மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி, பிப். 24: மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் போலீஸôர் சோதனை நடத்தினர்.
இதை எதிர்த்து ராமோஜிராவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாநில போலீஸôர் மார்கதர்சி நிறுவனத்தில் சோதனை நடத்தியது குறித்து பதிலளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம் முற்றுகிறது: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு
ஹைதராபாத், பிப். 24: அரசின் மீது குற்றஞ்சாட்டி ஆதாரம் இல்லாமல் வெளியிடப்படும் செய்திகளுக்காக பத்திரிகைகள் மீதும் தொலைக்காட்சிகள் மீதும் அவதூறு வழக்கு தொடுக்க ஆந்திர அரசு பிறப்பித்திருந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.
தெலுங்கு தேசம், பாரதீய ஜனதா, தெலங்கானா ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சித் தலைவர்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆந்திர சட்டப் பேரவையில் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சர்ச்சைக்குரிய அந்த ஆணை இம் மாதம் 20-ம் தேதி மாநிலத்தின் தலைமைச் செயலர் ஜே. ஹரிநாராயணரால் வெளியிடப்பட்டது. பத்திரிகைகள் மீது செய்தி, மக்கள் தொடர்புத் துறை ஆணையர்கள் வழக்கு தொடுப்பதற்கான அதிகாரத்தை அந்த ஆணை வழங்கியிருந்தது. அத்துடன் இத்தகைய வழக்குகளுக்காகவே சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.
இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது மத்திய அரசால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பத்திரிகைகளின் குரலை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இந்த ஆணை நினைவுபடுத்துகிறது என்று எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ராமோஜி ராவ் தலைமையிலான ஈ நாடு பத்திரிகையும் ஈ டி.வி.யும் ஆந்திர அரசுக்கு எதிராக தினமும் ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசின் ஊழல்களையும், குறைகளையும் அம்பலப்படுத்துகின்றன. இது ஆளும்கட்சிக்கு பெருத்த சங்கடத்தை அரசியல்ரீதியாக ஏற்படுத்தி வருகிறது. இந் நிலையில் ராமோஜி ராவுக்குத் சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் விவகாரங்களை மாநில அரசு கிளற ஆரம்பித்தது. அதன் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதை அடக்குமுறை நடவடிக்கையாகவே எல்லா எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் கருதுகின்றன.
இப்போது இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றிருக்கிறது. நிலைமை மோசமாகிவருவதால், சர்ச்சைக்குரிய ஆணையைத் திரும்பப் பெற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. அதை முதல்வரே பேரவையில் அறிவித்தார். ஆனால் அதற்கு முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் எந்த நடவடிக்கையையும் நடத்தவிடாமல் ரகளை செய்தனர். அரசை குறைகூறினர். இந்த விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் ராஜசேகர ரெட்டி பதவி விலக வேண்டும் என்று கோரினர்.
கேள்வி நேரம் நடைபெறவில்லை, அடுத்த நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டபடி எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந் நிலையில் முதல்வர் ராஜசேகர ரெட்டியே எழுந்து சர்ச்சைக்குரிய ஆணை, தனக்குத் தெரியாமலேயே வெளியிடப்பட்டது என்றும் அது குறித்து விசாரணை நடத்துவதாகவும் பத்திரிகைகளை தங்களுடைய அரசு மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
அதை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகே இந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அப்படியே முதல்வர் கூறுவது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், தனக்கே தெரியாமல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதற்காக, தார்மிக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.