Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Trivandrum’ Category

Coimbatore blasts: Top accused Madani acquitted; Al-Umma founder S A Basha, 72 others convicted

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2007

கோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்? தனிக்கோர்ட்டு அறிவிப்பு

கோவை, ஆக. 1-

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.

இந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.

இதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.

ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

பிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

—————————————————————————————————–
மதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு

புதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா? கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.

பாஜக அதிருப்தி

கேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.

“பிரார்த்தனை பலித்துவிட்டது’

கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.

மதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
———————————————————————————————————————–

5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்

கோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

இந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
———————————————————————————————————————–
மதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.

இதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.

வெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

———————————————————————————————————————–

சிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை?

கோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.

இவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.

இவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

இந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.

எனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அவர்கள் விவரம்:

சம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.

யூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.

கே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.

———————————————————————————————————————–

பலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்

கோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.

தனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

காலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.

கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.

காலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

காலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.

———————————————————————————————————————–

69 பேருக்கு கடும் தண்டனை?

கோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.

எனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:

எஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.

இவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

———————————————————————————————————————–

“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’

கோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.

இதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதா? என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.

———————————————————————————————————————–

பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.

மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:

முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.

நெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.

குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.

———————————————————————————————————————–

கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி

கோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:

கோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.

———————————————————————————————————————–

மதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்

கோவை, ஆக.2-
வழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.

தனிகோர்ட்டு தீர்ப்பு

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.

இது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-

நிம்மதி அளிக்கிறது

எந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.

அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.

சிகிச்சைக்கு ஏற்பாடு

அவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.
———————————————————————————————————————–

ஜாமீனா? விடுதலையா?

கோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.

தீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.

சிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.

பல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா? என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.

இந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.

மேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.

ஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.

இதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.

இரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.

மேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.

கிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.
———————————————————————————————————————–

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்

ஒலி

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.

பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்

Posted in 1997, 1998, Abdul Nasser Madani, acquit, Advani, Al-Umma, AlUmma, Ansari, Arms, Assassination, Baasha, Baatcha, Baatchaa, Basha, Bharatiya Janata Party, BJP, Blast, Blasts, Bombs, Campaign, case, CBI, chairman, Coimbatore, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Congress, consipiracy, constable, Convict, conviction, Courts, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Extremism, Extremists, founder, Guilty, Hindu, Hinduism, Hindutva, Investigation, ISI, Islam, Judge, Justice, Kerala, Kovai, L K Advani, Law, Leader, LK Advani, Madaani, Madani, Madhani, Malayalam, minority, Mogammad, Mohammad, Mohammed, Mohammed Ansari, Muhammad, Murder, Muslim, Order, PDP, People's Democratic Party, policeman, RAW, Religion, retaliation, RSS, SA Basha, Selvaraj, Serial, SIT, Terrorism, Terrorists, THIRUVANANTHAPURAM, Trivandrum, Weapons | Leave a Comment »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

101 farmers commits suicide in Kerala in last 10 months

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை

திருவனந்தபுரம், மார்ச் 28: கடந்த 10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இத்தகவலை கேரள வேளாண்துறை அமைச்சர் முல்லைக்கரை ரத்னாகரன் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்தப் பட்டியலில் வயநாடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 46 விவசாயிகளும், கோழிக்கோட்டில் 11 விவசாயிகளும், திருவனந்தபுரத்தில் 10 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரத்னாகரன் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட 549 விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக ரத்னாகரன் கூறியுள்ளார்.

==============================================================
சிறு வியாபாரிகளைச் சீரழிக்கும் பன்னாட்டு மூலதனம்

இரா. செழியன்

இந்தியாவின் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் வகையில், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் வெளிநாட்டு பெரும் மூலதன நிறுவனங்கள் படையெடுத்துவர ஆரம்பித்துள்ளன.

இந்தியாவில் உள்ள 1 கோடி 20 லட்சம் வியாபாரிகளில் பெரிய அளவில் வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்களின் அளவு 4 சதவீதம் என்று கூறப்படுகிறது. எஞ்சிய 96 சதவீதம் பேர் சிறு விற்பனையாளர்கள்.

