ஆந்திர மேல்சபைக்கு நடிகை நக்மா பெயர் சிபாரிசு
ஐதராபாத், மார்ச். 1-
ஆந்திர சட்டசபையில் புதிதாக மேல்சபை உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி மேல்சபை உறுப்பினர் தேர்தல் நடக்கிறது. இதுதவிர ஆந்திர மாநில கவர்னர் பரிந்துரையின் பேரில் 12 பேர் உறுப்பினர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
இந்த 12 பேர் பட்டியலில் நடிகை நக்மாவின் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் முதல்- மந்திரியுமான குலாம்நபி ஆசாத் நடிகை நக்மா பெயரை கவர்னருக்கு சிபாரிசு செய்துள்ளார்.
ஆந்திராவில் மேல்சபைக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதியாக வெளியாகவில்லை.
இது தொடர்பாக வருகிற 3-ந் தேதி முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டி டெல்லி சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்படும்.
ஆந்திராவில் புதிதாக மேல்சபை தொடங்க குலாம்நபி ஆசாத் முழு ஒத்துழைப்பு தந்தார். நடிகை நக்மாவின் பெயரை அவர் சிபாரிசு செய்து இருப்பதால் அவர் மேல்சபை உறுப்பினராவது உறுதி என்று ஆந்திர மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் மூலம் நக்மாவை மாநில அரசியலில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.