Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vairamuthu’ Category

‘Sivaji – The Boss’ celebrations – 175th Day Event Coverage: Rajni speech

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”
கருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, ஜன.12-

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

வெள்ளி விழா

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த்

விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம்

பணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.

அவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கே.பாலசந்தர்

`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.

பாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

கபிலமுனி

நான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

ஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.

`ரோபோ’

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.

`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.

அடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.

சாய் பாபா

சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கடவுளுக்கு பிடிக்கும்

ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.

வேண்டுகோள்

இந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.

அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஷங்கர்

டைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.

நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

ஏவி.எம்.சரவணன்

நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

ஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.

Posted in 175, Actors, Actress, AVM, Baba, Celebrations, Cinema, Coverage, Events, Films, Functions, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KB, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Robo, Robot, Saibaba, Sankar, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Speech, Sreya, Sriya, Tax, The Boss, Vairamuthu | 1 Comment »

Vairamuthu Question & Answer – Short Story

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

உலகம் நம்மைப் புரிந்துகொள்ள வில்லையென்றால் உலகுக்கு நஷ்டமில்லை; உலகத்தை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் நமக்குத்தான் நஷ்டம்.

த. ரோதை, ஓட்டேரி.

நீங்கள் ‘ஆகா’ என்று ரசித்த சிறு கதை எது?

நான் கத்தி தீட்டிக் கொண்டிருந்தபோது வந்துவிட்டான் எவனைக் கொலை செய்யவேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தேனோ அவன் தன் கனத்த ராணுவ உடையைக் கழற்றி ஓர் ஓரமாய் வைத்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தான். அவன் முகத்துக்கு நுரை பூசி விட்டு, தீட்டிவைத்திருந்த கத்தியை எடுத்து அவனுக்குச் சவரம் செய்யத் தொடங்கினேன்.

உள்ளம் கொதித்தது. இவன்தான் என் தாய்கிராமத்தை ஆக்கிரமித்தவன்; என் உறவினர்களையும் நண்பர்களையும் நடுவீதியில் நிறுத்தி நாய்களாய்ச் சுட்டவன். இப்போது வசமாய் மாட்டிக்கொண்டான்.

சரக்… சரக்… சரக்… சரக்…

சவர சுகத்தில் தூங்கத் தொடங்கிவிட்டான்.

கன்னத்தில் பயணப்படும் கத்தி கழுத்துக்கு வரப்போகிறது இப்போது. பலங்கொண்டமட்டும் அழுத்தப்போகிறேன்.

குரல்வளை அறுபடும்; சோப்பு நுரையின் வெள்ளைதாண்டி ரத்தம் வெளியேறும்; செத்தொழிவான்; தப்பித்தோடுவேன்; ராணுவம் துரத்தும்; சுடும்; சுடட்டுமே!

இதோ கழுத்துக்கு வந்துவிட்டது கத்தி.

‘‘அழுத்து!’’ பெருவிரல் துடிக்கிறது.

‘‘நிறுத்து; இது தொழில் தர்மமல்ல;’’ மனச்சாட்சி தடுக்கிறது.

கொல்வதா? வேண்டாமா?

கொலை முயற்சிக்கும் மனச்சாட்சிக்குமான போராட்டம் முடியுமுன்னே சவரம் முடிகிறது.

தாடையைத் தடவிக்கொண்டே மேஜர் எழுகிறான். மீண்டும் தன் ராணுவ உடை தரிக்கிறான். பை துழாவி சவரக் கூலி கொடுத்துக்கொண்டே சொல்கிறான்:

‘‘என்னமோ சொன்னார்களே… நீ என்னைக் கொன்றுவிடுவாய் என்று. இப்போதாவது தெரிந்துகொள். கொலை செய்வது ஒன்றும் அத்தனை சுலபமல்ல.’’

இந்த அமெரிக்கச் சிறுகதையை வாசித்து முடித்ததும் அணிலாடிய கிளையாய் ஆடி அடங்கியது மனசு.

Posted in Answers, Questions, Story, Vairamuthu | Leave a Comment »

Vairamuthu: “Today’s cinema songwriters write with their beer’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

வைரமுத்து சொன்னது சரியா?
– கடுகடுக்கும் கவிஞர்கள்

Kalki 25.03.2007

அது ஒரு விழா மேடை.

