ம.பி. பாரதீய ஜனதாவில் அதிருப்தி பரவுகிறது
போபால், ஜூன் 27: “”பிஜ்லி, சடக், பானி” (பி.எஸ்.பி.) என்ற 3 பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சிக்குள் இப்போது அதிருப்தி புகைந்து கொண்டிருக்கிறது.
மின்சாரம், சாலை, குடிநீர் ஆகிய இம் மூன்றையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்க பாரதீய ஜனதா அரசால் முடியவில்லை. சட்டம், ஒழுங்கு நிலைமையிலும் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை. விலைவாசியும் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சித்தி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், சிவபுரி சட்டப் பேரவை இடைத் தேர்தலிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.
கட்சியில் விசுவாசமான தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை, மாற்றுக் கட்சிகளிலிருந்து வருகிறவர்களும், பணம்-செல்வாக்கு உள்ளவர்களும்தான் கவனிக்கப்படுகின்றனர் என்ற அதிருப்தி கட்சித் தொண்டர்களிடம் உள்ளது. அதை அவர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். எனவே தேர்தல் வேலைகளில் அவர்கள் உற்சாகம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் தொண்டர்களை மதிப்பதே இல்லை.
உமா பாரதி, பாபுலால் கெüர் ஆகியோருக்குப் பிறகு சிவராஜ் சிங் செüஹான் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். உமா பாரதியின் கட்சிக்கு அமோக செல்வாக்கு வந்துவிடவில்லை என்றாலும் தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் வாக்குகளைப் பிரித்து அதைத் தோல்வி அடையச் செய்யும் செல்வாக்கு அதற்கு இருப்பதையே சித்தி, சிவபுரி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
புதிய அணி சேர்ப்பு:
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியால் மத்தியப் பிரதேசத்திலும் புதிய அணி சேர்ப்பு நடக்கிறது. முற்பட்ட வகுப்பினர் தலித்துகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்துச் சிந்தித்து வருகின்றனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டம், ஒழுங்கை அமல் செய்வதிலிருந்து தவறியது, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தத் தவறியது என்று பாரதீய ஜனதா அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த அரசு பதவிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் வேரூன்றி வருகிறது. அடுத்த தேர்தலில் மாற்றுக் கட்சி என்ன என்று பார்க்கும் தேடலில் மக்கள் மனத்தைச் செலுத்தி வருகின்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸýக்குள் இப்போது ஒற்றுமை இல்லை. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பான தலைவர் அங்கு இல்லை.
பாரதீய ஜனதாவின் மாநிலத் தலைவர் நரேந்திர சிங் தோமார், முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் இடைத் தேர்தலில் சித்தி, சிவபுரி தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள தோல்வி தலைமையைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமையைச் சீர்திருத்தும் ஆற்றல் முதல்வருக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை.