Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Training’ Category

Tamil Nadu unveils new industrial policy – Focuses on infrastructure, manufacturing &aims to double exports at $30 bn by 2011

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

புதிய தொழில்கொள்கை வெளியீடு – 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: கருணாநிதி

சென்னை, நவ. 5: நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க வகை செய்யும் புதிய தொழில்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தொழில்கொள்கையை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

உற்பத்தித் துறையில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், தமிழகத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சர்வதேச சந்தையில் தரத்திலும் விலையிலும் போட்டியிடக் கூடிய அளவுக்கு மேம்படுத்தவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் தொழில்துறையில் வளர்ச்சியடைய இப்புதிய தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் ஆலோசனைக்குப் பிறகு இப்புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டிற்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், உற்பத்தித் துறையின் பங்களிப்பை 21 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களைக் கவரும் வகையில், முதன்மை முதலீட்டு மையமாக தமிழகத்தை உருவாக்குவதும், உலகளாவிய பொருள் வழங்கீட்டுத் தொடர்களுடன், உள்நாட்டு தொழில் பகுதிகளை ஒருங்கிணைக்க உதவுவதும் இதன் நோக்கமாகும்.

திறன் மிக்க தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், மனித வளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்திற்கு மேம்படுத்துவதும் நோக்கமாகும்.

இந்த இலக்கை எட்டும் நோக்கில் சென்னைக்கு அப்பாலும் தொழிற்சாலைகள் உருவாவதற்கு ஏதுவாக பின்தங்கிய பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும், தனியார்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளை ஏற்படுத்துவதும், உள்கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதும் பிரதான நோக்கமாகும்.

தொழிலக சிறப்புப் பகுதிகள் :

  • சிப்காட் நிறுவனம்,
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அல்லது
  • தனியார் மேம்பாட்டாளர்கள் அமைக்கும் தொழில் பூங்காக்களை சமமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக

  • சென்னை – மணலி – எண்ணூர் மற்றும்
  • செங்கல்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் – ராணிப்பேட்டை பகுதிகள் தொழிலகச் சிறப்புப் பகுதிகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • அடுத்த கட்டமாக மதுரை,
  • தூத்துக்குடி மற்றும்
  • கோவை – சேலம் பகுதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் பூங்காக்களைப் போன்று நுண்ணிய உயர்தொழில்நுட்பப் பூங்காக்களை சிப்காட் மூலம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உயிரி அறிவியல் புதுமைத் திட்ட நிதி ஒன்றை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தினால் (டிட்கோ) மூலம் செயல்படுத்தவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மனித ஆற்றல் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில்பயிற்சி தர மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள், தொழிற் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இடையே தொடர்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி) நிர்வகிக்கும் ஒரு மூல நிதியின் மூலம் தமிழ்நாடு தொழில்நுட்ப மற்றும் எரிசக்தி பயன்பாட்டுத் திறன்களை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத் திட்டத்துக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும்.

வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு கூடுதல் உதவிகள் அளிக்கப்படும்.

உடல் ஊனமுற்ற அதேசமயம் சிறப்பாகபணியாற்றும் திறன் பெற்றவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல

  • வேளாண் தொழில்கள்,
  • வேளாண் இயந்திரங்கள்,
  • நுண்ணிய பாசனத்திற்கான வேளாண் சாதனங்கள் ஆகிய தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மின்னணு வன்பொருள்,
  • ஜவுளி,
  • தோல்,
  • மோட்டார் வாகனம் போன்ற தொழில்களில் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இதில் அடங்கும்.

புதிய தொழிற்சாலைகளை மூன்று வகையாகப் பிரித்து அவற்றுக்கு தரச் சான்றை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைந்து அளிப்பதும் புதிய தொழில் கொள்கையின் பிரதான நோக்கம் என்றார் கருணாநிதி.

புதிய தொழில் கொள்கையின் பிரதிகளை தொழிலதிபர்களிடம் முதல்வர் அளித்தார்.

—————————————————————————————————————————————–

தமிழக புதிய தொழில் கொள்கையில் சலுகை மழை! * விவசாய தொழிலுக்கு அதிக முன்னுரிமை

சென்னை :வரும் 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில்களுக்கு அனைத்து சலுகைகள் வழங்கவும் முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நலிவடைந்து வரும் விவசாய தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளை கண்டறிவதற்குரிய வழிமுறைகளை நிர்ணயிக்க தொழில் துறைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவும், முதல்வர் கருணாநிதியை தலைவராகவும், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்புத் தொழில் முனைப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற் கூட்டமைப்புகள் மற்றும் வர்த்தக சபை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, புதிய வரைவு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. அமைச்சரவைக் குழு விவாதித்து இறுதி செய்த, ஷபுதிய தொழில் கொள்கையை’ முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

இந்த தொழில் கொள்கை, 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தயாரிப்புத் துறையின் தற்போதைய பங்களிப்பான 21 சதவீதத்தை 27 சதவீதமாக உயர்த்துதல், முதலீட்டாளர்களை கவரும் மையாக தமிழகத்தை உருவாக்குதல், திறமையான தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மனிதவளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்துக்கு மேம்படுத்துதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டுள்ளது.விவசாயம் மற்றும் விவசாய விளை பொருட்கள் பதப்படுத்தும் தொழில்களுக்கு புதிய தொழில் கொள்கையில் அளிக்கப்பட்டுள்ள பல சலுகைகள் வருமாறு:

வேளாண் விளை பொருள் பதப்படுத்தும் தொழிலுக்கு தேவைப்படும் சட்ட அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் பெற்றுத் தந்து அவற்றுக்கு ஊக்கத் தொகை வழங்கும் அமைப்பாக வேளாண்மை விற்பனை மற்றும் வணிக இயக்ககம் செயல்படும்.

ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், அவர்களுக்கு உதவிகள் செய்யவும், ஒரு ஏற்றுமதி அபிவிருத்திப் பிரிவு அமைக்கப்படும்.

  • வேளாண்மை விளை பொருள் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த ஊக்க உதவிகள் அளிக்கப்படும்.
  • இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவு (ராமநாதபுரம்),
  • கோழியினப் பொருட்கள் (நாமக்கல்),
  • மஞ்சள் (ஈரோடு),
  • ஜவ்வரிசி (சேலம்),
  • வாழைப்பழம் (திருச்சி),
  • மாம்பழம் (கிருஷ்ணகிரி),
  • முந்திரி (பண்ருட்டி),
  • பனைப் பொருட்கள்,
  • மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும்
  • கடல் சார்ந்த உணவு (தூத்துக்குடி),
  • பால் பொருட்கள்,
  • திராட்சை (தேனி) போன்றவற்றில் தொழில் பூங்காக்களிலும், சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் பதப்படுத்தும் தொழில் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in 2011, Agriculture, Auto, Automotive, Budget, Bus, Cars, Challenged, Commerce, Disabled, DMK, Economy, Electrical, Electronics, Employment, Environment, Equipments, Exports, Fabrics, Farming, Garments, Incentives, industrial, Industry, infrastructure, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Leather, Manufacturing, Nature, Policy, Pollution, Protection, SEZ, SIPCOT, Tamil Nadu, TamilNadu, Tariffs, Tax, Textiles, TIDCO, TN, Training, Transport, Work, workers | 1 Comment »

ANEW (Association for Non-traditional Employment for Women)

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

சேவை: ஏழைப் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

ந. ஜீவா

முன்பைக் காட்டிலும் பெண்கள் படிப்பது அதிகமாகியிருக்கிறது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக மார்க்குகள் குவித்து எவரெஸ்ட்டில் கொடிகளை ஒவ்வோராண்டும் நட்டு வருகிறார்கள். என்றாலும் இந்தக் காலத்திலும் பெண் பிள்ளைகள் ஒரு பத்தாவது படித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளஸ் டூ படித்த பின்னால் படிப்பில் கரைகடந்த ஆர்வம் இருந்தும் படிக்க வசதியில்லாத பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் படித்த அந்தக் குறைந்தபட்ச பத்தாவது, பிளஸ் டூ படிப்புகளும் கூட பயனில்லாமற் வீணாகப் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட பெண்கள் வேலைக்குப் போகும்விதமாக அவர்களுக்கு ஹோம் நர்சிங் பயிற்சி, கார், ஆட்டோ டிரைவிங், கணினிப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எல்லாம் இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள்; முடிந்தால் வேலையும் வாங்கித் தருகிறார்கள் சென்னை அண்ணாநகர் ANEW (Association for Non-traditional Employment for Women) என்கிற அமைப்பினர். அந்த அமைப்பைச் சேர்ந்த அனு சந்திரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்…

யாருக்குப் பயிற்சி கொடுக்கிறீர்கள்?

நாங்கள் வேலைவாய்ப்பிற்கான இலவசப் பயிற்சி கொடுப்பது மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத்தான். பெண் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் அவர்களால் பத்தாவதையோ, பிளஸ் டூ வையோ தாண்ட முடியாத அளவுக்குக் குடும்பநிலை இருக்கும். பிளஸ் டூ படித்துவிட்டு எந்த வேலைக்கும் போக முடியாமல் இருக்கும் பெண்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சியின் பின் 95 சதவீதம் பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். இதனால் அந்தப் பெண்களின் வீட்டுக்கு ஒரு வருமானம் வருகிறது. நாளைக்கு திருமணம் என்று வருகிற போது அந்தப் பணம் அவர்களுக்கு உதவுகிறது.

ஹோம் நர்சிங் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி?

நாங்கள் ஹோம் நர்சிங் பயிற்சியை நான்கரை மாதத்தில் கற்றுத் தருகிறோம். முதல் இரண்டு மாதங்கள் தியரி கிளாஸ், அதன்பின் இரண்டரை மாதங்கள் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் போன்ற நிறுவனங்களில் பிராக்டிகல் பயிற்சி கொடுக்கிறோம். பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். நிறைய வீடுகளில் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள வீட்டிலுள்ளவர்களால் முடியாது. வீட்டிலுள்ள எல்லாரும் வேலைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவும் முடியாது. ஆஸ்பத்திரியில் அவர்களைப் பார்த்துக் கொள்ளணுமே. அதுபோல சிறுகுழந்தைகளை வைத்திருப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். வேலைக்குப் போகிற நேரங்களில் சிறுகுழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். மாதம் குறைந்தபட்சம் ரூ.3700 சம்பளம் கிடைக்கிறது. இப்படித் தேவையுள்ளவர்கள் அவர்களின் தேவையைக் குறிப்பிட்டு எங்களுக்கு போன் செய்தால் அதைக் குறித்துவைத்துக் கொண்டு அவர்கள் தேவைக்குப் பொருத்தமானவர்களை வேலைக்கு அனுப்புகிறோம்.

ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சிகளைப் பற்றிச் சொல்லுங்களேன்?

பெண்களுக்கு ஆட்டோ டிரைவிங், கார் டிரைவிங் பயிற்சி கொடுக்கிறோம். கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு லைசென்ஸýம் எடுத்துக் கொடுக்கிறோம். கார் டிரைவிங் ஐதப மூலமாகக் கற்றுத் தருகிறோம். ஒன்றரை மாதம் டிரெயினிங்கிற்குப் பிறகு எங்களிடம் உள்ள மாருதி, அம்பாசிடர் கார்களில் மேலும் 3 மாதங்கள் டிரெயினிங் எடுத்துக் கொள்கிறார்கள். எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்கள் சென்னை விமானநிலையத்தில் அங்கு வருகிற பயணிகளை உரிய இடத்தில் கொண்டு விடும் பணிகளைச் செய்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில், தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் கார் டிரைவராக வேலை செய்கிறார்கள்.

ஆட்டோ டிரைவிங் கற்றுக் கொண்ட பெண்கள் பெரிய பெரிய பள்ளிகளில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஏற்றிச் செல்வதுதான் அவர்களுடைய வேலை. கார் டிரைவிங் பயிற்சி, ஆட்டோ டிரைவிங் பயிற்சி எடுத்தவர்கள் எல்லாருக்கும் நாங்களே வேலை வாங்கிக் கொடுத்துவிடுவோம்.

கம்ப்யூட்டரில் என்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?

இப்போது கம்ப்யூட்டர் யுகமாகிவிட்டது. எனவே பிளஸ் டூ படித்த பெண்களுக்கு கம்ப்யூட்டரில் டிடிபி கற்றுக் கொடுக்கிறோம். டிசிஏ படிப்பும் உண்டு. கம்ப்யூட்டர் படிக்க வருகிறவர்களுக்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஒரு டெஸ்ட்டும் வைக்கிறோம். இவர்களுக்கு இந்தப் பயிற்சி கொடுக்க ஒரு மாணவிக்கு சுமார் ரூ.3500 ஆகிறது.

கம்ப்யூட்டர் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் இக்காலத்தில் அவசியம். இதற்கென புகழ்பெற்ற வீட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரைக் கொண்டு வகுப்புகள் எடுக்கிறோம்.

பயிற்சி கொடுத்த பின் வேலைக்குப் போகிறவர்களிடம் பணம் எதுவும் வாங்குவீர்களா?

நாங்கள் கார் டிரைவிங் இலவசமாக கற்றுக் கொடுத்தாலும் லைசென்ஸ் வாங்க செலவாகும் 2000 ரூபாயை வேலை கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பலர் கரெக்டாகத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

இலவசமாகப் பயிற்சி தந்தால் பலர் பொய் சொல்லி வருவார்களே, அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

நாங்கள் இலவசமாக வேலைவாய்ப்புப் பயிற்சிகள் கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு சில வசதியானவர்களும் கூட வந்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் நாலைந்து பேர் உட்கார்ந்து இன்டர்வியூ பண்ணுவோம். அதில் நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலிலேயே அவர்கள் ஏழையா? பணக்காரரா? என்பது தெரிந்துவிடும்.

கார்ப்பரேஷன் ஸ்கூலில் படித்தவரா? தனியார் பள்ளியில் படித்தவரா? என்பதிலேயே அவர்களுடைய வருமானநிலை தெரிந்து விடும். குடும்பத்தில் எவ்வளவு பேர்? வருமானம் எவ்வளவு? போன்ற கேள்விகளில் உண்மை தெரிந்துவிடும். அதை வைத்துத்தான் நாங்கள் பயிற்சி கொடுப்பதற்கான மாணவிகளைத் தேர்வு செய்கிறோம்.

பயிற்சிகளை எல்லாம் இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறீர்களே? செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

எங்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்து வருகிறவர் தமிழ்நாடு ஃபெüண்டேஷனைச் சேர்ந்த சந்திரசேகர். அதுபோல நிறைய நல்ல மனம் படைத்தவர்கள் ஏராளமான நன்கொடை தருவதால்தான் எங்களால் இந்த சமுதாய சேவையைச் செய்ய முடிகிறது.

Posted in ANEW, Anu, Anu chandran, Anuchandran, Chennai, class, Colleges, Compensation, computers, Development, Diploma, Donation, Driving, Education, Employment, Empowerment, Expenses, Females, Help, Interview, Jobs, Lady, Madras, Needy, NGO, Nurse, Nursing, Personnel, Poor, Rich, Schools, service, She, Skills, Spoken English, Students, Training, Volunteer, Wealthy, Women, Work | Leave a Comment »

Chennai Rotary & Worth Foundation – Initiatives for the Physically Disabled

Posted by Snapjudge மேல் மே 21, 2007

சேவை: வாழ நினைத்தால் வாழலாம்!

