பதவி போன பிறகும் அரசு வீட்டை காலி செய்ய மறுக்கும் “மாஜி’க்கள்: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
புதுதில்லி, டிச. 15: முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு ஒதுக்கப்பட்டவற்றில் 298 வீடுகள் இன்னும் காலி செய்யப்படாமல் இருக்கின்றன.
இறப்பு அல்லது பதவிக்காலம் முடிந்த பிறகு அரசு வீட்டில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்போர் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. இதில்
- முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்,
- அமைச்சராக இருந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கே. சந்திர சேகர் ராவ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சுனில் தத் இறந்த பிறகும் அவருக்கு வழங்கப்பட்ட வீடு சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திர சேகர் ராவ் பதவியில் இருந்து விலகிய பிறகும் அவரது அரசு வீடு காலி செய்யப்படவில்லை.
இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் அஜய் மகான் பேசியது:
சட்ட விரோதமாக அரசு வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து இதுவரை 9 புகார்கள் அரசுக்கு வந்திருக்கின்றன. இவ்வீடுகளை விரைவில் காலி செய்யுமாறு அவற்றில் குடியிருப்போரைக் கேட்டுள்ளோம். சட்டவிரோதமாக குடியிருப்போரை வெளியேற்றும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் வழியிருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க முடியவில்லை என்றார் அமைச்சர்.