Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vietnam’ Category

Norman Mailer Pulitzer-Winning Author, Dies at 84

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

பிரபல எழுத்தாளர் நார்மன் மெய்லர் காலமானார்

நார்மன் மெய்லர்
நார்மன் மெய்லர்

கடந்த ஐம்பதாண்டுகளில் அமெரிக்க கலாச்சாரத்தில் முக்கியமான நபராக திகழ்ந்த நார்மன் மெய்லர் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் நார்மன் மெய்லரும் ஒருவர். தன்னுடைய முதலாவது நாவலான ‘தி நேகட் அண்டு தி டெட்’ மூலம் முத்திரையை பதித்தார் நார்மன் மெய்லர். இரண்டாவது உலகப் போரில் தனக்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நார்மன் மெய்லர் இந்நாவலை உருவாக்கினார்.

நாவல்கள் மட்டுமன்றி, கட்டுரைகள், நாடகங்கள், செய்திகள், திரைப்படம் போன்றவற்றிலும் நார்மன் மெய்லர் நன்கு அறியப்பட்டார்.

அவருக்கு, ‘தி ஆர்மிஸ் ஆஃப் தி நைட்’ மற்றும் ‘தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்’ ஆகிய இரண்டு படைப்புக்காக இருமுறை புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.

இதில் ‘தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்’கில் காணப்பட்ட அவருடைய எழுத்து முறை அவருடைய முத்திரையாக பதிந்தது.

அரசியலில் துடிப்புடன் இருந்த நார்மன் மெய்லர் 1960 ஆண்டுகளில் வியட்நாம் போருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.

Posted in America, Author, Bush, dead, Fiction, GWB, Literature, Mailer, Norman, Novels, Prizes, Pulitzer, Story, US, USA, Vietnam, Wars, Writer | 1 Comment »

Self-suffiency in Foodgrain Production – KB Prabhakaran

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

உணவு தன்னிறைவு… நிஜமா?

கே.பி. பிரபாகரன்

நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகளான நிலையில், உணவுத் துறையில் திட்டமிடுதல் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் “இந்தியா உண்மையிலேயே உணவு தன்னிறைவுடன் உள்ளதா?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

நாட்டு மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லையெனில் “விடுதலை’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா பெருமளவில் கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.

எந்த ஒரு தன்மானமிக்க நாடும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைக் கொண்டு வாழ்வதில்லை; அதிலும் – நாமே நமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே அப்போதைய வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது என்ற புனைவு சரியல்ல. இந்தியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை, தங்களது போர் நடவடிக்கைகளுக்காகக் கொண்டு சென்றதாலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில் உணவு தேவையோ அங்கு உணவுப் பொருள்களை அளிக்காததாலுமே அந்தப் பஞ்சம் ஏற்பட்டது. இதேபோலத்தான் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், ஒரிசா போன்ற பகுதிகளில் பட்டினியால் மக்கள் வாடிக் கொண்டிருந்த போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு விற்கும் விலையைவிடக் குறைந்த விலையில் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி ஒரு மோசடி நடவடிக்கை.

1980 ஆம் ஆண்டுகளில் 2.85 சதவிகிதமாக இருந்த உணவு தானிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1990-களில் 1.6 சதவிகிதமாகக் குறைந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக, உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நிகழ்ந்தது. இருப்பினும், உணவு உற்பத்தியில் இந்தியாவின் “தன்னிறைவு’ குறித்து மார்தட்டிக் கொள்ளும் வேளாண் வல்லுநர்கள் இந்த மோசமான நிலையை பார்க்கத் தவறிவிட்டனர். இந்தச் சிக்கல் உலகமயத்தால் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரேநேரத்தில் 2,000 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கியது; இதில் பெரும்பான்மையானவை வேளாண்மை சார்ந்தவை. இதனால், பெருநகரங்களில் பல்பொருள் அங்காடிகளில் அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆப்பிள்கள் குவிந்தன; மலிவு விலையிலான வியத்நாம் மிளகு, குவாதமாலா ஏலம் ஆகியவையும் இந்தியச் சந்தைகளில் குவிந்தன.

விளைபொருள்கள் வருவாயிலிருந்து, இடுபொருள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலைக்கு இந்தியாவின் சிறு, குறு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

450 கிராம் பி.டி. ரக பருத்தி விதைகளை ரூ.1,950 என்ற விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட விதர்பா பகுதி விவசாயிகள், மகசூல் வெகுவாகக் குறைந்தபோது, ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர்.

