எளியவர் விடுதலைக்கான தாகம்
ஜோ அருண்
ஓர் ஆட்சியாளர் பாமரரைக் கண்டு கண்ணீர் விடுகிற கனிந்த இதயமும், சமூகத்தின் பொருள்வளத்தைக் கூட்டுகிற அறிவுநுட்பம் நிறைந்த கூர்மையான மூளையும் கொண்டிருக்க வேண்டும்.
கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு புரட்சியாளர். காடுகளில் ஒளிந்திருந்து ஓர் ஆயுதம் தாங்கிய பேரியக்கத்தை வழி நடத்தியவர். இருந்தும் வெறுமனே புரட்சி என்று பொருளாதாரச் சிந்தனையில்லாமல் இருந்துவிடவில்லை. துப்பாக்கி ஏந்திய புரட்சியாளர்கள் கூடாரத்தில் தொழில் முனைவோருடன் பேச்சு நடத்தி கியூபா நாட்டின் தொழில் வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொண்டார். கியூபாவில் ஒரு தன்னிறைவை உருவாக்கியுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எது வளர்ச்சி தருமோ அதை மனத்தில் வைத்து தனது ஆயுதப்புரட்சி என்கிற இறுகுதலை ஒருவகையான இளகுதலுக்குட்படுத்தியதால் உண்டான வளர்ச்சி அது. எளியவர்களது விடுதலைக்கான தாகமும், பொருளாதார வளர்ச்சிக்கான ஈடுபாடும் சமவேகத்தில் கொண்டு இயங்கும் அரசு, ஆரோக்கியமான அரசு.
இன்று நாம் பின்பற்றுகிற மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையும் அதுதான். மக்களாட்சி என்கிற ஆட்சிமுறையின் மூலம் கிரேக்கத்திலிருந்து வருகிறது. மூன்றாம் நூற்றாண்டுகளில் கிரேக்க அரசியல் சமூகம் ஒரு பெரும் குழப்பத்தில் சிக்கி நின்றது. பணக்காரர்கள் “ஜிம்னாசியம்’ கட்டிக் கலைகள் வளர்த்தனர். ஆனால் கஞ்சிக்குத் தவித்து கடைநிலையில் ஒரு கணிசமான மக்கள் கூட்டம் வாடிக் கிடந்தது. நாளாவட்டத்தில் தொழிலாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இந்த அரசியல் சிக்கலைத் தீர்த்து வைக்க சொலோன் என்ற தத்துவியலாரை நடுவராக நியமித்தனர். அவர் எந்தச் சார்புமின்றித் தீர்ப்புச் சொல்லி, ஒரு முறையான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நிலக்கிழார்களுக்கு சொத்துகளை வைத்துக்கொண்டு நிர்வகிக்க அனுமதி தந்து, ஆனால் அவர்கள் அதிகமான வரி கட்ட வேண்டும் என்ற ஒழுங்கை முன்வைத்தார். அதேநேரத்தில் அரசைத் தேர்ந்தெடுக்கிற பொறுப்பின் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தார்.
செல்வந்தர்கள் தங்கள் சொத்தை வளர்த்துக் கொள்கிறபோதே ஏழைகளை அவர்களது வறுமை நிலையிலிருந்து உயர்த்த ஏதாவது ஒரு சமூகப்பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சொலோன் குறிப்பாய் இருந்தார். பணக்காரர்களுக்கு இந்தச் சமூகப்பொறுப்பு இருக்கிறபோது ஒரு நாடு சமநிலை பெறும் என்பதை மனப்பூர்வமாக நம்பினார் அவர். வெறுமனே பாமரர்கள் கத்தியெடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஒரு நாட்டில் சமத்துவம் வந்துவிடாது. தங்களை நிர்வகித்து வழிநடத்துகிற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிற அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறபோது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுப்பார்கள் என்று நம்பினார். செல்வந்தர்களின் பணம் பெருகிடும் சூழலும், பாமரர்களின் அரசு அமைக்கிற அரசியல் பலம் வலுப்பெற்று இருக்கிற நிலையும் உள்ள ஒரு நடுநிலையை உருவாக்கிக் கொள்வது மக்களாட்சியின் அடிப்படை என்று அடிக்கோடிட்டுக் காண்பித்தார். பணக்காரர்களுக்கு ஏழை மக்களின் முன்னேற்றம் பற்றிய அக்கறையும், பாமரர்களுக்கு அரசு அதிகாரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பும் உள்ள சூழல் ஒரு வளமான அரசியலமைப்பு என்று சொலோன் சிந்தித்தார்.