சிறிய கடைகள் வைத்திருப்பவர்களிலிருந்து மார்க்கெட்டில் கூறுகட்டி காய்கறி, பழங்களை விற்பவர்கள் வரை ஒவ்வொருவரும், அதிகமான மூலதனம் இல்லாமல், தனிப்பட்டு தானே முதலாளியாக, தொழிலாளியாக, விற்பனையாளராக, தொழில் நடத்தி, நாள்தோறும் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் அவதிப்படுகின்றனர்.

தொடர் சில்லறைக் கடைகளை இந்தியாவில் அமைக்க பிரமாண்டமான வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலைமை, சிறு வியாபாரிகளை இந்திய வணிகத்துறையிலிருந்து அடியோடு அகற்றிவிடும்.

சில்லறைக் கடைகளை அமைக்க இந்திய ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனத்தின் முதலாளி முகேஷ் அம்பானி உலகப் பிரசித்த பெற்ற செல்வச் சீமான். 2007 ஆம் ஆண்டின் உலக செல்வந்தர்களின் பட்டியலில் அவர் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர் – இந்திய மதிப்பீட்டில் அது 88 ஆயிரம் கோடி ரூபாய்.

“ரிலையன்ஸ் பிரெஷ்’ என்ற பெயரில் சில்லறைக் கடைகளை அம்பானி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீடு 800 கோடி ரூபாய். தில்லியில் 8 சில்லறைக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. சென்னையிலும் அதன் கடைகள் வந்துவிட்டன.

காய்கறிகள், பழங்கள், மாமிசம், மீன்வகை, உணவுப் பொருள்கள், அன்றாட அடிப்படைத் தேவைக்கான பண்டங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் விற்கும் இந்த அமைப்புகளுக்குத் தேவையான, குளிர் சாதனக் கிடங்குகள், குளிர்சாதன லாரிகள், குளிர்சாதன விற்பனைக்கூடங்கள், பாதுகாப்பு அறைகள், பனிப்பெட்டிகள், விளம்பரத் தட்டிகள் எல்லாவற்றையும் மேல்நாட்டு முறையில் அமைத்து, தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்களை நேரடியாக, சில்லறைக் கடையில் “புதிதாக’த் தருவதால், அந்தக் கடைகளுக்கு, “ரிலையன்ஸ் பிரெஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தச் சில்லறைக் கடைகள் மூலம் நடைபெறும் விற்பனை இன்னும் மூன்றாண்டு காலத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வந்துவிடும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஹைதராபாத், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு வரக்கூடிய 2 லட்சம் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கர்ரேபோர்’ என்ற நிறுவனம் சில்லறை விற்பனையில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு 30 நாடுகளில் 12 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அதற்குச் சென்ற ஆண்டில் நடைபெற்ற வியாபாரத்தின் அளவு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய்! தாம் ஆரம்பித்த இந்திய நாட்டு சில்லறை வியாபாரத்துக்குத் துணைபுரிய அந்தப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்துக்கு உலகில் இரண்டாவது இடம் என்றால், சில்லறை வியாபாரத்தில் உலகில் முதலிடத்தில் உள்ள “வால்மார்ட்’ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு “பாரதி’ என்று மற்றோர் இந்திய நிறுவனம் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட “வால்மார்ட்’ உலக அளவில் சென்ற ஆண்டில் செய்த விற்பனையின் அளவு 350 பில்லியன் டாலர்; அதாவது 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்! நமது இந்திய அரசின் சென்ற ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மொத்த அளவு 5 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய்!

111 கோடி மக்களை ஆட்சிசெய்யும் ஒரு நாட்டின் வரவு- செலவைவிட, சில்லறை வியாபாரத்தில் ஒரு நிறுவனத்தின் ஓர் ஆண்டு விற்பனையின் அளவு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கிறது. சில்லறை வியாபாரம், ஆனால் கல்லாப்பெட்டி வசூல் உலக நாடுகளின் பலவற்றின் வருமானத்தைவிடப் பெரியது, பிரமாண்டமானது.

