கவிஞருக்கு வசன “கிரீடம்’!
அஜீத் நடிக்கும் “கிரீடம்’ படத்தின் மூலம் வசனகர்த்தா ஆகியுள்ளார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இயக்குநர் ஆகும் ஆசையில் பாலுமகேந்திராவிடம் நான்கு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவர். இவருடைய பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவே பாடலாசிரியராக நிலைத்துவிட்டார். சமீபத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற முத்துக்குமார், கடந்த வருடம் அதிக பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
அவர் பணியாற்றிய 34 படங்களில் 96 பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் 14 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். தற்போது
- “சிவாஜி’,
- “போக்கிரி’,
- “பீமா’,
- “தீபாவளி’,
- “தமிழ் எம்.ஏ.’ உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். இவற்றுள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்த வருடம் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்போகும் ஒரு முக்கியப் பாடலும் அடக்கம். அது “சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடல்!