இந்தத் தத்துவம் இன்று செயலாக்கம் பெற வேண்டும். ஓர் அரசு தனது இதயத்தை பாமரர்களுக்காகத் துடிக்க விட வேண்டும். அதேநேரத்தில் அறிவையும், அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி தொழில்வளத்தைப் பெருக்கி பொருளாதாரத்தில் பலம் பெற வேண்டும். அந்தப் பொருளாதாரப் பலத்தைக் கொண்டு வறுமை என்கிற பலவீனத்தைக் களைய வேண்டும். மாடி வீடுகளை மட்டும் வளர விட்டுவிட்டு குடிசைகளைக் கண்டுகொள்ளாத அரசியல் நீதியற்ற அரசியல். தொழில்வளப்படுத்துதல் என்பது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் தடையாக அமைந்துவிடக் கூடாது. அதேநேரத்தில் “அன்னிய முதலீடே இருக்கக் கூடாது, தொழிலதிபர்களுக்கு எதிராகப் போர் நடத்திக் கொண்டே இருப்பதுதான் மக்கள் மைய அரசு’ என்றால் அது ஒரு முதிர்ச்சியற்ற சிந்தனை. இதனால் நாம் வளர முடியாது. ஏழ்மையை மகிமைப்படுத்தி (ஞ்ப்ர்ழ்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ர்ச் ல்ர்ஸ்ங்ழ்ற்ஹ்) ஏழைகளை ஏழைகளாகவே வைத்து, மேடைப்பேச்சிலும் தத்துவப் புலம்பலிலும் நாட்டைச் சிறைப்படுத்த வேண்டி வரும். தொழிலைப் பெருக்குவது, ஏழ்மையை ஒழிப்பது என்ற இரண்டு அடிப்படைச் செயல்பாட்டுத் தளங்களை ஒவ்வோர் அரசும் கொண்டிருக்க வேண்டும்.
மக்களின் துயர் கண்டு கசிந்துருகி நிறைய இலவசமாகப் பொருளையும் பதவியில் ஒதுக்கீட்டையும் கொடுத்து மக்களிடம் புகழ் பெறுவது என்பது ஒரு குறுகிய சிந்தனை. இன்றைக்கு வேண்டுமானால் அது உதவலாம். ஆனால் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்து, தாற்காலிகச் செயல்பாடுகளை விடுத்து நிறைவான நீண்டகாலச் செயல்பாடுகளில் இறங்க வேண்டும். மக்களாட்சியில் ஒரு சாபக்கேடு என்னவென்றால் தேர்தலின்போது குடிமக்களைக் கண்டு கொள்கிற அரசியல், ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு விலகிப் போய் விடுகிறது. வாக்குகள் என்கிற முட்டை மட்டும் போடும் கோழிகளாகக் குடிமக்களை ஆக்கி விடுகிற அரசியல் எஞ்சி நிற்கிறது. முறையான அரசு என்பது ஏழை எளிய மக்களை இதயத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு, தொழிலதிபர்களையும், பணக்காரர்களையும் முடுக்கிவிட்டு ஏழ்மை நிலை அகற்றப் பாடுபட வைக்க வேண்டும்.
இது அரசு மட்டும் செய்கிற செயலாக இருந்துவிடக் கூடாது. அரசாங்கத்தைத் தேர்தல் நேரத்தில் பாமரர்கள் உருவாக்குகிறார்கள் என்றால் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அரசாங்கத்தை முடுக்கிவிடுவது தொழில் நிறுவனங்களும் (இர்ழ்ல்ர்ழ்ஹற்ங்ள்) தொழில் அதிபர்களும்! அரசுக்கு எப்படி ஏழைகள் மீது அக்கறையும் கரிசனையும் இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு தொழில் நிறுவனங்களுக்கும் அவற்றின் அதிபர்களுக்கும் இருக்க வேண்டும்.