‘இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பாட்டிலுடன் கவிதை எழுதுகிறார்கள். எனவே அந்தப் பாடல் அவர்களுக்குச் சொந்தமானதல்ல’

என்கிற ரீதியில் பேசுகிறார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இது மறுநாள் தினசரிகளில் வந்துவிட, அங்கே இங்கே என்று சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன. வைரமுத்து சொன்னது சரியா? இளம் பாடலாசிரியர்களிடம் கேட்டோம்.

விவேகா: ஒட்டுமொத்த கவிஞர்களையும் குறை கூறுவது ஏற்க முடியாத செயல். மது பக்கமே போகாத என்னைப் போன்றவர்களை இப் பேச்சு அவமானப்படுத்துவதாக உள்ளது. யார், யார் மது அருந்துகிறார்கள் என்கிற ஆய்வு தேவையற்றது. இளம் கவிஞர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியிருக்கலாம். இப்படிக் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.

சிநேகன்: சென்ற தலைமுறை கவிஞர்களைவிட, இன்றைய தலைமுறை கவிஞர்கள் திறமையானவர்கள்; உழைக்கத் தெரிந்தவர்கள்; பிழைக்கத் தெரிந்தவர்கள். எல்லாக் கவிஞர்களையும் குற்றம் சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

குகை மா. புகழேந்தி: சரக்குள்ள பாடல்கள் பலவற்றை எழுதுகிற இன்றைய இளங்கவிஞர்களை, சரக்குப் பாட்டில் இருந்தால்தான் எழுதவே ஆரம்பிக்கிறார்கள் என்று வைரமுத்து பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது.

வேறு ஏதோ ஒரு கோபம் அவர் பேச்சு மூலம் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். எந்த இளைய தலைமுறைக் கவிஞனும் அவரை விமர்சிக்க, குற்றஞ்சாட்டத் தயாராக இல்லாதபோது, விஷம் தெளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். புத்திமதி என்றுகூட எங்களால் இதை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், தன் மகன் மீது குறையிருந்தால், அதைத் திருத்த எந்தத் தகப்பனும் மேடை போட்டுச் சொல்ல மாட்டான். வைரமுத்து யாரையும் பாராட்ட மாட்டார். இந்த ஆராவாரத் தூற்றல் எங்களை எரிச்சல் படவே வைக்கிறது!

கபிலன்: எப்போதாவது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது இவற்றால், எந்தக் கவிஞனும் கெட்டுப் போகப் போவதில்லை. தண்ணியடித்தால் என்ன… பாடல்கள் தள்ளாடாமல் இருந்தால் சரி!

யுகபாரதி: அவர் மது அருந்துகிறவர்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். நான் மது அருந்துவதில்லை. எனவே, அந்தச் செய்திக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அறிவுமதி: கவிஞர்களிடையே ஒற்றுமை இருக்கவேண்டும் என விரும்புபவன் நான். அந்த ஒற்றுமை குலைய வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே மேற்கொண்டு பேச விரும்பவில்லை.

ஆண்டாள் பிரியதர்ஷினி: இளைய தலைமுறை மீது அக்கறை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கவிஞரை தனிப்பட்ட முறையில் கனிவாகக் கண்டிக்க வைரமுத்துவுக்கு உரிமை உண்டு. ஆனால், விழா மேடையில் ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தைப் பொதுமையாக்கிப் பேசுவது தேவையில்லாதது. இப்படிப் பொதுவாகப் பேசுவது தொழில்போட்டியில் வரும் பொறாமையுணர்வுப்பேச்சோ என்ற யூகத்துக்கு வழி வகுத்துவிடும்.

எம்.ஜி.கன்னியப்பன்: ‘இன்றைய கவிஞர்கள் குடித்துவிட்டுப் பாடல் எழுதுகிறார்கள், குடிக்காமல் எழுதுகிறார்கள்’ என்பது வைரமுத்துவுக்கு ஒரு பிரச்னையே இல்லை. ‘ஒரு படத்துக்கான ஒட்டுமொத்த பாடல்களையும் எனக்கே கொடுங்கள்’ என்று கேட்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், இன்னொரு கவிஞரும் அப்படிக் கேட்பதை அவரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அந்தக் கோபத்தை நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், ஒட்டுமொத்த இளம் கவிஞர்களைச் சாடினால், போய்ச் சேர வேண்டிய கவிஞனை சேருமே என்பதற்காகத்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.