ரவிக்குமார்

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒüவையார். இப்படி அரிதான பிறப்பான மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சராசரியாக உடல் உறுப்பில் எந்தவிதமான ஊனமும் இல்லாமல் இருப்பவர்களே கல்வியைப் பெறுவதில், வேலை வாய்ப்பைப் பெறுவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், உடல் ஊனமுற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக் குறியாகத்தானே இருக்கும்? ஆனால் இப்படி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கும் மையமாக சென்னை, அசோக்நகர், உதயம் திரையரங்கம் அருகே செயல்பட்டு வருகிறது, ஆர்.சி.எம்.சி.டி. -வொர்த் அறக்கட்டளை. சென்னை ரோட்டரி சங்கத்தோடு சென்னையில் இயங்கும் வொர்த் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அதன் மேலாளர் என். வெங்கட்ராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

”வாழ நினைத்தால் வாழலாம் என்பதுதான் எங்கள் அறக்கட்டளையின் தாரக மந்திரமே. 1963-ல் சுவீடன் நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் புனர் வாழ்வுக்காக, காட்பாடியில் ‘சுவீடிஷ் ரெட் கிராஸ்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தினர். நாளடைவில் மருத்துவத் துறையின் வளர்ச்சியால், தொழுநோயின் தாக்கம் குறைந்த நிலையில், ‘வொர்த் அறக்கட்டளை’ என்னும் பெயரில் தமிழகத்தில் இருப்பவர்களைக் கொண்டே ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். இதுதான் ‘வொர்த் அறக்கட்டளை’யின் ஆரம்பகால வரலாறு.

உடல் ஊனமுற்றவர்களுக்கான இலவச தொழிற்பயிற்சியை காட்பாடி, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய மூன்று இடங்களில் வழங்குகிறது எங்களின் அறக்கட்டளை. உடல் ஊனமுற்றிருந்து பத்தாவது தேறியிருக்கும் எவரும் இந்தத் தொழிற்பயிற்சியைப் பெறலாம். ஒவ்வோராண்டும் ஜுன், ஜூலை மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தங்கும் வசதியுடன் அளிக்கப்படும் இந்தப் பயிற்சிகளைத் தகுந்த முறையில் படித்து தேர்வாகும் மாணவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் அளிக்கப்படும்.

டர்னர் பயிற்சி மூன்று மையங்களிலும், மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பயிற்சிகள் காட்பாடியிலும், வெல்டர் பயிற்சி திருச்சியிலும், பிரத்யேகமாக எங்களால் வழங்கப்படும் கம்ப்யூட்டர் மற்றும் செக்ரட்டரி கோர்ஸ்கள் காட்பாடி, பாண்டிச்சேரி மையங்களிலும் பயிற்சியளிக்கப்படுகின்றன.

சென்னையில் செயல்படும் மையத்தில் பிளஸ் டூ வரை படித்த மாணவர்களுக்கு எம்.எஸ்-ஆபிஸ், டேலி போன்ற கணிப்பொறிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து, கணிப்பொறி பயிற்சிகள் அடங்கிய செயலருக்கான பயிற்சிகள், தையல் பயிற்சிகள், பார்வையற்றவர்களுக்கான சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கிறோம்.

எங்கள் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் ஒன்று, பாண்டிச்சேரியில் ஒன்று, காட்பாடியில் மூன்று என ஐந்து புரொடக்ஷன் யூனிட்கள் இயங்குகின்றன. எங்களிடம் பயிற்சி பெற்ற பலரே இங்கு (ஏறக்குறைய 200 பேர்) பணியிலிருக்கின்றனர். டி.வி.எஸ்., ரானே மெட்ராஸ், ஈ.ஐ.டி.பாரி போன்ற தொழிற்சாலைகளிலிருந்து எங்களுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்குப் பயன்படும் சில உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் ஆர்டர்கள் தொடர்ந்து கிடைக்கும். பிளாஸ்டிக் மோல்டிங்கைப் பயன்படுத்தி செய்யும் பல வேலைகளையும் பல தொழிற்சாலைகளுக்காகச் செய்து வருகிறோம்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பெர்கின்ஸ் பிளைன்ட் ஸ்கூல் தயாரிக்கும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி டைப்ரைட்டர் உலகம் முழுவதும் பிரசித்தம். பெர்கின்ஸ் டைப்ரைட்டருக்கான உதிரி பாகங்களை எங்களுக்குக் கப்பலில் அனுப்பிவிடுவார்கள். அந்தப் பாகங்களை ஒன்றிணைத்து டைப்ரட்டராக நாங்கள் அவர்களுக்கு ரீ-எக்ஸ்போர்ட் செய்வோம். மாதத்திற்குச் சராசரியாக 2000 டைப்ரைட்டர்களை இப்படி உருவாக்குகிறோம். இங்கு உருவாகும் இத்தகைய பிரெய்லி டைப்ரைட்டர்களை இறுதிக்கட்ட பரிசோதனை செய்வது இங்கிருக்கும் பார்வையற்றவர்கள்தான். இங்கு உருவாகும் பிரெய்லி டைப்ரைட்டர்களை 9500 ரூபாய்க்குக் கொடுக்கிறோம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு எலக்ட்ரிக் மீட்டர்களைத் தயாரித்துத் தருவது பெங்களூரிலிருக்கும் ‘பெல்’ நிறுவனம். இப்படி தயாரித்துத் தரும் மீட்டர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை பெல் நிறுவனத்துக்காக நாங்கள் சரிபார்த்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறோம். எங்களிடம் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸில் பயிற்சி பெற்றவர்களே இந்தப் பணியைச் செய்கின்றனர்.

இதைத் தவிர, உலக அளவில் பார்வையற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியாமட்ரி பாக்ஸ்… உள்ளிட்ட 13 பொருட்களைக் கொண்ட ‘யூனிவர்ஸல் பிரெய்ல் கிட்’ ஒன்றையும் 350 ரூபாய் விலைக்குத் தருகிறோம்.

காது கேளாத, வாய் பேசமுடியாதவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ‘டிரான்ஸிஷனல் ஸ்கூல்’ ஒன்றை இலவசமாகக் காட்பாடியில் இயக்குகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி அறிவையும் தொழில்பயிற்சிகளையும் அளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பிரெய்லி முறையில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழிலேயே படிப்பதால், வேலை வாய்ப்புகளில் ஆங்கிலம் தெரியாததால் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கும் தகுந்த பயிற்சிகளை அளிக்கிறோம். உடல் ஊனத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவர்களை உங்களை விட மன ரீதியாக உறுதியானவர்களாக மாற்றிக் காட்டுகிறோம்!” என்றார் என். வெங்கட்ராமன்.

ஒவ்வொரு யூனிட்டாகச் சுற்றிப்பார்த்தோம். கம்ப்யூட்டர் யூனிட்டை கடக்க இருந்த நம்மை… மறுபடியும் யூனிட்டை உற்றுப்பார்க்க வைத்தார் ஓர் இளம்பெண். காரணம்… அவர் கம்ப்யூட்டரின் ‘மெüசை’க் ‘க்ளிக்’கிக் கொண்டிருந்தது கைகளால் அல்ல… கால்களால்!

”எகனாமிக்ஸில் எம்.ஃபில், வரை முடித்துவிட்டேன். கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டும் என்பதுதான் லட்சியம். லட்சியத்திற்காகப் போராடுவது ஒருபக்கம் இருந்தாலும், இங்கே வந்து கம்ப்யூட்டரும் தெரிஞ்சிக்கிட்டேன்… டெய்லரிங்கும் தெரிஞ்சிக்கிட்டேன். எது எப்ப கை.. ஸôரி, கால் கொடுக்கும்னு யாருக்குத் தெரியும்?” என்றார் பளிச்சென்று உமா மகேஸ்வரி.

– ‘வொர்த்’ அறக்கட்டளைக்கு இந்த ஓர் உதாரணம் போதுமே!

Posted in Blind, Chennai, deaf, Disabled, Dumb, Education, Handicapped, Madras, Mentally Challenged, NGO, Non-profit, Nonprofit, Physcially Challenged, RCMCD, RCMCT, Red Cross, Rotary, Training, Worth | Leave a Comment »

Chennai: Three new training centers for Fashion & Export design in Garments

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னையில் 2007-க்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம்

சென்னை, மார்ச் 14: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்த ஆண்டுக்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (ஏ.இ.பி.சி), ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் (ஏ.டி.டீ.சி) தலைவர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கும் வகையில் ஏ.இ.பி.சி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. சென்னை கிண்டியில் 1996-ல் முதல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.

இதுதவிர தில்லி, குர்கான், நொய்டா, லூதியானா, ஜெய்ப்பூர், கோல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு பயிற்சி மையத்தை ஏ.இ.பி.சி. தற்போது அமைத்துள்ளது. இதைத் திறந்துவைத்த விஜய் அகர்வால் பேசியது:

தகவல் தொழில் நுட்பத்துறை, ஆயத்த ஆடை தயாரிப்புத் துறை ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் சிறந்து விளங்கும் துறைகளாகும். இவை இரண்டும் அதிக வேலைவாய்ப்பையும், வருவாயையும் ஈட்டித் தரக்கூடிய துறைகளாக உள்ளன.

2006-07-ம் ஆண்டில் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதில் 25 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

2010-11 ஆம் ஆண்டில் ரூ.113 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட 15 லட்சம் கூடுதல் பணியாளர்கள் இத்துறைக்கு தேவைப்படுவர். இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

இதற்காக ஏ.இ.பி.சி. இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் கூடுதலாக 27 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் நடமாடும் பயிற்சி மையங்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆடை தயாரிப்பு குறித்த அடிப்படை பயிற்சிகளை இக்கவுன்சில் அளித்து வருகிறது என்றார் விஜய் அகர்வால்.

தொடக்க விழாவில் ஏ.இ.பி.சி. மூத்த உறுப்பினர் ரஞ்சித் ஷா, கிண்டி ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கே.அகர்வால், முகப்பேர் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Posted in ADTC, AEBC, Chennai, Design, Dress, Export, Fashion, Garments, Madras, NIFT, Tailor, Tailoring, Technology, Training | Leave a Comment »

‘Bus fare increased indirectly in Chennai’ – J Jayalalitha

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

எல்லோ லைன், ப்ளூ லைன், “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் மறைமுக பஸ் கட்டண உயர்வு: ஜெ. குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 7: எல்லோ லைன், ப்ளூ லைன், “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அறிவிக்கப்படாத பஸ் கட்டணத்தை திமுக அரசு மறைமுகமாகச் செயல்படுத்தி வருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

