சேவை: வந்தாச்சு…பொம்மை வேன்!
அந்த கிராமத்தின் பள்ளம் மேடான சாலையில் புழுதி பறக்க ஒரு வேன் விரைகிறது. அங்குள்ள ஆரம்பப் பள்ளியின் முன் பிரேக் அடித்து நிற்கிறது.
“”வந்தாச்சு, பொம்மை வேன் வந்தாச்சு” படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கூச்சலிடுகின்றனர். ஆசிரியராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொம்மை வேன் வருவதை நேற்றே கேள்விப்பட்டதால் நேற்று இரவு முழுக்க பொம்மை வேன் வருவதாகக் கனவு கண்டு தூக்கம் கெட்ட குழந்தைகள், கண்முன் அது வருவதைப் பார்த்ததும் உற்சாகத்துடன் கத்துகிறார்கள். அவர்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியைப் பார்த்து ஆசிரியர்கள் மெüனமாகிவிடுகிறார்கள்.
“வித்யாரம்பம்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நடமாடும் பொம்மை நூலக வாகனம்தான் அது. இரண்டாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியறிவூட்டும் பொம்மைகளை விளையாடக் கொடுத்து அறிவூட்டும் பணியைச் செய்து வருகிறது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் வி.ரங்கநாதனைச் சந்தித்துப் பேசினோம்.
குழந்தைகளுக்குப் பொம்மைகளை விளையாடக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
சுனாமியின் போது நாகப்பட்டினம் பகுதியில் பல குழந்தைகள் தங்கள் தாய், தந்தையை, அன்புக்குரியவர்களை இழந்துவிட்டார்கள். அந்தத் துயரம் அவர்கள் மனதைவிட்டு அகலவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு வருவது மிகவும் குறைந்துவிட்டது. எல்லாவற்றையும் பறிகொடுத்த அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதே மிகுந்த சிரமமாகிவிட்டது. ஸ்கூலுக்குப் போவதற்கே பயந்தார்கள். அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவைப்பதற்காக, அவர்களுடைய மனநிலையை மாற்ற பொம்மைகளை அந்தப் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த வெற்றி, பிற பள்ளிகளுக்கும் பொம்மைகளைக் கொண்டு செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
பொம்மைகள் என்றால் விளையாட்டுப் பொம்மைகளா?
விளையாட்டுப் பொம்மைகள்தாம். ஆனால் அதேசமயம் அவற்றின் மூலம் குழந்தைகளின் அறிவை வளர்க்க முடியும். பொம்மைகளை வைத்து கணக்குப் போடக் கற்றுக் கொடுப்பது, அறிவியல் அறிவை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.
இப்போது கல்வி கற்பிக்கும் முறைகள் மாறிவிட்டன. “விளையாட்டுப் போல கல்வி’ என்பது நகர்ப்புறத்தில் உள்ள வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதைக் குக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் பெறுவது எப்படி? நாளை இந்தக் குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நகர்ப்புறக் குழந்தைகள்தானே வேலைவாய்ப்பைப் பெற முடியும்? நகர்ப்புறக் குழந்தைகளுக்குச் சமமாக கிராமத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம்.
ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கிராமத்துப் பள்ளிக்குப் போய் சில மணி நேரங்கள் பொம்மைகளைக் காட்டுவதால் அவர்கள் அறிவு வளர்ந்துவிடுமா?
எங்களுக்கும் ஆசைதான், எல்லா ஊர்ப் பள்ளிகளிலும் நிரந்தரமாக இப்படிப் பொம்மைகளை வைத்துக் குழந்தைகளின் கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்று. சுமார் 250 பொம்மைகளை வைத்துக் கல்வி கற்றுக் கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு எப்படி எங்களால் நிரந்தரமாகப் பொம்மைகளை வழங்க முடியும்?
இப்போது எங்களிடம் மூன்று பொம்மை வேன்கள் உள்ளன. ஒரு வேனில் நான்கு பேர் போவார்கள். குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து விளையாட்டும் அதேநேரத்தில் கல்வியும் கற்றுத் தருகிறோம். பாட்டு, நடனம் போன்றவற்றையும் அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கிறோம்.
நாங்கள் ஒரு பள்ளிக்குப் போய் பொம்மைகளைக் காட்டிவந்தபின்னால் அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர் போன்றவர்கள் பொம்மைகள் எங்கே கிடைக்கும்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். அவர்கள் தங்கள் பள்ளிக்கென்று பொம்மைகளை வாங்குகிறார்கள்.
எங்களுக்குப் பொம்மை வாங்க உதவுவது ரேயுகாய் – Reiyukai என்ற ஜப்பானிய நிறுவனம். அவர்களின் பிரதிநிதிகள் இங்கே நேரில் வந்து எங்களின் செயல்பாடுகளைப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, எங்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட பிற வெளிநாட்டவரும் எங்களை வந்து பார்க்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்ட்ரியா என்பவர் கூட அதுபோல இங்கே வந்து பார்த்தார்.
பொம்மைகளைக் குழந்தைகள் உடைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
குழந்தைகள் விளையாடுவதால் பொம்மைகள் உடையும் என்று முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்கித் திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே சேதம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் என்றால் விளையாடுவார்கள். விளையாடினால் உடைந்து போகும். இதெல்லாம் சகஜம்தானே?
உங்கள் நிறுவனத்தை சுனாமியின் போதுதான் ஆரம்பித்தீர்களா?
இல்லை. நாங்கள் வித்யாரம்பத்தை ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றன. நான் பல தனியார் நிறுவனங்களில் பல பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றவன். நான் எனது சொந்தக் கிராமத்துக்கு என் குழந்தைகளுடன் போகும்போதெல்லாம் அங்குள்ள குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் அறிவுத்தரத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. கிராமத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே தோன்றியது. என் குழந்தைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். என்றாலும் என் எண்ணம் அப்படியேதான் இருக்கிறது.
பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நான் செய்த முதல் காரியம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டக் கோட்டை என்ற கிராமத்துக்குப் போனதுதான்.
அங்குள்ள சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காகப் பள்ளிக்குச் செல்வதில்லை. அங்குள்ள சத்துணவுக் கூடத்திற்கு உணவு உண்பதற்காகச் செல்கிறார்கள் என்பதையறிந்து மனம் வேதனைப்பட்டேன். அவர்களுக்கு கல்வி கற்றுத் தர நான் தனிப்பட்ட முறையில் சிறு உதவிகள் செய்தேன். பின்னர் சென்னைக்கு வந்து நண்பர்களுடன் இதைப் பற்றிக் கலந்தாலோசித்ததின் விளைவாக 2002 இல் உருவானதுதான் வித்யாரம்பம் அறக்கட்டளை. எங்களுக்கு முதன் முதலில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான செக் நன்கொடையாகக் கொடுத்து உதவினார் ஏஇக நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார். இதை எங்களால் மறக்கவே முடியாது.
வித்யாரம்பம் அறக்கட்டளையின் மூலமாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு “உறுதுணைக் கல்வி’ என்ற பெயரில் கற்றுத் தருகிறோம். 2 – 3 வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி. 4 – 5 வது வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி என்று எடுக்கிறோம். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், சிலேட்டு போன்றவற்றையும் வழங்குகிறோம். எங்களிடம் பயிற்சி பெறும் குழந்தைகள் அவர்கள் படிக்கும் பள்ளியில் மிகத் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.
என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?
முதலில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். காலணியைக் கழற்றிச் சரியாக வைக்கிறார்களா? புத்தகப் பைகளை ஒரு பக்கமாக அடுக்கி வைக்கிறார்களா? என்பதையெல்லாம் கண்காணித்துக் கற்றுக் கொடுப்போம். வணக்கம், குட்மார்னிங், தேங்க்யூ சொல்லுதல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்போம். பிறகு பொம்மைகளை வைத்து விளையாட்டுக் கற்றுக் கொடுப்போம். மணிகளைக் கோர்க்கச் சொல்லிக் கற்றுக் கொடுப்போம். மணிகளை வைத்து கணக்குப் போடச் சொல்லித் தருவோம். கணிதம் சொல்லித் தரும் எங்கள் முறையே விளையாட்டுடன் தொடர்புடையதாகத்தான் இருக்கும். மிக எளிய கூட்டல், கழித்தலில் ஆரம்பிக்கும் எங்கள் குழந்தைகள், கோடி மதிப்புள்ள எண்களைக் கூடக் கொஞ்சமும் பயமில்லாமல் கூட்டிக் கழித்துவிடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஒரு வித்யாரம்ப மையத்தில் 20 குழந்தைகள் இருப்பார்கள். ஓர் ஊரில் 30 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் இரண்டு மையங்களை ஏற்படுத்திவிடுவோம். தமிழ்நாட்டில் இப்போது 600 மையங்கள் செயல்படுகின்றன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் எங்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
இதுதவிர குழந்தைகளுக்கான நூலகங்களையும் நடத்தி வருகிறோம்.