முல்லை பெரியாறு அணை – சிக்கல்
சி.எஸ்.குப்புராஜ்
1886}ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் நாள் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது திருவாங்கூர் மன்னருக்கும் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே பெரியாற்றில் ஓர் அணை கட்டவும், அதில் தேங்கும் நீரினை ஒரு குகை மூலமாகத் திருப்பி, சென்னை மாகாணத்தில் இருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் வறண்ட நிலங்களில் பாசனம் செய்யவும் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.
அதன்படி 1895-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அறுபது ஆண்டுகள் எவ்வித சிக்கலும் இன்றி பாசனம் நடந்து வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அங்கே கேரள அரசு உதயமானது. இங்கே தமிழ்நாடு அரசு ஏற்பட்டது.
1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது.
அதற்காக ஒரு புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்று முடிவாகி 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ம் நாள் கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே, பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. முதல் ஒப்பந்தத்தில் அணை கட்டுவதால் நீரில் முழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கு வாடகையாக ஆண்டுதோறும் ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாய் பிரிட்டிஷ் நாணயமாக சென்னை அரசாங்கம் திருவாங்கூர் மன்னருக்குத் தர வேண்டும் என்று இருந்தது (திருவாங்கூர் சமஸ்தானத்தில் அப்போது சக்கரம் என்ற பெயரில் வேறு நாணயம் புழங்கி வந்ததால் பிரிட்டிஷ் நாணயம் என்று குறிக்கப்பட்டது).
மின் உற்பத்திக்காக போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், மூழ்கடிக்கப்பட்ட நிலம் 8000 ஏக்கருக்கு வாடகை 30 ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாய் ஆண்டுதோறும் கேரள அரசுக்குத் தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.
கடந்த 27 ஆண்டுகளாக பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டு விட்டதால், நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கராக இல்லாமல் 4677 ஏக்கராகக் குறைந்துவிட்டது. இவ்வாறு வெளிப்பட்ட நிலங்களில் கேரள அரசு பலவிதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 8000 ஏக்கருக்கான வாடகைப் பணத்தினை தவறாமல் செலுத்தி வருகிறது.
முழு நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால் (152 அடியிலிருந்து 136 அடிக்கு) நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டி.எம்.சி.யிலிருந்து 6.4 டி.எம்.சி.யாகக் குறைந்துள்ளது. அதனால் பாசனப் பகுதி 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது; 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின் நிலையத்தில் 40 சதவீதம் உற்பத்திக் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு இந்த நஷ்டத்தினை தாங்கி வருகிறது. முழு நீர்மட்டம் குறைந்ததனால் அணையில் இருந்து வழிந்து போகும் நீர் அதே ஆற்றில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணையில் போய்ச் சேருகிறது. அங்கு உற்பத்தியாகும் மின்சக்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கே விற்கப்படுகிறது.
தமிழ்நாடு தண்ணீர் இழப்பினால் ஏற்படும் நஷ்டத்தோடு, அத் தண்ணீரைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியினை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
இதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக கேரள அரசு பேசி வருகிறது. அதற்கும் யாரும் பதில் சொல்லவில்லை.
முழு நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்த பின்பும், கேரள அரசு பணிய மறுக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம் என்கிறது. பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை பயனற்றுப் போனதால்தான், தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தினை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பின்பும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றது. காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர வேறில்லை. தமிழ்நாடு அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வளவு சிக்கலுக்குப் பின்னரும், நம்மால் கட்டப்பட்ட அணை, நமக்குப் பயன்தரும் அணை, கேரள அரசின் பாதுகாவலில் உள்ளது. கேரள காவல்துறையினர்தான் பாதுகாத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது விரும்பத்தக்கத்தல்ல. தமிழ்நாட்டு காவல்துறையினரும் அங்கே இருக்க வேண்டும். இதுவும் உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.