கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது: இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிவிப்பு
சென்னை, செப். 27: முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பைப் பாராட்டி ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய உமறுப் புலவர் சிறப்பு விருதை இஸ்லாமிய இலக்கியக் கழகம் வழங்குகிறது.
இதுதொடர்பாக அக்கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம். இதயத்துல்லா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதன் தலைவர் என்.ஏ.அமீர் அலி தலைமையில் நடைபெற்றது. நீதிபதி சி.மு. அப்துல் வகாப், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாதிக், கவிஞர் அப்துல் ரகுமான், மாநில அரசின் தமிழ் அறிவியல் மன்றத் தலைவர் மணவை முஸ்தபா, தோப்பில் முகமது மீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு டிசம்பரில் சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அனைத்துலக 7-வது இலக்கிய மாநாடு நடத்தப்படும். மாநாட்டில் பங்கேற்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அழைக்கப்படுவார். மாநாட்டில் கருணாநிதிக்கு உமறுப் புலவர் விருது வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- இஸ்லாமிய இலக்கிய பண்பாட்டு ஆய்வு மையம், நூலகம் அமைக்க சென்னையில் அரசு நிலம் தர வேண்டும்.
- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் ஆண்டுதோறும் இஸ்லாமியப் பண்பாட்டுச் சொற்பொழிவை நிகழ்த்த ரூ.1 லட்சத்தில் அறக்கட்டளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.