தற்போது சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் “எல்லோ லைன் ப்ளூ லைன்’ என்கிற பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது திணித்து வருகிறது திமுக அரசு. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சாதாரண பஸ்களில் இருக்கும் நடைமுறைக் கட்டணமான குறைந்த அளவு 2 ரூபாய் என்று இருந்ததை 3 ரூபாய் என உயர்த்தி இருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மக்களுக்காக மக்களின் நலனுக்காகதான் ஒரு அரசு செயல்பட வேண்டுமே தவிர மக்களை ஏமாற்றும் அரசு மக்களுக்குத் தேவையில்லை. சாதாரண பஸ்களில் உதாரணமாக 48ஏ என்று இருந்தால் அவற்றுக்கு முன்பாக “எம்’ என்று சேர்த்துவிட்டால் கட்டணம் கூடிவிடுகிறது. எம் என்ற எழுத்தைத் தான் கூடுதலாக சேர்த்து இருக்கிறார்கள் தவிர எந்த விதத்திலும் பஸ்களில் உள்ள வசதிகளை கூட்டவில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என்று முறையாக அறிவிக்காமல் – அப்படி அறிவித்தால் கடும் கண்டனத்தை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற அச்சத்தால் மக்களை ஏமாற்றும் நோக்கில் கூடுதல் கட்டண உயர்வை அமல்படுத்தி இருக்கிறது. இச் செயல் திமுக அரசின் கோழைத்தனத்தையே காட்டுகிறது. இக் கூடுதல் கட்டணம் சம்பந்தமாக பொதுமக்களிடமோ எதிர்க்கட்சிகளிடமோ தொழிற்சங்கங்களிடமோ எவ்வித கருத்தும் கோரப்படவில்லை. ஆலோசனையும் செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. இருந்த போதிலும் கூடுதல் கட்டணத்தை திமுக அரசு மக்களிடம் இருந்து வசூலித்து வருகிறது.

எனது ஆட்சிகாலத்தில் இருந்த எல்.எஸ்.எஸ். சேவையை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவற்றை “எல்லோ’ லைன், ப்ளூ லைன் என்று பெயர் மாற்றி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். எல்.எஸ்.எஸ். சேவையில் குறைந்த கட்டணம் ரூ. 2.50 என்றிருந்தது, தற்போது ரூ. 5 என்று உயர்த்தி உள்ளனர். எல்லோ லைன் பஸ் நிற்கும் இடத்தில் ப்ளூ லைன் பஸ் நிற்காதவாறு செய்து இந்த சிறப்பு பஸ்களில்தான் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகிறது திமுக அரசு.

அதிக கட்டணம் வசூலிக்கப்படும் பஸ்களில் எவ்வித சிறப்பு வசதிகளும் இல்லை. “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும் எல்லோ லைன், ப்ளூ லைன் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும் மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்த மறைமுக கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

==========================================

மாநகர பஸ்களில் எளிதில் செல்ல சென்னையில் 25 இடங்களில் “ஆஃப் லைன்’ டிக்கெட் விநியோகம்

சென்னை, மார்ச் 14: மாநகர பஸ்களில் எளிதில் செல்லும் வகையில் மார்ச் 21-ம் தேதி முதல் சென்னையில் 25 இடங்களில் “ஆஃப் லைன்’ டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) நிர்வாக இயக்குநர் ஆர். பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மாநகர பஸ்களில் டிக்கெட் பெறுவதில் பயணிகளுக்கு பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், “ஆஃப் லைன்’ டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

தாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்கான கட்டணத்தைக் கொடுத்து மூன்கூட்டியே “ஆஃப் லைன்’ டிக்கெட்டைப் பெற்று, அவ் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் செல்லலாம்.

முதற்கட்டமாக

  • தாம்பரம்,
  • குரோம்பேட்டை,
  • பல்லாவரம்,
  • திருவான்மியூர்,
  • சைதாப்பேட்டை,
  • தியாகராயநகர்,
  • மந்தைவெளி,
  • திருவல்லிக்கேணி,
  • சென்ட்ரல்,
  • பிராட்வே,
  • கோயம்பேடு,
  • அம்பத்தூர்,
  • வில்லிவாக்கம் உள்ளிட்ட 25 இடங்களில் ஆஃப்லைன் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

பணிமனைகளிலேயே (டெப்போக்கள்) இந்த டிக்கெட்டுகளைப் பயணிகள் பெறலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை அலுவலர்களிடம் கேட்டு அறியவும் விசாரணை வசதி செய்யப்படும்.

புறநகர் பகுதிகளுக்கு 150 பஸ்கள்: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் எல்கை வரம்பு 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவடைந்துள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதூர், பாலவாக்கம், மகாபலிபுரம், புழல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளுக்கும் கூடுதல் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 புதிய பஸ்கள் மார்ச் 21-ம் தேதிக்குப் பின் ஓரிரு நாள்களில் இயக்கப்படும். இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்துக்குள் மேலும் 75 பஸ்கள் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக தற்போது நடத்துனர்களிடேமே சீசன் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரைபடம் வெளியீடு: சென்னைக்கு வரும் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் புதிய வரைபடம் விரைவில் வெளியிடப்படும்.

இதில் மாநகர பஸ்களின் எண்கள், இயக்கப்படும் வழித்தடங்கள், முக்கிய இடங்கள் மற்றும் இதர விவரங்கள் இடம் பெறும். இந்த வரைபடம் ரூ. 5-க்கு விற்கப்படும். சென்னை எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவில் நேரடி பஸ் வசதி செய்யப்படும்.

இதே போல கோடை விடுமுறையில் வண்டலூர் விலங்குகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார் பாலசுப்பிரமணியன்.
==========================================
மாநகர பஸ்களின் வருவாய் 13% அதிகரிப்பு

மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) பஸ்களின் தினசரி வருவாய் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 2,554 பஸ்கள் உள்ளன. இதில் 2,290 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் தினமும் இயக்கப்படுகின்றன.

பஸ்கள் மூலம் கடந்த ஆண்டு தினமும் சராசரியாக ரூ. 95 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்து தற்போது இந்த பஸ்களின் தினசரி வருவாய் ரூ.1.10 கோடியாக அதிகரித்துள்ளது.