ஒரு தொழில் நிறுவனம் தொடங்க அரசு அனுமதி கொடுக்கிறபோது அந்த நிறுவனம் இயங்குகிற பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அந்த நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அரசு அனுமதியும் அங்கீகாரமும் தரக்கூடாது. அனுமதி வாங்கித் தொடங்கிய பிறகு உறுதியளித்ததுபோல் வறுமை ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லையென்றால் அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றிட வேண்டும். கணினி நிறுவனங்கள் அதிகமாக உருவாகிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் லாபத்தில் பத்து சதவீதத்தையாவது அருகில் உள்ள வறியவர்களின் குடும்பச்சூழல் முன்னேறுவதற்குப் பயன்படுத்த வேண்டும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கும் அவர்களது வேலைவாய்ப்புக்கும் உதவ வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குடிசைப்பகுதியையோ, ஒரு கிராமத்தையோ தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நிகர லாபத்தின் கணிசமான பகுதியை ஏழைகளை, அவர்களது வறுமை நிலையிலிருந்து மேலே உயர்த்தப் பயன்படுத்த வேண்டும். கோடிக்கோடியாக லாபம் ஈட்டும் கணினி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ள சென்னையில் சாக்கடை நாற்றத்தில் குடிசைகள் இருப்பது அசிங்கமாகத் தெரியவில்லையா? இதேபோன்று இடஒதுக்கீட்டில் படித்த ஒரு பொறியாளர், ஒரு மருத்துவர் வேலையில் அமர்ந்த பிறகு குறைந்தபட்சம் மூன்று மாணவர்களை அவர் உயர்ந்திருக்கிற நிலைக்குக் கொண்டு வருகிற பொறுப்பு இருக்கிறது.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி இதனால் குறையும். ஒருவர் வளர்கிறபோதே தன்னோடு பத்துப்பேரையும் சேர்த்துக் கொண்டு வளர்வது மனிதத்தின் அடிப்படைத் தர்மம். ஒரு நாடு வளர்கிறதென்றால் எத்தனை ஏழைக்குடும்பங்கள் வசதி பெற்று இருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான் முறையான வளர்ச்சியாகும். ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளியை அழித்திடும் அரசே உண்மையான அரசு.
———————————————————————————————
அமெரிக்கா கொடுங்கோல் நாடு: காஸ்ட்ரோ
ஹவானா, ஜூலை 10: அமெரிக்காவை ஒரு எதேச்சதிகார, கொடுங்கோல் நாடு என வர்ணித்துள்ளார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.
அவர் எழுதி ஞாயிற்றுக்கிழமை வெளியான கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1959-ல் இருந்து தனக்கு எதிராக நடந்த கொலை முயற்சிகளை இக் கட்டுரையில் அவர் விளக்கியுள்ளார். 1776-ல் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரத்துக்கு தலை வணங்குவதாகக் கூறியிருக்கும் அவர், அதுவே அமெரிக்கா உலகின் எதேச்சதிகார நாடாக மாறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது எனக் குறை கூறியிருக்கிறார்.
சிஐஏ ஆவணங்களை மேற்கோள்காட்டியுள்ள அவர், கியூபாவின் அரசு அதிகாரி ஒருவரைக் கொண்டு தனக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அமெரிக்காவின் செயலை வஞ்சகம், ஒழுக்கக் கேடான செயல் என்று கண்டித்துள்ளார்.
1959-ல் கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி செய்தபோது, காடுகளிலும், மலைகளிலும் மறைந்திருந்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதிர்ஷ்டமும், அனைத்து விஷயங்களிலும் கவனமாகச் செயல்படும் குணமுமே தன்னை கொலை முயற்சிகளில் இருந்தும், ராணுவத்திடம் பிடிபடுவதில் இருந்தும் தப்பிக்க உதவின என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு எண்ணிலடங்கா கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்ததாக அவர் எழுதியுள்ளார்.
எனினும் இந்த விவரங்களை, கடந்த மாதம் வெளியான சிஐஏ ஆவணங்களில் அடிப்படையில் கூறுகிறாரா அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.