ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரக இழப்பைத் தடுக்க…
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
என் அம்மாவுக்கு வயது 60. சிறுநீரகம் 50 முதல் 75 சதம் செயலிழந்து விட்டது என டாக்டர் கூறியது முதல் எனக்கு மன அமைதி இல்லை. தற்போதைய நவீன ஆங்கில மருத்துவப்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு போன்றவை செய்யலாமா, செய்யக்கூடாதா?
மலம், சிறுநீர் கழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறும் ஆயுர்வேதம், அவற்றைக் கழித்த பின்பு செய்ய வேண்டிய சுத்தியிலும் கவனம் அவசியம் என்று வலியுறுத்துகிறது. சிறுநீர் மட்டும் தனியாகக் கழிக்கும் பொழுது ஒவ்வொரு தடவையும் நீர் துவாரத்தைச் சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். அதன்பிறகு கை, கால்களையும் துப்புரவாய் அலம்பிக் கொள்ள வேண்டும். வாயில் தண்ணீர் விட்டுக் கொப்பளிக்க, அதனால் தூண்டிவிடப்படும் உடல் நரம்புகளால் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சுறுசுறுப்படைந்து சிறுநீர் தங்கு தடையின்றி சிறுநீர்ப்பையில் மறுபடியும் சேர்கின்றது. இதுபோன்ற சுத்தி முறைகளைக் கையாள்வதால் சிறுநீரக செயல் இழப்பை நம்மால் தடுக்க முடியும்.
சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த நம் முன்னோர்கள் அதன் சீரான செயல்பாட்டிற்காக உணவில் காரமான உணவுப் பண்டங்களை நன்றாகக் குறைத்து இனிமையான உணவுப் பண்டங்களை அதிகம் சேர்த்தார்கள். மேலும் பழ வகைகள், வாழைத்தண்டு, பூசணிக்காய், வெள்ளரிக்காய், பரங்கிப்பிஞ்சு, சுரைக்காய், முருங்கைப் பிஞ்சு, இளநீர், தேங்காய், உளுந்து, பயிறு, பால், மோர், கஞ்சிகள், சுத்தமான தண்ணீர் போன்றவற்றைப் பசி நிலையறிந்து அவர்கள் உட்கொண்டதால் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். சிறுநீர் கழிப்பதில் தடை ஏற்படுவதையறிந்தால் உருக்கின பசு நெய்யை உணவிற்கு முன்பு ஒருதரம் குடித்து, உண்ட உணவு ஜீரணமான உடன் திரும்ப ஒருதரம் நெய்யைக் குடிப்பார்கள். இந்த நெய்யின் அளவை பசித்தீயின் பலத்திற்குத் தக்கபடி அமைத்துக் கொள்வார்கள். ஒருவார உபயோகத்தில் சிறுநீர் இறக்கம் சுத்தமாய் சீர்பட்டுவிடும். எந்த நிலையிலும் சிறுநீர் வேகத்தை அடக்கும் துர்ப் பழக்கத்தை அவர்கள் செய்யாதிருந்தார்கள்.
சிறுநீரகங்கள் கெடாதிருக்க சில எளிய வழிகள்: தோல் நீக்காத 2 உருளைக் கிழங்கு, 2 கேரட், சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு ஆகியவற்றை 1 கிளாஸ் தண்ணீரில் இளந்தீயில் வேகவைத்து, 1/2 கிளாஸ் அளவு தண்ணீராகக் குறுகும்படி வேகவைத்து வடிகட்டவும். இந்தச் சூப்பை மற்ற உணவுகள் சாப்பிடும் போது சேர்த்துச் சாப்பிடவும். தொடர்ந்து 2 வாரங்கள் உபயோகிக்க சிறுநீரகச் செயல் இழப்பைத் தவிர்க்கலாம்.
* தர்ப்பூசணியின் உள்ளேயிருக்கும் சிவப்பான சுளைப் பகுதியை இளந்தீயில் வேகவைத்து, சிறிது சர்க்கரை சேர்த்து பிழியவும். இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த ஜுஸ், தேன் போல இறுகி இருப்பதைப் காணலாம். இதை ஒரு டேபிள்-ஸ்பூன் 2 வேளை ஒரு நாளில் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிட சிறுநீரகங்கள் வலுப்படும்.
* வெள்ளை முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். அது குடல் வாயு நோயைப் போக்கவல்லது. குளிர்ச்சியும் இரத்த விருத்தியும் ஏற்படுத்தும். சிறுநீரகக் கோளாறுகளை நீக்கி, சிறுநீரை நன்கு பிரித்து நீர் பைக்கும் கொண்டு சேர்க்கும்.
* சிறுநீரக் கோளாறுகளுக்கு அத்திப் பழம் சாப்பிட உகந்தது. இப்பழம் எளிதில் ஜீரணமாவதுடன் ஆங்காங்கு இறுகிய கழிவுப் பொருள்களைப் பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி மிருதுவாகச் செய்கிறது. சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்து குணம் பெறலாம்.
பண்டைய காலங்களில் சிறுநீரகச் செயல் இழப்பு ஏற்பட்டால் மூலிகை மருந்துகளாகிய நெருஞ்சில், முருங்கைப் பட்டை, மூக்கரட்டை எனப்படும் சாரடை நேர், கரும்பு வேர், பூசணி, பரங்கி விதை, வெட்டி வேர், விளாமிச்சை வேர் போன்றவற்றை பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடத் தருவார்கள். சிறுநீர் நன்கு இறங்குவதுடன் சிறுநீரகங்களும் நன்கு வலிமை பெறும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு போன்றவை காலத்தின் கட்டாயங்களாகிவிட்டன. அவற்றைச் செய்யாது போனால் உடலில் தேவையற்ற விஷத்திரவங்கள் தங்க நேரிடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்தான். அதனால் உங்கள் அம்மாவின் விஷயத்தில் நீங்கள் தகுந்த முடிவை எடுப்பதே நல்லது.