விபத்துக்கான இழப்பீடு, கடன் சுமை ஆகியவற்றால் நிதி நெருக்கடி முன்பு இருந்தது. ஆனால், தற்போது வளர்ச்சிப் பாதையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செல்லத் தொடங்கியுள்ளது.

கடந்த 2006-07-ம் ஆண்டில் மட்டும் ரூ. 120 கோடி இழப்பு ஏற்பட்டது. வரும் 2008-க்குள் இழப்பை ஈடுகட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
==========================================
மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 100 “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள்: சென்னையில் 21-ல் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, மார்ச் 14: சென்னையில் முதன்முறையாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 100 புதிய “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த பஸ்களை மார்ச் 21-ல் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

மாநகர போக்குவரத்துக் கழகம் கடந்த 6 மாதங்களில் 400 புதிய பஸ்களை அறிமுகப்படுத்தியது.

இதில் “எல்லோ லைன்’ என்ற மஞ்சள் வண்ண பஸ்களும், “ப்ளூ லைன்’ என்ற நீல நிற பஸ்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் இருக்கைகளுடன் கூடிய இந்த பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும்.

தற்போது இந்த வரிசையில், “ஆரஞ்ச் லைன்’ என்ற பெயரில் 100 புதிய பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.

“ஏர் சஸ்பென்ஷன்’ வசதியுடன் கூடிய இந்த பஸ்கள் நவீன முறையில் தலா ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தானியங்கிக் கதவுகள்

இதில் பெரும்பாலான பஸ்களில் “தானியங்கி கதவுகள்’ பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கதவுகளை இயக்கும் விசை, பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பஸ் விபத்துகளில் 80 சதவீதம் பேர் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். தற்போது தானியங்கிக் கதவுகளை பஸ்களில் பொருத்துவதன் மூலம் இதுபோன்ற உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இந்த பஸ்கள் இயங்கும். சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில், “பாரத் 3′ திறனுள்ள மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இந்த பஸ்கள் அதிக இரைச்சலின்றி இயங்கும்.

பழைய பஸ்களுக்குப் பதிலாகவும், புதிய வழித்தடங்களிலும் இந்த “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு இந்த ஆண்டு 150 பஸ்களை வாங்க அரசு ரூ.40 கோடி அனுமதித்துள்ளது. இந்த பஸ்கள் அனைத்தும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டும் பணிமனைகளில் உருவாக்கப்படும்.

இதில் முதற்கட்டமாக 100 ஆரஞ்ச் லைன் பஸ்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ்களை அறிமுகம் செய்யும் விழா, சென்னை தரமணியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி இந்த பஸ்களின் சாவிகளை, ஓட்டுநர்களுக்கு வழங்க உள்ளார்.

இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

ஓட்டுநர்களுக்கு புதிய பயிற்சி தடம்

இதுதவிர தரமணியில் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் பயிற்சித் தடத்தையும் (டிரெய்னிங் டிராக்) முதல்வர் திறந்து வைக்கிறார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு 50 சொகுசு பஸ் சேவை

சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த முறையில் 50 சொகுசு பஸ்களை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை, தரமணி, ஸ்ரீபெரும்புதூர், புழல், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்லும் வகையில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கிலோ மீட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கட்டணமாக வழங்க இந்நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

காலை, மாலை இருவேளைகளிலும் முக்கிய நேரத்தில் மட்டுமே இந்த பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும்.

இதன்பின் மற்ற நேரங்களில் இந்த பஸ்கள் சாதாரண கட்டணத்தில் பொதுமக்களின் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இந்த பஸ்களில் சொகுசு இருக்கைகள், அகலமான கண்ணாடி ஜன்னல்கள், தானியங்கிக் கதவுகளும் பொருத்தப்படும்.

=============================================

“சென்னையில் ஷேர் ஆட்டோக்களுக்கு இனி பர்மிட் கிடையாது’

சென்னை, மார்ச். 15: சென்னை நகரில் இனி ஷேர் ஆட்டோக்களுக்கு மேலும் பர்மிட் வழங்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

ஷேர் ஆட்டோக்களுக்கு புதிய பகுதிகளில் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதால் மாநகர பஸ்களின் வருமானம் குறைகிறது. இதைத் தவிர்க்க ஷேர் ஆட்டோக்களுக்கு இனி புதிய வழித்தடங்களில் பர்மிட் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: திருத்திய ஆட்டோ மீட்டர் பொருத்தாத ஆட்டோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேசிய பிறகு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப திருத்திய மீட்டர் பொருத்துவதற்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கெடு முடிவடைந்துள்ளதால், இனி திருத்திய மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் காஸ் மூலம் ஆட்டோக்களை இயக்கும்போது, அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தாழ்தள சொகுசு பேருந்து: சென்னை நகரில் இம்மாதம் 21-ம் தேதி முதல் தாழ்தள சொகுசு பேருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அத்துடன் நெரிசல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கென 20 ஒப்பந்த ஊர்திகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கத் திட்டமிட்டுள்ளது.

பணி நியமனம்: அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 2017 ஊழியர்களை முழுமையாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிபதி மொகோபாத்யாய குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் அவர்களை பணியில் நியமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் நேரு.

