“வந்தேமாதரம்’- வந்தது ஏன்?
தி. இராசகோபாலன்
“வந்தேமாதரம்’ எனும் பாடல் சென்ற யுகத்தின் தவம்; இந்த யுகத்தின் சத்திய வாக்கு. தூக்கிலே தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் நாவில், கடைசியாக நின்ற கீதம். போராளிகளால் துதிக்கவும் மதிக்கவும் பெற்ற வேதம் – வந்தேமாதரம்!
பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட இப்பாடல் அவருடைய பத்திரிகையாகிய “வங்க தரிசனத்தில்‘ 1882ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. “சோனார் பங்களா’ எனத் தாகூரால் வருணிக்கப்பட்ட வங்காள தேசத்தின் மாண்புகளையும் வனப்புகளையும், விசுவரூப தரிசனமாக எடுத்துச் சொல்லியது வந்தேமாதரம் எனும் பாடல்.
26 வரிகளைக் கொண்ட அப்பாடலில் ஆறு வரிகள் தாம் வங்காள மொழியில்; மற்ற 20 வரிகள் சம்ஸ்கிருதத்தில் அமைந்திருந்தது. வந்தேமாதரம் பாடலில் கரைந்து போன மகாகவி பாரதி, “”இதுவே உயிரின் ஒலி!… லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்” என எழுதினார்.
1896ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வங்கக்கவி தாகூர் வந்தேமாதரம் பாடலுக்கு இசையமைத்து, அவரே பாடினார். உடன், ஸ்ரீ அரவிந்தர் அப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வந்தேமாதரம் பாடல் காற்றினிலே வரும் கீதமாய் உலகெங்கும் பரவியது. 1906ஆம் ஆண்டு வந்தேமாதரம் இந்திய நாட்டின் தேசிய கீதமாய் அங்கீகரிக்கப்பட்டது. பங்கிம் சந்திரருக்குச் “சாகித்திய சாம்ராட்’ என்ற பட்டத்தையும் தேடித் தந்தது. சட்டர்ஜி அப் பாடலைத் தம்முடைய “ஆனந்தமடம்’ நாவலில் சந்நியாசிகள் பாடுவதுபோல் அமைத்துவிட்டிருந்ததால், அதற்கு இலக்கிய அந்தஸ்தும் மெருகூட்டியது.
அப் பாடல் வங்கதரிசனம் பத்திரிகையில் பிரசுரமானது, ஒரு தற்செயல் ஆக நேர்ந்தது. பத்திரிகை வெளியாக வேண்டிய நாளில் குறிப்பிட்ட இடம் காலியாக இருந்தது – “மேட்டர்’ இல்லாமையினால்! பங்கிம் சந்திரரை கம்பாசிடர் அணுகி செய்தியைச் சொன்னவுடன், விறுவிறுவென்று கற்பனையில் மூழ்கி, வந்தேமாதரம் பாடலை வடிவெடுத்தார். புரூப் பார்க்கும் நேரத்தில் கவிதையைப் படித்த கம்பாசிடருக்குக் கவிதையில் திருப்தி ஏற்படவில்லை. உடன் அவர், அதனைப் பங்கிம் சந்திரரின் மகளிடம் கொண்டுபோய் காட்டினார். மகளும் அக்கவிதையைப் படித்துவிட்டு, அதில் சாரமில்லை எனக் கூறிவிட்டார். ஆனால், சட்டர்ஜி அந்த விமர்சனங்களை எல்லாம் கேட்டுவிட்டு, ஆத்திரப்படாமல், “”இந்தப் பாடலின் வெற்றி இப்பொழுது உங்களுக்குத் தெரியாது; எதிர்காலம் சொல்லும். ஒரு படைப்பாளனுக்குத்தான் படைப்பின் அருமை தெரியும்” எனச் சொல்லிப் பிரசுரிக்கச் செய்துவிட்டார். “பத்திரிகையில் காலி இடத்தை நிரப்புவதற்காகப் கட்டப்பட்ட அப்பாடல்தான், ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்த நாட்டை விட்டே காலி செய்யப் போகிறது’ என்பதைக் கம்பாசிடரும் மகளும் அறியாமல் போனதில் ஆச்சரியமில்லை. வந்தேமாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்ரீஅரவிந்தர், “”வந்தேமாதரம் பாடல்தான் தேசபக்தியின் மந்திரம் அல்லது சமயம்” என்றார்.