வேளாண் வளர்ச்சி 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில் தேக்கமடைந்தது. வேளாண்மையில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் மன்மோகன் சிங், 2005 நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் “வேளாண்மையில் அறிவாற்றல் முன்முயற்சி’ என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மையமாகக் கொண்டது.

உணவுப் பற்றாக்குறையைப் போக்க மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வு அல்ல. நாட்டின் 14.2 கோடி ஹெக்டேர் பயிர்ச் சாகுபடி பரப்பில் பாசன வசதி பெற்ற 4.7 கோடி ஹெக்டேர் நிலத்திலிருந்து 56 சத உணவு தானியம் கிடைக்கிறது. மீதமுள்ள 9.5 கோடி ஹெக்டேர் பரப்பு வானம் பார்த்த பூமியாகும்.

பெருமளவு முதலீடு செய்திருந்த போதிலும், நீர்ப் பயன்பாடு குறித்த தவறான திட்டமிடல் காரணமாக, மானாவாரிப் பகுதிகள் அளிக்கும் வாய்ப்புகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. பிரம்மாண்டமான பாசனத் திட்டங்களுக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்ததே இதற்குக் காரணம்.

இதற்கு மாற்றாக, தண்ணீர் சேகரிப்பை உள்ளடக்கிய, அந்தந்தப் பகுதி நீர் வளத்தை மையப்படுத்திய, பரவலாக்கப்பட்ட சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்களை 0.9 சத விவசாயிகளே பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் அம்சம். வேளாண் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறியாமல் உள்ள ஏறத்தாழ 50 ஆயிரம் கிராம, வட்டார விரிவாக்க அலுவலர்கள், அரசுக்கு நிதிச் சுமையாக உள்ளனரே தவிர, அவர்களால் பயன் ஒன்றும் இல்லை.

இவர்களுக்கு நேர் எதிராக, சீனாவில் 15 லட்சம் வேளாண் தொழில்நுட்ப முகவர்கள், விவசாயிகளின் வயல்களில் அவர்களுடன் தோளோடு தோளாக வேலை செய்து கொண்டே, அந்நாட்டு மண்ணின் மகசூல் அதிகரிக்க புதுமைகளைப் புகுத்திய வண்ணம் உள்ளனர். இந்தியாவில் நிலைமை, இதற்கு நேர்மாறு.

இந்தியாவின் வேளாண் கொள்கை தானியங்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். சீனாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கோதுமை விலை நமக்கு அபாய அறிவிப்பு செய்கிறது; ஒரே ஆண்டில் 80 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு நமது துறைமுகங்களுக்கு வந்து சேரும் கோதுமையின் விலை டன்னுக்கு ரூ. 14,000-க்கு குறையாது. இந்த நிலையில், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 900-க்கும் அதிகமாக விலை தருவதற்கு யோசிக்கிறது மத்திய அரசு.

உணவுத் துறையில் முறையான திட்டமிடல் மூலம், நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், மத்திய அரசு தொடர்ந்து அதிக விலைக்கு கோதுமையை இறக்குமதி செய்வது, நமக்கு அவமானம்.

ஆயிரக்கணக்கான தென்னிந்தியக் குடும்பங்களில் அரிசி உணவின் இடத்தை சப்பாத்தி பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரைவை ஆலை உரிமையாளர்கள் கோதுமையைக் கொள்முதல் செய்ய அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அரைவையாளர் கூட்டமைப்பில் சேர்த்து, சிறப்பு கோதுமை மண்டலங்களில் கோதுமை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் என்ன?

கிழக்கு இந்தியாவில், குறிப்பாக பிகாரில், பயன்படுத்தப்படாமல் உள்ள வளமான நிலப் பகுதியை கோதுமை சாகுபடிக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாமே!

——————————————————————————————————————-

வேளாண்மை மேம்பட..!

சி. வேழவேந்தன்

நமது நாடு தொழில் வளர்ச்சியில் 9 சதவிகித அளவை எட்டிவிட்டாலும், வேளாண் துறை வளர்ச்சியில் 2.8 சதவிகிதமாகவே உள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்தவட்டியில் தேவையான அளவு கடன் வழங்குவதே வேளாண்மை மேம்பாட்டுக்கு அடிப்படைத் தேவை.

