ஏன் இந்த பாரபட்சம்?
மற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.
அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?
மற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி?
கடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.
2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.
மும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன்? இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை!
———————————————————————————————————–
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி
கே.வீ. ராமராஜ்
குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.
எனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்களிலும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.
மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.
நான்காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.
நமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.
குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.
குற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
குற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்? முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும்? புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.
காவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
தேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.
மேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.