Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Venkushtam’ Category

Ven Kushtam? Disorder Awareness – Melanin deficiency

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

விழிப்புணர்வு: வெண்குஷ்டம் அல்ல… வெண்புள்ளிகள்

ரவிக்குமார்


“”எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் நீண்ட காலமாக சருமத்தில் வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களை, இன்னமும் இந்தச் சமூகம் “வெண்குஷ்டம்’ வந்தவர்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது. இதை வெண்புள்ளிகள் என்று அழைப்பதுதான் சரி. நோயே இல்லாத இதை தொழுநோய் என்று அழைப்பது தவறு.” என்று தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார், கே.உமாபதி. இவர், “வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளர். இவரும் இந்தப் பாதிப்போடு இருப்பவர்தான். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதுடன், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி வருகிறார் கே.உமாபதி. வெண்புள்ளிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”நம் உடலின் மிகப் பெரிய உறுப்பே தோல்தான். தோலில் உள்ள “மெலனின்’ என்ற நிறமி இழப்பினால் சருமத்தில் உண்டாவதுதான் இந்த வெண்புள்ளிகள். இந்த மெலனினை நம் உடலில் உற்பத்தி செய்வது தோலில் உள்ள “மெலனோûஸட்’ என்ற பெயருடைய அணுக்களின் வேலை.

நம் உடலில் கிருமிகளின் பாதிப்பு வரும்போது, அதை எதிர்ப்பது ரத்த வெள்ளை அணுக்களின் வேலை. இதனால் இந்தச் செல்களை “மிலிட்டரி செல்கள்’ என்று அழைப்பர். இந்த மிலிட்டரி செல்கள், கிருமி என நினைத்து “மெலானோûஸட்டை’ அழிக்கின்றன. அவ்வாறு மெலனோûஸட் செல்கள் அழிக்கப்படும் இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றி அது அப்படியே பரவத் தொடங்கும்.

இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு எந்த வயதிலும், யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வெண்புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளானோர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கின்றது.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே வித்தியாசமாக நடத்தும் நிலை மாறவேண்டும். குறிப்பாக இந்தப் பாதிப்புடன் இருக்கும் பெண்களை குடும்பத்தின் விசேஷங்களில் பங்கேற்காமல் ஒதுக்கி வைப்பது, தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற செயல்களால், உளவியல்ரீதியாகப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெண்புள்ளிகள் தொற்றக்கூடியதோ, பரம்பரையாகத் தொடரும் பிரச்சினையோ இல்லை என்பதை மக்கள் கூடும் பொதுஇடங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறோம். வெண்புள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் வகையில், சமீபத்தில் கூட, பள்ளி மாணவர்களைக் கொண்டு 9 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தோம்.

ஓர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிக்கு இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ, அவரின் இரண்டு பெண்களுக்கோ இந்தப் பாதிப்பு இல்லை. ஒரு பெண் எம்.பி.ஏ.வும், இன்னொரு பெண் எம்.சி.ஏ.வும் படித்திருந்தனர். அப்பாவுக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பதால் அவரின் பெண்களுக்கு பல வருடங்களாகத் திருமணம் ஆகாமலேயே இருந்தது. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, “”உங்கள் திருமணம் தடைபடுவதற்குக் காரணமாக நானே இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி வெண்புள்ளிகளின் பாதிப்பால் விளைந்த வேதனையான நிஜச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் பெண்கள் அவர்களை அனுசரித்துப் போவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. அதுவே பெண்ணுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடுகிறது. வேலை வாய்ப்பில் தொடங்கி, திருமணம் ஆவதற்கே கூட தடையாக இருக்கிறது. இதனால் நாங்கள் வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பவர்களுக்குள்ளாகவே பேசி, இதுவரை எட்டு திருமணங்களை நடத்தியிருக்கிறோம். வெண்புள்ளி பாதிப்பு இருந்தாலும் இந்த சாதியில்தான் பெண் வேண்டும், பையன் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு நாங்கள் உதவமுடியாதுதான். வெண்புள்ளிகளை விடவும் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பது சாதிதானே!

வெண்புள்ளி பாதிப்பிற்கு என்னைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவம் சரிப்படாது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை வைத்தியம் போன்ற வைத்திய முறைகளில் இதை பரவாமல் தடுப்பதற்கு வழியிருக்கிறது. அதிலும் பஸ்பம் (மெட்டல்) கலக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். சித்தா மற்றும் பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் நிபுணர்களை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கும் மருத்துவக் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்குப் (தொலைபேசி எண்: 044-65381157) பரிந்துரைக்கிறோம்.

பல நிறுவனங்களோடு பேசி வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை, இந்த பாதிப்பு இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமும் கூட கூறுங்கள். விழிப்புணர்வு- பாதிப்பு இருப்பவர்களுக்கும் தேவை. இல்லாதவர்களுக்கும் தேவைதானே!” என்றார் உமாபதி.

Posted in Advice, AIDS, albinism, Awareness, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bias, Blood, cancer, Cells, Color, Colour, cure, Deficiency, disadvantage, Discoloration, Disease, Disorder, Dots, genes, Genetic, Hereditary, HIV, hypomelanism, hypomelanosis, inferiority, Kushtam, Leper, Leprosy, medical, Melanin, melanocytes, Oppression, pigment, privilege, Race, racialism, racism, Racist, RBC, Skin, Society, Status, superiority, unaani, Unani, Venkushtam, Vennkushtam, WBC, White, Yunaani, Yunani | 20 Comments »