6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்
சென்னை, பிப். 4: இணையதளத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வகையில் புதிய இணையதளத்தை ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்த விவரம்:
ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தின் www.filmsntv.com என்ற புதிய இணையதளத்தை திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் சுமார் 6,000 திரைப்படங்களைக் காணமுடியும்.
இதுவரை திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் கண்டுவந்த திரைப்படங்களை இனி இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டரில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய படங்களைக் காணலாம்.
இந்த இணையதள வசதியைப் பெற பணம் கட்டி உறுப்பினராக வேண்டும். ஒரு படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45. இதில் பழைய மற்றும் புதிய படங்கள், புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்கள், இந்த இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் காணலாம்.
இந்த இணையதள தொடக்க விழாவில் நடிகைகள் கஸ்தூரி, சங்கவி, பூர்ணிமா பாக்யராஜ், சரண்யா, நடிகர் பாண்டியராஜன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.