள்ளது. அதையே 18 புராணங்களும் நடைமுறையில் உள்ளன. 18 சக்திகளும் ஒவ்வொரு பலா பலனை வழங்குகிறார்கள்.
காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று 3 சக்திகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.
நவராத்திரி விழாவை, ஸ்ரீதுர்கா பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். 9 நாட்களும் ஸ்ரீதுர்கா தேவியை, “ஸ்ரீவனதுர்கா, ஸ்ரீசூலினி துர்கா, ஸ்ரீஅக்னிதுர்கா, ஸ்ரீசாந்தி துர்கா, ஸ்ரீசபரிதுர்கா, ஸ்ரீலவனதுர்கா, ஸ்ரீதீபதுர்கா, ஸ்ரீஆசூரி துர்கா, ஸ்ரீஜெயதுர்கா”, என்று ஒவ்வொரு நாளும் நவ துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
மைசூர் தசரா
வட இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் `ராமலீலா’ என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில், துர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள்.
கர்நாடகாவில் தசரா பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. தசரா பண்டிகையை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
சுவாசினி, கன்யா பூஜை
நவராத்திரியின்போது, வீடுகளில் கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். நவராத்திரி விழாவில் `சுவாசினி’ பூஜை, `கன்யா’ பூஜை செய்வது சிறப்பானது ஆகும். `சுவாசினி’ பூஜை என்பது, சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தங்கள் வசதிக்கேற்ப வஸ்திர தானம், ஆபரண தானம் வழங்கி விருந்தளிப்பது சிறந்ததாகும். தாம்பூலம் வழங்கும்போது சுமங்கலிகளிடம் ஆசி வாங்க வேண்டும்.
இதே போல், பெண் குழந்தைகளுக்கும் பாவாடை, சட்டை வழங்கி வணங்க வேண்டும். குழந்தையை தெய்வமாக பாவித்து வணங்குவதே கன்யா பூஜை என்று அழைக்கப்படுகிறது. சுவாசினி, கன்யா பூஜையின்போது, நவராத்திரியின் முதல் நாள் ஒருவருக்கும், இரண்டாவது நாள் இருவருக்கும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிப்பது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொடுக்கலாம்.
எத்தனை படிக்கட்டுகள்
நவராத்திரியில் கொலு வைப்பது முக்கியமானதாகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதியை குறிப்பிடும் வகையில் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற தத்துவத்தில் 3 படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.
பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களை குறிப்பிடும் வகையில் 5 படிக்கட்டுகளாகவும், அறுசுவையைக் குறிப்பிடும் வகையில் 6 படிக்கட்டுகளாகவும், சப்த மாதாக்களை குறிப்பிடும் வகையில் 7 படிக்கட்டுகளாகவும், நவ துர்க்கையை குறிப்பிடும் வகையில் 9 படிக்கட்டுகளாகவும், ஸ்ரீவித்யாவை குறிக்கும் வகையில் 10 படிக்கட்டுகளாகவும், லாபஸ்தானத்தை குறிக்கும் வகையில் 11 படிக்கட்டுகளாகவும், 12 மாதங்களை குறிப்பிடும் வகையில் 12 படிக்கட்டுகளாகவும் கொலு வைக்கலாம். வசதி படைத்தவர்கள் 36 படிக்கட்டுகளில் கூட கொலு வைக்கிறார்கள்.
இன்று கொலு வைக்க சிறந்த நாள்
இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாள் ஆகும்.
கொலு பொம்மைகளை படிக்கட்டுகளில் வைப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) உகந்த நாள் ஆகும். இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் சுக்ர ஹோரையில் கொலு வைக்க வேண்டும். வழிபாடுகளை நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும்.
என்னென்ன பிரசாதம்?