டாடா நிறுவனமும் சில்லறைக் கடைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “உல்வொர்த்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட ஆரம்பித்திருக்கிறது. “உல்வொர்த்’ நிறுவனத்தின் ஆண்டு விற்பனை அளவு 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்!

பெருத்த அளவில் சில்லறைக் கடைகளை வைத்திருக்கும் வணிக முறை வெளிநாடுகளில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வியாபாரத்தில் 85 சதவீதம் பெரிய நிறுவனங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்புகளிடம் ஒப்படைப்பது, 96 சதவீதமுள்ள சிறு வியாபாரிகள் கை – கால்களில் இரும்புச் சங்கிலிகளைப் போட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைச் சிறையில் அவர்களை அடைத்து வைப்பதாக முடியும்.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை வெளியிட்டது. இதில் அரசின் ஆறு அம்ச அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பது: “”7 முதல் 8 சதவீத அளவில் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தந்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான நிலையான நல்வாழ்க்கை அளிக்க முற்படுவோம்”.

ஆனால் இன்று உள்நாட்டு முதலாளிகளுடன் இணைந்து ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மூலதனம் உடைய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பதுடன், சிறு வியாபாரிகளின் வாழ்வை அடியோடு அழித்துவிட முயல்வது சரியா?

“”எல்லோருக்கும் வேலை”, “”ஒவ்வொரு குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று இக்கூட்டணியின் சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? கிடைத்த வேலைகள் போகின்றன, இருந்த நல்வாழ்வு நாசமாகிறது!

நடுத்தரக் குடும்பத்தினரின் சுயவேலை வாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

அன்னிய மூலதன உதவியுடன் ரிலையன்ஸ், பாரதி, டாடா என்று அடுத்தடுத்து இந்திய நிறுவனங்கள் தொடர் சில்லறைக் கடைகளை அமைக்க ஆரம்பித்துவிட்டன!

சிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுவதைப்போல, இந்தியாவின் சிறு வியாபாரிகளை விழுங்க பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டனவே! இந்தப் பேராபத்தைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் என்ன செய்துள்ளன?

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், சில்லறைக் கடைகளில் நடைபெறும் விற்பனையில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிற “வால்மார்ட்’ இந்தியாவின் சில்லறை மார்க்கெட்டில் நுழைந்து விட்டதே! “வால்மார்ட்’ அமைப்புக்கு வால் பிடிக்கும் அமைப்பாக இந்திய அரசும் இந்தியப் பொருளாதாரமும் ஆகிவிட்டனவா?

சுதந்திர இந்தியாவில், சுயவேலையில், சுயமுதலீட்டில், சுயமாகப் பாடுபட்டு, சுயமரியாதையுடன் வாழ்வு நடத்தும் எண்ணற்ற சிறு வியாபாரிகள் வேலையிழந்து, வீடிழந்து, பொருளிழந்து, வாழும் வகை இழந்து, பிறந்த நாட்டில் அகதிகளாக, அநாதைகளாக, அலைய வேண்டிய நிலைமை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

சுனாமிப் பேரலை தாக்கினால், கடலோரத்தில் உள்ள சிற்றூர்களும் சிறு குடிசைகளும் அழிக்கப்பட்டு மணல் மேடுகளாக மாறுவதைப்போல், உலகளாவிய பொருளாதாரப் பேரலை உழைப்பவர்களை, உழைத்துப் பிழைக்கும் சிறு வியாபாரிகளைக் கல்லறைகளுக்கு அனுப்பும் காலதேவனாக ஆகிவிடும்.

கடல் அலை கொந்தளித்தால், நாடு தாங்காது. ஏழைகளின் மனம் கொந்தளித்தால் நாடாளும் அரசு தாங்காது.

(கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்).