வந்தேமாதரம் பாடலைப் பங்கிம் சந்திரர் எழுதும்போது, அதனைத் தம்முடைய மாநிலத்திற்காகத்தான் எழுதினார்; ஏக இந்தியாவையும் எண்ணிப் பார்த்துப் பாடவில்லை. வங்கத்து மக்கள்தொகையைக் கணக்கிட்டு, “”ஏழுகோடிக் குரல்களின் கோஷமும், ஈரேழு கோடிக் கரங்களில் உயர்த்திய கூரிய வாட்களுமுடைய உன்னைச் சக்தியற்றவள் என்று யார் சொன்னார்?” எனப் பாடிவிட்டார். வங்கத்துக்காரரான ஸ்ரீஅரவிந்தரும் ஏழுகோடி மக்கள் – பதினான்கு கோடி கரங்கள் என்றே மொழிபெயர்த்துவிட்டார். அப் பாடலைத் தமிழில் மொழிபெயர்க்கத் துணிந்த மகாகவி பாரதியும், அப்பொழுதிருந்த இந்தியாவின் மக்கள்தொகையை மனத்தில் வைத்து, “”முப்பதுகோடி வாய் நின்னிசை முழங்கவும்… அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்காற்றவும்” என ஆவேசத்தில் மொழிபெயர்த்து விட்டார். ஆனால் காலப்போக்கில் அந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்பதை நின்று நிதானித்து யோசித்த பாரதி, முப்பது கோடி – அறுபது கோடி என்பதை எல்லாம் மறந்துவிட்டு “”கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும்…. கோடிகோடி புயத்துணை கொற்றமார்” என இரண்டாவது மொழி பெயர்ப்புச் செய்தார். அசலாக எழுதிய பங்கிம் சந்திரருக்கும், அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஸ்ரீஅரவிந்தருக்கும் தோன்றாத காலக்கணக்கும் எண்ணிக்கையும், மகாகவி பாரதிக்குத் தோன்றியது விந்தையல்லவா?
அடிமை இந்தியாவால் தேசியகீதமாக அங்கீகரிக்கப்பட்ட வந்தேமாதரம் பாடல், சுதந்திர இந்தியாவில் தாகூரின் “ஜனகணமன’ பாடலுக்குத் துணைப்பாடலாக மாறியது. இசையமைப்பிற்கும் சச்சரவைத் தவிர்ப்பதற்கும் “ஜனகணமன’ பெரிதும் கைகொடுத்ததால், அதுவே தேசியகீதமாகவும், வந்தேமாதரம் துணைப்பாடலாகவும் பின்பற்றப்பட்டது. “”ஆலயங்கள்தொறும் அணி பெற விளங்கும் தெய்விக வடிவமும் தேவியிங்கு உனதே” என வந்தேமாதரம் பாடலில் இடம்பெற்ற விக்கிரக ஆராதனை, ஏகத்தை வணங்குபவர்களுக்குச் சற்று நெருடலைத் தந்தது; துர்க்கை, லட்சுமி, சரசுவதி எனும் சொற்பிரயோகங்களும் உறுத்தலைத் தந்தன.
