பார்ப்பனர்களின் புதிய குருஷேத்திரம் – சமா.இளவசரன்
பார்ப்பனர்களின் குருஷேத்திரம் என்றால் சந்தேகமின்றி அது ‘தி ஹிண்டு’ பேப்பரின் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ பகுதிதான் என்று சொல்லலாம். யாரைப் பற்றியாவது எழுதவேண்டுமா? நுழைவுத் தேர்வா? இட ஒதுக்கீடா? அர்ச்சகர் பிரச்சினையா?
திருவல்லிக்கேணியாகவிருந்தாலும், மயிலாப்பூராக இருந்தாலும் ‘அய் வில் ரைட் டு ஹிண்டு’ என்று மவுண்ட்ரோடு ‘மகாவிஷ்ணு’விடம் தான் முறையிடுவார்கள். வாள், வேல், கேடயங்களோடு தற்காப்புப்போரோ, தாக்குதல் போரோ ‘ஹிண்டு’ தான் மடிசார்களும், பூணூல்களும் மற்றவரோடு மோதும் போர்க்களம். படித்த வர்க்கத்திடம் நாங்கள் பத்தரை மாற்றுத் தங்கங்கள் என்று பறைசாற்றப் பயன்படுத்தும் பிரச்சாரக் களமும் அதுவே.
மேல்தட்டிலிருக்கும் பார்ப்பனரல்லாத மக்களின் பார்வையில் படுவதற்கும், தங்களின் கருத்தே ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்து என்கிற ரீதியில் உலகமெங்கும் செய்தி பரப்பவும், இந்தியாவுக்குள்ளேயே பெரும் போராட்டம் வெடித்திருப்பத்தைப் போல படங்காட்டவும், தங்களுக்கெதிரான போராட்டங்களை தமத்தூண்டு அளவுக்குக்கூட காட்டாமல் மறைக்கவும் எப்போதுமே மீடியா எனப்படும் ஊடகத்துறையை தங்கள் கைவசம் வைத்திருப்பார்கள். நவீன ஊடகங்கள் என்னென்ன வந்தாலும் அதில் உடனே புகுந்து கொண்டு பிரச்சாரம் செய்வதில் மத நிறுவனங்களுக்கும், பாலியல் வியாபாரிகளுக்கும் சற்றும் சளைத்ததல்ல பார்ப்பனக் கூடாரம்.
சேற்றை வாரி இறைக்கவும், சந்தனம் அள்ளிப் பூசவும் எப்போதும் எதையும் பயன்படுத்திக் கொள்வார்கள். அக்ரஹாரத்தில் கையெழுத்துப் போடத் தெரியாத ஒரு மொட்டைப் பாப்பாத்திகூட இருக்கமாட்டார் என்று சொல்வார்கள். கையில் ‘இங்கிலீஷ் பேப்பரை’ வைத்துக் கொண்டு தன் பேரப் பிள்ளைகளுக்கு ‘பாந்தமாக’ச் சொல்லித் தந்தார்கள். இப்போது அந்த பேரப் பிள்ளைகளெல்லாம் ‘மவுசும்’ (Mouse) கையுமாக அலைகிறார்கள் இணையத்தில். நமது பார்ப்பனரல்லாத இளசுகளும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்தான். இணையம் வளர்ந்த வரலாறு தெரிந்த அளவுக்கு அவர்களுக்கு, தங்களிடம் படிப்பில் வளர்ந்த வரலாறு தெரியாது.
தாங்கள் படித்த அளவுக்கு தன் தாத்தனும், பாட்டியும் ஏன் படிக்கவில்லை என்று எண்ணிப் பார்ப்பவர்கள் 5ரூ கூட இருக்காது. அப்படி யோசிப்பவர்களும் கூட வெள்ளைக்காரன்தான் அதற்குக் காரணம் என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.
அதனால் அவர்கள், நாட்டை உயர்த்தும் நல்வழிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பொருட்டு அய்ஸ்வர்யாராய் – அபிசேக்பச்சன் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் 10 புகைப்படங்களை தங்கள் நண்பர் வட்டாரத்துக்கு அனுப்பிவிட்டு ஆத்ம சாந்தி அடைகின்றனர்.
அதற்கு மேலும் நாட்டுப்பற்றுக் கொண்ட இன்னும் சிலர் அப்துல் கலாமின் பொன்மொழித் தொகுப்புகளை அனுப்பிவைத்து இந்தியர்களே நம் கடமை என்ன? என்ற கேள்வியோடு முடித்துக் கொண்டு விடுவார்கள்.
இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவன மின்னஞ்சல் முகவரியிலிருந்து
‘ஹமாம் சோப்புக்கட்டி – 12 ரூபாய்;
பியர்ஸ் சோப்பு – 18 ரூபாய்;
வெஸ்பா ஜட்டி – 25 ரூபாய்;
க்ரோகடைல் ஜட்டி – 75 ரூபாய்
(இப்படி ஒரு மளிகைக் கடை பட்டியல் போட்டு) இதில் பியர்ஸ், க்ரோக்கடைல்… போன்றவை வெளிநாட்டுப் பொருட்கள், ஹமாம், வெஸ்பா போன்றவை இந்தியப் பொருட்கள். ஆகவே நீங்கள் ஏன் இந்தியப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது? என்ற கேள்வியோடு பின் குறிப்பாக இன்னொன்றையும் அனுப்புகின்றனர்.
‘இப்படிச் சொல்வதால் நாங்கள் ஏதோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரிகள் என்று கருதவேண்டாம். நம் இந்தியப் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்கு இணையற்றது. நமது நிறுவனங்களும் கொஞ்சம் பிழைக்கட்டுமே என்றுதான் பரிந்துரைக்கிறோம்’
என்கிறது பின்குறிப்பு. (பி.எம்.டபிள்யூ காரில் ஏறிச் சென்றபடி வாஜ்பேயி சுதேசி பேசியதைப்போல).
ஆனால், அக்ரஹாரம் இதிலெல்லாம் எச்சரிக்கையாக இருக்கிறது. தங்களின் புதிய குருஷேத்திரத்தை அது தெரிந்து வைத்திருக்கிறது. இணையத்திலேயே இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு அணிக்கு ஆதரவு தேடுகிறது. அர்ஜுன் சிங்கை பதவி வெறியராக சித்திரிக்கிறது. அவுட்லுக், பிரண்ட்லைன், ஹிண்டு என்று எந்த இதழாக இருந்தாலும், இட ஒதுக்கீடு தொடர்பான கட்டுரைகளுக்கு உடனுக்குடன் நூற்றுக்கணக்கான கடிதங்கள் மின்னஞ்சலில் குவிகின்றன.
‘சாட்டிங்’ (Chating) என்ற பெயரில் கடலை போடுவதற்கும், கிசுகிசு பேசுவதற்கும் நம்மவர்கள் பயன்படுத்தும் அரட்டை அறைகளை (Chatting Room) இத்தகைய விவாதங்களுக்கும் பயன்படுத்துகிறது இக்கூட்டம்.
காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட சமயத்தில் ஏற்பட்ட விவாதங்கள் இணைய விவாத மேடைகளில் இன்றும் கிடைக்கின்றன. அவற்றில் சங்கராச்சாரியாரைக் கைது செய்த பார்ப்பன முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி யாரும் மூச்சுவிடவில்லை.
பார்ப்பனர்கள் தங்கள் எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். பார்ப்பன விரல்கள் விசைப்பலகை (Keyboard)யில் அடித்து ஓய்ந்ததெல்லாம் பெரியாரின் பெயர்தான். எந்த அளவுக்குத் தங்களால் வசைமாரி பொழிய முடியுமோ அந்தளவுக்கு பொழிந்தார்கள்.
இப்போதைய இட ஒதுக்கீடு பிரச்சினையிலும், தங்கள் பிரச்சாரப் பணியை திறம்பட செய்திருக்கிறார்கள்.
இன்று இணையத்தில் இலவச வலைதளங்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு “Blogspot” என்ற பெயரில் கிடைக்கிறது. கிடைக்கிற ‘Blog’களிலெல்லாம் தங்கள் கருத்துகளை, எதிர்ப்புகளைக் கொட்டி வைத்திருக்கிறார்கள். ‘Blog Spot’களைப் பயன்படுத்தும் நம்மவர்கள் ஆங்காங்கே பிரிந்து கிடக்கிறார்கள். தங்கள் நட்பு வட்டாரங்களுக்குக்கூட பரிந்துரைப்பது குறைவு.
திட்டமிட்டு பார்ப்பனர்கள் செய்யும் இருட்டடிப்புகளைத் தடுக்கவும், நமக்கிடையேயான கருத்துப் பரிமாற்றம் மூலம் தெளிவடையவும், இணையத்தைப் பயன்படுத்தும் பார்ப்பனரல்லாதாரின் கூட்டணி அவசியமாகும். இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெற வேண்டும். சிண்டிகேட் அமைக்கும் ‘சிண்டு’க் கூட்டத்துக்கு மாற்றாக ஒரு இணையக் கூட்டமைப்பு அவசியமாகும். ஆங்காங்கே கேட்கும் சிறு சிறு குரல்கள் ஒன்று சேர்ந்தால்தான் உரக்கக் கேட்கும். அதற்கான தெளிவை உருவாக்க பொதுவான பெயர்களில் பார்ப்பனர்கள் செய்யும் பணியைப் போல நாமும் தொடங்க வேண்டும். அதற்கான சிந்தனை பல மட்டங்களிலும் உருவாகி வருகிறது. பார்ப்பனர்களின் இந்தப் புதிய குருஷேத்திரத்துக்கு பதிலடி தர ‘பாடி வீடு’ தயாராக வேண்டும்.
– சமா.இளவசரன்