Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Veerendranath’ Category

Gowri Kirupanandhan: Interview – Telugu to Tamil Translations

Posted by Snapjudge மேல் மே 31, 2007

முகங்கள்: ஒரு நாளில்…எட்டுமணி நேரம்!

உலகிலேயே மிகக் கடினமான காரியம் என்னவென்று பள்ளி மாணவர்களிடம் கேட்டுப் பாருங்களேன், “”தமிழைத் தவறில்லாமல் எழுதுவதுதான்” என்பார்கள். எந்த “ர’ போடுவது, எந்த “‘ந போடுவது என்பதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் தகராறுதான். இத்தனைக்கும் மழலையர் வகுப்பில் இருந்து தமிழை ஒரு பாடமாகவேனும் 12 ஆம் வகுப்பு வரை படித்திருப்பார்கள்.அவர்களுக்கே இந்தக் கதி.

ஆனால் இருபத்தொரு வயது வரை தமிழே தெரியாமல் இருந்துவிட்டு அதன் பின் தமிழ் கற்று இப்போது தெலுங்கிலிருந்து தமிழில் புத்தகங்களை ஒருவர் மொழிபெயர்க்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா? ஆம். அந்தச் சாதனையாளர் கௌரி கிருபானந்தன்.

அவர் தெலுங்கில் இருந்து கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். அந்தச் சாதனையாளரை சென்னை பெசண்ட் நகரில் அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்கள் தாய்மொழி எது?

எனது தாய்மொழி தமிழ்தான். ஆனால் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் ஹைதராபாத்தில். சிறுவயதில் இருந்தே தெலுங்கு மீடியத்தில்தான் படித்தேன். எனக்கு சிறுவயதில் தமிழே தெரியாது. எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது. அதன்பின்தான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன்.

தமிழில் என்ன படித்தீர்கள்?

தமிழில் பெரும்பாலும் நான் படித்தது கதைகள், நாவல்களே. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை விழுந்து விழுந்து படிப்பேன். ஏற்கனவே தெலுங்கு நாவல்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது.

தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

என்னுடைய 35 வது வயதில் – கிட்டத்தட்ட தமிழ் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து 14 ஆண்டுகள் கழித்து – ஒரு தெலுங்கு மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழில் படித்தேன். அந்த நாவலை ஏற்கனவே நான் தெலுங்கில் படித்திருந்ததால் தமிழில் அதை எந்த அளவுக்குக் கொலை செய்திருந்தார்கள் என்பதை அந்த நாவலைப் படிக்கும் போது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். ஏன் நாமே அதைத் தவறில்லாமல் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. முதன்முதலாக எண்டமூரி வீரேந்திரநாத்தின் “பந்தயம்’ என்ற சிறுகதையை மொழிபெயர்த்தேன். அது குங்குமச் சிமிழ் இதழில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது.

தொடர்ந்து மொழிபெயர்க்கக் காரணம்?

என்னுடைய ஈடுபாடு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் என் அப்பாவும் என் கணவரும் உற்சாகப்படுத்தினார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டதால் அவர்களை கவனிக்க அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட அல்லயன்ஸ் பப்ளிஷர்ஸ் எனக்குக் கிடைத்தது முக்கியக் காரணம். அவர்கள் கிடைக்கவில்லையென்றால் இத்தனை புத்தகங்களை மொழிபெயர்த்திருப்பேனோ என்னவோ?

தெலுங்கிலிருந்து யார் எழுதிய புத்தகங்களை அதிகமாக மொழிபெயர்த்துள்ளீர்கள்?

எண்டமூரி வீரேந்திரநாத் புத்தகத்தை அதிகமாக மொழிபெயர்த்துள்ளேன். 20 நாவல்களுக்கும் மேலாக மொழிபெயர்த்திருக்கிறேன். அதற்கடுத்து யத்தனபூடி சுலோசனா ராணியின் புத்தகங்கள், டி.காமேஸ்வரியின் புத்தகங்கள் என கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.

முறையாகத் தமிழ் படிக்கவில்லை என்கிறீர்கள். அப்படியிருக்க தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமாக இல்லையா?