கிராமங்களில் விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பருவ மழை தவறுவதும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததும், மத்திய, மாநில அரசுகளின் தவறான வேளாண் கொள்கைகளும்தான்.

நஷ்டமானாலும் பரவாயில்லை, தமது நிலத்தை உழவுசெய்யாமல் போடக்கூடாது என்பதே இன்றைய விவசாயிகளின் உணர்வோட்டமாக உள்ளது.

இன்று விவசாயிகள் முன் உள்ள பெரிய பிரச்னை கடன்தான். விதர்பா பகுதியில் நடப்பதைப்போல, தற்கொலை என்ற தவறான முடிவுக்கு இதுவரை தமிழக விவசாயிகள் வரவில்லை. விவசாயமும் கடனும், நகமும் சதையும்போல பிரிக்க முடியாதவை. சிறிய விவசாயிகளுக்கு சிறிய அளவிலும், பெரிய விவசாயிகளுக்கு அதிக அளவிலும் கடன் உள்ளது.

விவசாயிகளின் கடன்சுமையைப் போக்குவதற்காகத் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்தது. இதனால், கிராமப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெரிதாகப் பயனடையவில்லை.

கட்சி வேறுபாடு இல்லாமல் கூட்டுறவு வங்கியில் தொடர்புடையவர்களும், அவர்களின் உறவினர்களுமாக “பெரிய விவசாயிகள்’ ஒவ்வொருவரும் வாங்கிய பல லட்சம் மதிப்புள்ள கடன்கள்தான் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய விவசாயிகளுக்கு இதனால் பெருமளவில் பலன் ஏற்பட்டதாகக் கூறமுடியாது.

இந்தக் கடன் தள்ளுபடியால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கடன் தள்ளுபடியான பின்னர் கூட்டுறவு வங்கிகளால் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கு முதிர்வு காலத்திற்குப் பின்னரும் வைப்புத்தொகையை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

விவசாயிகள் இதற்கு முன் மற்ற வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளிலேயே தங்களது நகைகளை அடகுவைத்து கடன்பெற்றனர். இன்று நகைக்கடன்களுக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் அவ்வங்கிகள் திணறுவதைக் காணமுடிகிறது.

நிலவள வங்கிகளை மூட அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலவள வங்கிகள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு மட்டும் பயனளித்து வந்த வங்கிகள். நிலவள வங்கிகள் செய்த பணியை தற்போது கூட்டுறவு வங்கிகளும், மற்ற வங்கிகளும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையாக எத்தனை வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முன்வருகின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

குடும்பம் குடும்பமாகக் கிராமங்களை விட்டு நகரங்களைநோக்கி விவசாயிகள் இடம் பெயர்வதால் விவசாயத்தின் நிலை சில ஆண்டுகளில் என்ன ஆகுமோ என்ற பேரச்சம் ஏற்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு உளுந்து விலை ஏற்றம் விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. 20 – 30 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்த விவசாயிகள் கூட இதுவரை எந்தப் பயிரிலும் அதிக லாபம் பார்த்ததில்லை.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி இந்த ஆண்டு தொடருமா என்பது கேள்விக்குறியே. காரணம் வெளிநாடுகளுக்கு உளுந்து போன்ற பயறுவகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைதான்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இன்றைய முக்கியத் தேவை, போதிய அளவில் வங்கிக்கடன்தான்.

சில விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிச்செலுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் என்பது உண்மையே. இதைப்போக்க விவசாயிகளுக்கு முதலில் சிறிய தொகையைக் கடனாகக் கொடுக்கலாம். அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், அந்தத் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.

விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் போதுமான அளவு வங்கிகள் கடன் அளித்து, புதிய விஞ்ஞான முறைகளைப் புகுத்தினால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் வகையில் வேளாண்மைத் துறையில் வளர்ச்சியைக் காண முடியும்.

Posted in Agriculture, Apples, Arid, Australia, Bengal, China, Commerce, Dhal, Drought, Eat, Economy, Farmer, Farming, Flood, Food, Foodgrain, Foodgrains, GDP, Grains, Grams, Growth, GWB, Loans, Orissa, Policy, Poor, Rains, rice, Rich, Storage, Sudeshi, Sudesi, Sudheshi, Sudhesi, Suicides, Swaminathan, Tamil, Tariffs, Tax, Vidharba, Vidharbha, Vietnam, Vitharba, Vitharbha, War, WB, Wheat | Leave a Comment »