ஆனந்தமடத்தில் வாழ்ந்த சந்நியாசிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததோடு, ஒழுங்காக ஆட்சி புரியாத முகம்மதியர்களையும் சேர்த்தே எதிர்த்தார்கள். வந்தேமாதரம் பாடலைத் தெருக்கள்தோறும் பாடிக்கொண்டு வந்த ஆனந்தமடத்துச் சந்நியாசிகளின் முழக்கங்களைக் கேட்டு வெள்ளைக்காரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆத்திரங்கொண்டார்களோ, அவ்வளவுக்கவ்வளவு இசுலாமிய ஆட்சியாளர்களும் அடைந்தனர்.
பங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு மதநல்லிணக்கவாதி என்பதை அன்றைக்குப் பலரும் உணரத் தவறிவிட்டனர். “”பல தெய்வ வழிபாடு உண்மையான இந்துமதத்திற்கு ஓர் இழிவாகும்” என்பதை ஆனந்தமடம் நாவலில் பல இடங்களில் சுட்டிச் செல்கிறார். கிரேக்க இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்ற தேவதைகளைக் கிரேக்கக் கவிஞர்கள் எவ்வாறு ஓர் வீரயுகத்தை உருவாக்குவதற்குத் தங்கள் தங்கள் கவிதைகளில் கையாண்டார்களோ, அதைப்போலத்தான் பங்கிம் சந்திரரும் ஓர் ஒருங்குபட்ட தேசிய உணர்வை நாடு முழுவதும் உருவாக்குவதற்குத் துர்க்கை, சரசுவதி போன்ற பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.
மேலும் சில நிதர்சனங்களை எண்ணிப் பார்த்தால், சுயஉருவங்கள் வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவில் ஆத்திகர்களும் இருக்கிறார்கள்; நாத்திகர்களும் இருக்கிறார்கள். அந்த நாட்டு நாணயங்களில், “இன் காட் வி டிரஸ்டு’ (ஐய் எர்க் ஜ்ங் ற்ழ்ன்ள்ற்) என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும். அதற்காக எந்த நாத்திகரும் அதனைப் புழக்கத்தில் விடக்கூடாது எனச் சொல்வதில்லை. வளைகுடா நாடுகளில் அந்தந்த நாட்டு மன்னர்களின் உருவங்கள், அந்தந்த கரன்சிகளில் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதற்காக உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாதவர்கள், அதனைத் தொட மாட்டேன் எனக் கூறுவதில்லை.
வந்தேமாதரம் பாடல் ஒரு பாடல் மட்டுமன்று; அதுவொரு வரலாறாகும்.
1905இல் வாரணாசியிலே கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கூட்டம் நடக்கின்றது. அக் கூட்டத்திற்கு விடுதைலப் போராட்ட வீரர் ராம்புஜ தத் சவுத்திரியை மணந்திருந்த சரளாதேவியும் (தாகூரின் சகோதரி மகள்) வந்திருந்தார். வந்தேமாதரம் பாடலை வீரத்தோடு பாடக்கூடிய சரளாதேவியை, தடை செய்யப்பட்ட அப் பாடலைப் பாடுமாறு அப் பெருங்கூட்டம் வற்புறுத்தியது. தடை செய்யப்பட்ட பாடலைப் பாடினால், போலீஸôர் புகுந்து கூட்டத்தைக் கலைத்துவிடக் கூடும் என அமைப்பாளர்கள் அஞ்சினர். ஆனால், மக்களின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், பாடலில் சில வரிகளை மட்டும் பாடி விட்டு நிறுத்தி விடுமாறு சரளாதேவிக்கு ஒரு துண்டுச் சீட்டு அனுப்பினார் கோகலே. ஆனால், உணர்ச்சிமயமான கூட்டத்தினரின் முன் தன்னையும் மறந்து முழுப் பாடலையும் பாடிவிட்டார். காவல்துறையினரும் தங்களை மறந்து கேட்டுக் கொண்டிருந்து விட்டனர்.
பாரதி பாடியதுபோல், “”நொந்தே போயினும் வெந்தே மாயினும் நம் தேசத்தவர் உவந்து சொல்வது, வந்தேமாதரம்” அல்லவா?.