இது நல்லது அல்ல: சி. மகேந்திரன்
சென்னை, மார்ச் 5: மின் வாரியத்தை இப்படிப் பிரிப்பது நல்லது அல்ல என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இந்தியாவில் இப்படிப் பிரிக்கப்பட்ட பல இடங்களில் தனியாருக்கான வாய்ப்பைக் கூடுதலாக உருவாக்கித் தரும் நிலை உள்ளது. ஆரம்பத்தில் தனியாருக்குத் தர மாட்டோம் என்று கூறுவார்கள். ஆனால் இறுதியில் தனியாருக்குப் பிரித்து தருவார்கள்.
பிகாரில் இப்படி நடந்து, பெரிய போராட்டம் வெடித்து, பிரச்னை இன்னும் முடியாமலேயே உள்ளது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, மின் கட்டணம் உயரவும் வாய்ப்பு உள்ளது.
————————————————————————————————————————————-
துண்டாடப்படுகிறதா மின்சார வாரியம்?
பா. ஜெகதீசன்
சென்னை, மார்ச் 5: பொன் விழா கொண்டாடிய தமிழ்நாடு மின் வாரியம் துண்டாடப்படும் என்கிற செய்தி அந்த வாரியத்தினரை மின்சாரம் தாக்கிய நிலைக்குத் தள்ளி இருக்கிறது.
தற்போது வாரியத்தின் மிக முக்கிய அங்கமாகத் திகழும் “மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு’ தனித்து இயங்கும் நிறுவனமாக மாற்றப்பட உள்ளது என்கிற தகவல் ஊழியர்களிடையே பரவி உள்ளது.
தற்போதைக்கு அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தனி நிறுவனமாக இப்பிரிவை உருவாக்கி, இயக்குவதற்குத் தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மின் வாரியம் 1.7.1957-ல் உருவானது. அப்போது தனித் தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு மின்சார நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மாநில அரசின் நிறுவனமாக மின் வாரியம் உருப் பெற்றது.
சமமான முக்கியத்துவம்:
மின் வாரியத்தில்
1) மின் உற்பத்திப் பிரிவு,
2) உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு,
3) மின் விநியோகப் பிரிவு,
4) மின் கணக்கீடு -கட்டண வசூலிப்புப் பிரிவு என நான்கு பிரதானப் பிரிவுகள் உள்ளன. இந்த நான்குப் பிரிவுகளுமே ஒன்றுக்கு ஒன்று சமமான முக்கியத்துவத்தைப் பெற்றவை.
ஏற்கெனவே மின் உற்பத்திப் பிரிவில் அரசுக்குப் போட்டியாகவும், வர்த்தக ரீதியிலும் தனியார் துறை முதலீட்டுடன் ஆங்காங்கே மின் உற்பத்தி நிலையங்கள் பல்வேறு கட்டங்களாகத் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து, மின்சாரத்தை அரசு வாங்கி, மானிய விலையில் மின் வாரியத்தின் மூலம் மக்களுக்கு விநியோகித்தும் வருகிறது.
இப்படி மக்களுக்கு உதவி வரும் அரசும், வாரியமும், மீண்டும் மின் வாரியத்தைத் துண்டு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என வாரியத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
தனியாகப் பிரிப்பு: உற்பத்திப் பிரிவில் இருந்து விநியோகப் பிரிவுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவை (பவர் டிரான்ஸ்மிஷன் டவர்) தனி நிறுவனமாகப் பிரிப்பது தான் அந்த நடவடிக்கை.
அதன்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின் கம்பிகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் மின் கோபுரங்கள், மின் கம்பங்கள், துணை மின் நிலையங்கள் போன்றவை அந்தத் தனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய் விடும்.
அந்த நிறுவனத்துக்கு “ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி’, ஸ்டேட் டிரான்மிஷன் கார்ப்பரேஷன்’ என்கிற இரு பெயர்களில் ஒன்று சூட்டப்படலாம் என வாரிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தற்போதைக்கு இந்தத் தனி நிறுவனத்தின் தலைவராக மின் வாரியத் தலைவரே இருப்பார். அவரைத் தவிர, சில இயக்குநர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்படும். தற்போது மின் வாரியத்தில் உள்ள கணக்கியல் உறுப்பினர், தலைமைப் பொறியாளர் (டிரான்ஸ்மிஷன்), தலைமைப் பொறியாளர் (திட்டம் மற்றும் தகவல் தொடர்பு), தலைமைப் பொறியாளர் (இயக்கம்) ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள். நிறுவனத்தின் கம்பெனிச் செயலராக அதற்குரிய தகுதி படைத்தவர் நியமிக்கப்படுவார்.
தனியார் வசமாகி விடுமோ?:
சிறிது காலத்துக்குப் பிறகு இந்தத் தனி நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விடலாம் என்கிற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் வலுவாக நிலவுகிறது.
அதேபோல, தற்போது அயல்பணி (டெபுடேஷன்) அடிப்படையில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் வாரிய ஊழியர்கள், பின்னர் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களாக மாறி விடுவார்கள். தற்போது அவர்கள் பெற்று வரும் சலுகைகள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.
மத்திய அரசின் சட்டம்:
2003-ல் மத்திய அரசு பிறப்பித்த மின் சட்டத்தின்படி இந்தத் தனி நிறுவனம் தொடங்கப்படுகிறது. அந்தக் காலத்தில் இதைக் கடுமையாக எதிர்த்த தொழிற்சங்கங்கள் இன்று இதுதொடர்பாக எத்தகைய எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் மெüனமாக இருப்பது வேதனையாக உள்ளது என நவபாரத் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனின் பொதுச் செயலாளர் கி. பழநிவேலு தெரிவித்தார்.
இந்தத் தனி நிறுவனம் அமையுமானால், மின் நுகர்வோர் மிக அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி நேரிடும். தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என வாரிய நலனில் அக்கறை உள்ள தொழிற்சங்கங்கள், பொது நல அமைப்புகள் அச்சம் தெரிவித்தன.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்வது சரியல்ல. இது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் பயப்படுகிறார்கள்.