தனக்கென ஓர் எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, ‘எல்லை தாண்டி வந்தாயென்றால் பார்’ என்று எச்சரிக்கை விடுவது என்பது நாடுகளிடையே வேண்டுமானால் இருக்கலாம், பாடலாசிரியர்களிடையே இருக்கக்கூடாது.

நா.முத்துக்குமார்: இதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

தாமரை: படைப்பாளியாக இருந்தால் மட்டும் என்ன? யாராக இருப்பினும் வாழ்நாளில் தவிர்க்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மது.

இதைப் பற்றி மூத்த தலைமுறைக் கவிஞரான மு.மேத்தா என்ன சொல்கிறார்?

‘‘யாரோ ஒருவரை மனத்தில் வைத்துக் கொண்டு எல்லோரையும் பொத்தாம் பொதுவாக இழிவாகப் பேசுவதென்பது தவறான காரியம். வளர்ந்து வருகிற இளங் கவிஞர்களை வாழ்த்தும் ஸ்தானத்தில், தங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வைரிகளாகக் கருதுகிற மனோபாவம் குரூரமானது!’’

கவிஞர் வைரமுத்துவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர், ‘‘நீங்கள் கேட்பதற்கு, கவிஞர் ஈரோட்டு லயன்ஸ் கிளப்பில் பேசிய அந்த ஆடியோ கேசட்தான் பதில். அதையே பதிலாகப் போட்டுக் கொள்ளுங்கள். திரித்து வெளியிடும் பத்திரிகைகளின் செய்தியினை வைத்துக் கொண்டு கேட்காதீர்கள். இது குறித்து கவிஞர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தருவதற்கு ஒன்றுமில்லை’’ என்றவர், ஈரோட்டு தொலைபேசி எண்ணைத் தந்தார். நமது தொடர்ந்த அழைப்புக்கு ஈரோட்டிலிருந்து பதிலில்லை என்ற விஷயத்தை மறுபடியும் கவிஞரின் உதவியாளரிடம் கூறினோம். ஆனால் அவர் மூலம் ஆடியோ கேசட்டோ, கவிஞரின் மறுப்போ இந்த இதழ் அச்சாகும்வரை கிடைக்கவில்லை.

– சுமதி, அருணாஸ்

Posted in Andal Priyadarshini, Arivumathi, Arivumathy, Audio, beer, Brandy, Cinema, Cocktail, Culture, Drink, Drunkard, Gin, Immoral, Kabilan, Kalki, Kannadasan, Kapilan, Kavinjar, Lyricist, Lyrics, Moral, Morality, music, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Preach, Rum, Scotch, Snegan, Snehan, Song writer, songwriters, Thaamarai, Thamarai, Vairamuthu, Viveka, Whiskey, Whisky, Wine, Yugabharathi, Yugabharathy, Yukabharathi, Yukabharathy | Leave a Comment »

Thirumagan – Malavika, SJ Surya

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

பாடலோடு வாழ்ந்து….

“திருமகன்’ – மாளவிகா, எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ரத்னகுமார் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் “திருமகன்’ படத்தைப் பற்றிக் கேட்டபோது…

“” நான் இயக்கிய “குஷி’ “வாலி’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவா என்னுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். நான் நடித்திருக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை… தேவா இசையமைத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட். இதுவரை அவர் இசையமைத்த படங்களில் இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங்குக்காகத்தான் அதிக நாள்கள் செலவிட்டுள்ளார்.

கிராமிய மணம் கமழும் இந்தக் கதைக்கு வைரமுத்துவின் பாடல் வரிகளும், தேவாவின் இசையும் பெரிய பலம். குறிப்பாக

  • “பொறந்தது’,
  • “இதுக்குத்தானா’,
  • “ஷாக்கடிக்குது’,
  • “திருமகனே’ போன்ற பாடல்களைக் கேட்டு, பார்த்து மட்டும் மகிழாமல் பாடியும், பாடலோடு வாழ்ந்தும் மகிழ்வீர்கள். நான் இதுவரை பணியாற்றிய படங்களில் பாடல்கள், வெஸ்டர்ன் கலந்து அல்ட்ரா மாடர்ன் டைப்பில் இருக்கும்; கிராமியப் பின்னணியிலான “திருமகன்’ பாடல்கள் அல்ட்ரா டைப் ஆசாமிகளையும் அசத்தும்” என்றார் எஸ்.ஜே.சூர்யா.

Posted in Deva, Kushi, Malaviga, Malavika, Rathnakumar, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumagan, Thirumakan, Vaali, Vairamuthu, Vali | Leave a Comment »