ரிலையன்ஸ் நிறுவனத்தால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்கிறார் பொருளாதார வல்லுநர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடையின் துவக்கம்
ரிலையன்ஸ் நிறுவனக் கடையின் துவக்க விழா-ஆவணப் படம்

ரிலையன்ஸ் நிறுவனம் காய்கனிகளை விற்க சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்கியது முதலே அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.

70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் உள்ள பெருகி வரும் மத்தியதர மக்களிடையே உள்ள மேல்தட்டு மக்களை குறிவைத்துதான் இந்தக் கடைகள் திறக்கப்பட்டுள்ள எனவும், இதனால் சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனகிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்.

ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், இது போன்ற வர்த்தகத்தில் பல நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டிலிருந்து பெரிய அளவில் அந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது எனவும் கூறுகிறார்.

இது போன்ற நிறுவனங்கள், இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து பொருட்களை நேரடியாக வாங்குவதால் விவசாயிகளும் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உலக மயமாக்கலில் ஒரு நாடு ஈடுபடும் போது, குறிப்பிட்ட துறைகளுக்குத் தான் தமது சந்தை திறந்திருக்கும் எனக் கூறமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Posted in Agency, Agents, Agriculuture, Ambani, Analysis, Business, Capitalism, Commerce, Consumers, Economy, Exploitation, Farmers, Farming, Farmlands, Finance, Foreign, Globalization, Industry, investors, Kerala, Kozhikode, Loans, Malayalam, Merchants, Middlemen, MNC, Mullakkara Ratnakaran, Reliance, service, SEZ, Small Biz, SSI, Suicide, THIRUVANANTHAPURAM, Trivandrum, Vendors, Wal-Mart, Walmart | Leave a Comment »

Adoor to churn out two films from Thakazhi’s stories

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

ஞானபீட விருது எழுத்தாளர் தகழி சிவசங்கரரின் கதைகளை படமாக்குகிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்

திருவனந்தபுரம், மார்ச் 12: ஞானபிட விருது பெற்ற மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கர பிள்ளையின் 6 சிறுகதைகள் இரண்டு படமாக தயாரிக்கப்பட உள்ளன.

இதை பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், தாதா சாகேப் பால்கே விருது வென்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். படங்களுக்கான திரைக்கதை வசனம் எழுதப்பட்டு விட்டன. ஒரு படத்திற்கு “மூனு பெண்ணுகள்’ (மூன்று பெண்கள்) என்றும், மற்றொரு படத்திற்கு “கள்ளன்டே மகன்’ (திருடன் மகன்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியது: நான் படமாக தயாரிக்க உள்ள 6 கதைகளுமே தகழி சிவசங்கரரால் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. இருந்தபோதிலும் அவை நிகழ்காலத்திற்கு பொருந்தக் கூடியவை. மூன்று கதைகள் பல்வேறு குணாதிசயங்களை உடைய பெண்களைப் பற்றியவை. மற்ற மூன்றும் இந்த சமுதாயத்தில் நடுத்தரக் குடிமகனுக்கு எவ்வாறு நீதி கிடைக்கிறது என்பதைப் பற்றியவை.

இந்த கதைகள் அனைத்தும் என்னை வெகுவாக கவர்ந்தவை. இதனால் கதைகளின் தன்மை மாறும் வகையில் எந்த இடத்திலும் மாற்றம் செய்யவில்லை. இரண்டு படத்தின் படப்பிடிப்பையும் 45-50 நாள்களுக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளேன். இருந்தபோதிலும் “மூனு பெண்ணுகள்’ படத்தை விரைவில் வெளியிட்டுவிட்டு, பின்னர் “கள்ளன்டே மகனை’ வெளியிட முடிவு செய்துள்ளேன். படங்களை கதை படைப்பாளர் தகழி சிவசங்கரருக்கே அர்ப்பணிக்க உள்ளேன்.

“மூனு பெண்ணுகள்’ படத்தில் நந்திதா தாஸ், பத்மப்பிரியா, காவ்யமாதவன், முரளி மற்றும் சிலர் முக்கியப் பாத்திரம் ஏற்று நடிக்க உள்ளனர். “கள்ளன்டே மகன்’ படத்தில் விஜயராகவன் “திருடன்’ வேடம் தாங்கி நடிக்கிறார் என்றார்.

