பண மோசடி செய்ததாக புகார்: நடிகை குஷ்புவுக்கு முன் ஜாமீன்
சென்னை, ஜன. 10: நடிகை குஷ்புவுக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
குஷ்புவின் சகோதரர் அப்துல்லாவின் மாமனார் டி.எம். வர்கி அமெரிக்காவில் வசிக்கிறார். ரூ.7 லட்சம் பண மோசடி செய்ததாகக் குஷ்புவுக்கு எதிராக வர்கி கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரிடம் சென்னை போலீஸôர் விசாரணை நடத்தினர்.
இப்புகாரின்பேரில் தன்னை போலீஸôர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆர். ரகுபதி, சில நிபந்தனைகளுடன் குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
ரூ.10,000 ஜாமீன் வழங்க வேண்டும். அதே தொகைக்கு இரு நபர்கள் குஷ்புவுக்காக ஜாமீன் செலுத்த வேண்டும். தினமும் காலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் நீதிபதி.
மனுவில் குஷ்பு கூறியிருப்பதாவது:
பெங்களூரில் கே.ஆர். சாலையில் எனக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு உள்ளது. என் சகோதரர் அப்துல்லா கான், கன்னட மொழியில் ஜனனி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதற்காக ரூ.7.80 லட்சம் ரூபாயை அமெரிக்காவில் இருந்து அவரது மாமனார் வர்கி அனுப்பினார். அத் தொகை என் மூலமாக என் சகோதரருக்கு அனுப்பப்பட்டது.
தற்போது என் சகோதரருக்கும் அவரது மாமனாருக்கும் உறவு சரியில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரூ.7.80 லட்சம் தர வேண்டும் என்றும் இல்லையெனில் பெங்களூரில் உள்ள என் வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்றும் வர்கி கூறுகிறார்.
அவருக்கும் அவரது மருமகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக என்னைத் துன்புறுத்துகிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸôர் என்னிடம் விசாரணை நடத்துகின்றனர் என்று மனுவில் குஷ்பு கூறியிருந்தார்.