நவராத்திரியின்போது, ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு பிரசாதம் வைத்து வழிபடவேண்டும். முதல் நாள் சர்க்கரைப் பொங்கல், மொச்சை சுண்டல், முப்பருப்பு வடை பிரசாதமாக வைக்க வேண்டும். சனிக்கிழமை எள் கலந்த பாயசம், தயிர் வடை, வேர்கடலை சுண்டல், எள்ளு சாதமும், ஞாயிற்றுக்கிழமை கோதுமையில் தயார் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
திங்கட்கிழமை அவல் கேசரி, பால்பாயசம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், 5-வது நாள் செவ்வாய்க்கிழமையன்று சர்க்கரை பொங்கல், துவரை வடை, கடலைப்பருப்பு (பூம்பருப்பு) சுண்டல், 6-வது நாள் தேங்காய் பால் பாயசம், பச்சைப்பயிறு சுண்டல், கதம்ப சாதம், 7-வது நாள் கொண்டக்கடலை சுண்டல், பாதாம், முந்திரி கலந்த பாயசம், தயிர் சாதம், புட்டு, 8-வது நாள் அனைத்து வகை இனிப்பு, பலவித பட்சணங்கள், மொச்சை சுண்டல், 9-வது நாள் எள் உருண்டை, எள் பாயசம், புளியோதரை, கேசரி, வேர்க்கடலை சுண்டல், 10-வது நாள் கோதுமையில் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக வைத்து பூஜை செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.
நவராத்திரியின்போது, சண்டி பாராயணம், சண்டி ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. நவராத்திரியில் தான் ஆதி பராசக்தி மிகப்பெரிய அசுரர்களை வதம் செய்ததாக தேவி புராணங்களில் கூறப்பட்டு உள்ளன.
ஆயுத பூஜை
நவராத்திரியில் 9-வது நாள்ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி சிறிய பெட்டிக்கடையில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் ஆயுத பூஜை அன்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
தொழில் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் கூடுதல் சிறப்புக்கொடுத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.
விஜயதசமி
ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி வருகிறது. விஜயதசமியில் உள்ள விஜயம் என்றால் வெற்றி. தசம் என்றால் 10.`மி’ என்றால் தனக்கு என்று பொருள். தனக்கு 10 திசைகளில் இருந்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நோக்கில் அன்றைய தினம் மகா விஷ்ணு, தேவியர், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு கல்விக்கண் திறக்கும் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.
விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்புகளைக் கூட இந்த நாளில் தான் தொடங்குகிறார்கள்.
இவ்வாறு ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறினார்.
———————————————————————————————————————————
நவராத்திரி இரண்டாம் நாள்
வாராஹி :
விஷ்ணுசக்தி வகைகளுள் வாராஹியும் ஒருத்தி. வராஹ (பன்றி முகம்) வடிவம் கொண்டவள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தன் தெத்துப்பற்களால் பூமியைத் தாங்கி துõக்கியிருப்பவள். “மங்கள மய நாராயணி’ என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் அம்ச சக்திகளில் “தண்டினி’ என்ற பெயரும் உண்டு. இவள் தேவியின் சேனாதிபதி. வராஹநந்தநாதருக்கு வராஹ ரூபமாக காட்சி தந்ததால் வாராஹி என்று பெயர் பெற்றாள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். இவளை குறிக்கும் 32 செய்யுள்கள் அடங்கிய நுõல் “வாராஹி மாலை’ எனப்படும். நாம் பேசும்போது வாக்கை தடுத்து நிறுத்துபவள் வாராஹி. எனவே இவளுக்கு “வல்காமுஹி’ என்ற பெயரும் உண்டு. இது காலப்போக்கில்”பகளாமுஹி’ என ஆகிவிட்டது.
நைவேத்யம் : வெண்பொங்கல், இனிப்பு பலகாரம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: வளையல் விற்றல்
———————————————————————————————————————————
நவராத்திரி மூன்றாம் நாள்
இந்திராணி :
பராசக்தியை நாளை இந்திராணியாக கருதி வழிபட வேண்டும். இவளை மகேந்திரி என்றும் கூறுவர்.
இவள் இந்திரனின் சக்தி. கிரீடம் தரித்து வஜ்ராயுதம் தாங்கியிருப்பவள். ஆயிரம் கண் உடையவள். விருத்திராசுரனை அழித்தவள். யானை வாகனம் கொண்டவள். இதை ஐராவதம் என்பர். தேவலோகத்தின் ராஜ்ய இயக்கத்தை கவனித்துக் கொள்கிறாள். “சாம்ராஜ்ய தாயினீ’ என்பதும் இவளது இன்னொரு பெயர். பெரும் பதவியை விரும்புபவருக்கு இவளது அருள் தேவை. அரச பதவிகள், அரசுபதவிகள் அனைத்தும் இவளால் உருவாகின்றன.
நைவேத்யம் : வெண்பொங்கல்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: பட்டாபிஷேகம்
———————————————————————————————————————————
———————————————————————————————————————————