Posted in Adoor, Adoor Gopalakrishnan, Author, Basheer, Chemeen, Dada Saheb, Doordarshan, Films, Kaavya, Kaavya Madhavan, Kallante Makan, Kerala, Literature, Malyalam, Mohammed Basheer, Mollywood, Moonnu Pennungal, Murali, Nandhitha, Padmapriya, Paul Zachariah, screenplays, Sivasankara Pillai, stories, Thagali, Thagazhi, Thakali, Thakazhi, Thakazhi Sivasankara Pillai, Trivandrum, Vaikom, Women, Writer | Leave a Comment »

Attukkal Bhagawathy Amman Temple makes to Guiness Book of Records

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்ப்பு

திருவனந்தபுரம், அக். 13: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் “பொங்கல்’ வழிபாடு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். உலகத்திலேயே மிக அதிக அளவில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் மதச் சடங்குகளில் ஒன்று என்பதற்காக இந் நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் “பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் பகவதி அம்மன் கண்ணகியின் தெய்வீக வடிவமாகக் கருதப்படுகிறது. தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி.

மதுரையை எரித்துவிட்டு கொடுங்கலூருக்குச் சென்றுகொண்டிருந்த கண்ணகியை ஆற்றுக்கால் பெண்கள் வரவேற்று உபசரித்து உணவளித்ததாக இக்கோயிலில் பாடப்படும் பாரம்பரியப் பாடலில் குறிப்புகள் உள்ளன.

ஆண்டுதோறும் மலையாள மாதமான கும்பத்தில் வரும் பூரம் தினத்தில், இக்கோயிலில் பெண்கள் கூடி பொங்கல் சமைத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாட்டில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பொங்கலிடுகின்றனர். 1997-ல் அதிக அளவாக 15 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.

Posted in Amman, Atrukkaal, Attukkal Bhagawathy, Bagavathy, Durga, Female, Guiness Book, Kerala, Ladies, Limca, Pongal, Pooram, Records, Sabarimalai, Thiruvanthapuram, Trivandrum, Women | Leave a Comment »

Drink Toddy; Get 10 Kg Rice for Free – Kerala’s Chikun Kunya Solution

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 27, 2006

கள் குடித்தால் 10 கிலோ அரிசி இலவசம்: கள்ளுக்கடையில் நூதன அறிவிப்பு

திருவனந்தபுரம்,செப். 27-

கேரள மாநிலம் முகமா பகுதியில் உள்ள துரத்தன் சந்திப்பு பகுதியில் கள்ளுக்கடை ஒன்று உள்ளது. இந்த கள்ளுக்கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனை அமோகமாக நடந்து வந்தது.

ஆனால் சமீபகாலமாக அந்த பகுதியில் சிக்குன் குனியா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்களது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நாளுக்கு நாள் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கள் விற்பனை மிகவும் பாதித்தது.

இதனால் கள்ளு கடையை நடத்தி வரும் கடைக்காரர் நூதன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கள் குடிக்க கடைக்கு வரும் நபர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதனால் கடையில் மீண்டும் கூட்டம் அலைமோத தொடங்கியது. வியாபாரம் களை கட்டத் தொடங்கியது. 10 கிலோ அரிசி வாங்கி சென்ற அவர்கள் கள்ளும் குடித்து விட்டு வீட்டில் சில நாட்கள் நிம்மதியாக சாப்பிட்டு பசியை போக்கினர்.

தற்போது கூட்டம் அளவுக்கு அதிகமாக தினமும் அதிகாலை முதலே குவிந்து விடுவதால் குலுக்கல் முறையில் பரிசுக்குரிய நபர்களை தேர்ந்து எடுத்து இலவச அரிசி வழங்கி வரு கிறார்.

Posted in Addiction, Alcohol, Arrack, Chikun Kunya, Chikungunya, Customer, Free, Innovative, Kerala, Liquor, Marketing, Tamil, Toddy, Trivandrum | Leave a Comment »