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. என் அப்பா எனக்குப் பெரிதும் உதவினார். நான் மொழிபெயர்த்து வைத்திருப்பதை எல்லாம் எடுத்து எத்தனை பக்கமானாலும் சரி பார்த்துத் தருவார். அவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும். இரண்டாவதாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். நிறைய ஒற்றுமைகள் இருக்கும். குறிப்பாக தெலுங்குக்கும் கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். தமிழுக்கும் மலையாளத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். எனவே மொழிபெயர்க்கும் போது வாக்கிய அமைப்பில் சிக்கல் எதுவும் வரவில்லை. மேலும் நான் மொழிபெயர்ப்பது நன்றாக இருப்பதால்தானே எல்லாரும் என் மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. அது உற்சாகத்தை அதிகப்படுத்தியது. ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரம் மொழிபெயர்ப்புக்காகச் செலவிடுகிறேன்.

தமிழில் இருந்து தெலுங்குக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்களா?

தமிழில் இருந்து சிறுகதைகளை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறேன். அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, சுஜாதா, அனுராதாரமணன், உஷாசுப்பிரமணியன், ஜெயகாந்தன் ஆகியோரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். யாருடைய கதையை மொழிபெயர்த்தாலும் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் மொழிபெயர்ப்பேன்.

உங்களுடைய பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் புத்தகமாக மட்டும்தான் வந்திருக்கிறதா? இல்லை இதழ்களிலும் வெளிவந்திருக்கிறதா?

என்னுடைய கதைகள் கணையாழி, மஞ்சரி, குங்குமம், மங்கையர் மலர், மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.

மலையாள நாவல்களைப் படித்ததுண்டா? தமிழ், தெலுங்கு, மலையாள இலக்கியங்களில் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

நான் சிறிதுகாலம் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறேன். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நூலகத்தில் நிறைய புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் நீல.பத்மனாபனின் அறிமுகம் அப்போது கிடைத்தது.

மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரின் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். நான் படித்தவரை மலையாள நாவல்கள், கதைகள் ஆழமான வாசிப்புக்கு உகந்தவை. பொழுதுபோக்காக, மேம்போக்காக அவற்றைப் படிக்க முடியாது. தமிழ், தெலுங்கு நாவல்கள், கதைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை என்னால் பார்க்க முடியவில்லை.

தெலுங்கிலிருந்து நீங்கள் சரித்திர நாவல்கள் எதையும் மொழிபெயர்த்துள்ளீர்களா?

இல்லை. நான் மொழிபெயர்த்தவை எல்லாம் சமூக நாவல்கள். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. அவர்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் போன்றவையே நான் மொழிபெயர்த்த கதைகளின் கருப்பொருள்கள்.

தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்தேன் என்கிறீர்கள். தமிழில் வட்டார வழக்கு நாவல்கள், கதைகள் அதிகம் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் எண்ணம் உண்டா?

இல்லை. என்னால் அது முடியாது என்றே தோன்றுகிறது. எந்த மொழியிலிருந்து மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் உள்ள வாசனை மாறாமல், சாயை கெடாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். வட்டாரத் தமிழில் எனக்கு அதிக பரிச்சயம் இல்லாததால் அதை மொழிபெயர்த்தால் நன்றாக வராது.

சமீபத்திய உங்கள் முயற்சி?

சுலோசனா ராணி தெலுங்கில் எழுதிய மீனா என்ற நாவலைத் தமிழில் “முள்பாதை’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். அது ரொம்பவும் ஃபேமஸôன நாவல். சினிமாவாகக் கூட எடுத்தார்கள். இரண்டு பாகங்களாக உள்ள அந்த நாவலை மொழிபெயர்க்க ஒன்பது மாதங்கள் ஆனது.

Posted in Ambalam, Andhra, Andhra Pradesh, AP, Author, Books, Endamoori, Endamoori Virenderanath, Endamuri, Entamoori, Entamuri, Fiction, Gouri, Gowri, Gowri Kirupanandhan, Interview, Kameshwari, Kanaiaazhi, Kirubanandan, Kirupanandhan, Kirupananthan, Krupanandhan, Krupananthan, Kunguma Chimizh, Literature, Malayalam, Mangaiyar Malar, Novels, Story, Sulochana Rani, Tamil, Telugu, Translations, Translator, Veerenderanath, Veerendranath, Virenderanath, Virendranath, Writer | Leave a Comment »