=======================================================

சென்னையில் இருந்து 18 வழித்தடங்களில் 44 புதிய பஸ்கள்: மு.க.ஸ்டாலின் 21-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, மார்ச்.19-

சென்னையில் மேலும் 100 பஸ்கள் புதிதாக விடப் படுகின்றன. வயதானவர்கள் எளிதாக ஏறும் வகையில் தாழ்தள சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

உள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் கே.என் நேரு, தா.மோ.அன்பரசன், ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். புதிய பஸ் தொடக்க விழா ஐ.ஆர்.டி வளாகத்தில் 21-ந் தேதி மாலை 5-மணிக்கு நடைபெறுகிறது.

புதிதாக விடப்படும் பஸ்களில் பெரும்பாலானவை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. 18புதிய வழித்தடங்களில் 44 பஸ்கள் விடப்படுகின்றன. இது தவிர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புதிய பஸ்கள் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் நின்று செல்லும். நிறுத்தங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் வேகமாக சென்றடையும் வகையில் பயணநடை வகுக்கப் பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையத்துக்கு 5 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்படுகின்றன. சென்னை புறநகர் பஸ்நிலையம், ஆவடி, வள்ளலார் நகர் ஆகிய இடங்களில் இருந்து பெரிய பாளையத்துக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதே போல அடையாரில் இருந்து மாமல்லபுரத்துக்கு கிழக்கு கடற்சாலை வழியாக 4 பஸ்களும் பழைய மாமல்ல புரம் சாலை வழியாக 4 பஸ்களும் விடப்படுகின்றன. சைதாப்பேட்டையில் இருந்து வல்லக்கோட்டைக்கு கிண்டி, போரூர், பூந்தமல்லி, செம்பரபாக்கம், இருங்காட்டு கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வல்லம் வழியாக இயக்கப்பட உள்ளன.

பிராட்வேயில் இருந்து படப்பை, திருப்போரூருக்கு தலா 4 பஸ்களும், குன்றத் தூருக்கு 2பஸ்களும் விடப்படுகின்றன. அஸ்தினாபுரம்-ஆவடி, அடை யார்-கேளம்பாக்கம் இடையேயும் புதிய வழித்த டங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து சோமங்கலம், மாடம் பாக்கத் துக்கு தலா ஒருபஸ் களும், மின்ட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு 4பஸ்களும் விடப்படுகின்றன. மூலக்கடை, புழல், செங்குன்றம், காரனோடை, தச்சூர் கூட்டுச்சாலை, புதுவயல், கவரபேட்டை வழியாக கும்மிடிபூண்டிக்கு சென்று வரும். செம்மஞ்சேரியில் இருந்து பிராட்வேக்கு புதிய வழித்தடத்தில் பஸ் விடப் படுகிறது.

=================================================================================
மாநகர பஸ்ஸில் இயந்திரம் மூலம் டிக்கெட் தாம்பரம்}பிராட்வே வழித்தடத்தில் சோதனை முறையில் அறிமுகம்

சென்னை, மார்ச் 22: சென்னை மாநகர பஸ்களில் இயந்திரம் மூலம் பயணச்சீட்டு (டிக்கெட்) வழங்கும் முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது.

தாம்பரம் – பிராட்வே (21 ஜி) வழித்தடத்தில் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் பஸ் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு, பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை நகர பஸ்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அவர்களுக்கு டிக்கெட் வழங்குவதற்குள் நடத்துனர்களுக்கு போதும் போதும் என்றாகி விடும்.

டிக்கெட் வழங்குவதற்காக, சில பஸ்கள் ஸ்டேஜ் வருவதற்கு முன்பு வெகு நேரம் சாலையோரம் நிறுத்தப்படுவதும் அப்போது அலுவலகம் செல்வோர் முணுமுணுப்பதும் பயணிகள்-நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று.

மேலும், டிக்கெட்டுகளை நடத்துனர்கள் எச்சில் தொட்டுத் தருவதாக பயணிகள் பலரும் புகார் கூறுவது வாடிக்கை.

இந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படுவது போல, இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் ஒருபகுதியாக, இந்தத் திட்டம் தாம்பரம் – பிராட்வே (21 ஜி) வழித்தடத்தில் இயங்கும் 5 பஸ்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இயந்திரத்தில் என்ன வசதி: டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் 500 வழித்தடங்கள் வரை சேமித்து வைக்க வழி உண்டு. முதலில், இயந்திரத்தை இயக்கும் நடத்துனர், பயணிகள் குறிப்பிடும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். இதன் பின்பு, எந்த பஸ் ஸ்டாப் என்பதற்கான பொத்தானை அழுத்த வேண்டும். பின், “என்டர்’ பொத்தானை அழுத்தினால் டிக்கெட் அச்சாகி வெளியே வரும். கையடக்கக் கருவி என்பதால் நடத்துனர்கள் அதனை எளிதாக எடுத்துச் செல்லலாம். எந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அதிகம் ஏறி, இறங்குகின்றனர் என்பது போன்ற தகவல்களை இந்த இயந்திரத்தின் மூலம் எளிதில் அறிய முடியும்.

ஒரே நேரத்தில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் வழங்க முடியும் என்பது இயந்திரத்தின் கூடுதல் சிறப்பு.

பிற வழித்தடங்களில் எப்போது?: சோதனை அடிப்படையில் தாம்பரம் – பிராட்வே வழித்தடத்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற வழித்தடங்களுக்கும் இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறை விரிவுபடுத்தப்படும் என்றார் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

=================================================================================

தமிழகத்தில் மேலும் 1,000 மினி பஸ்கள்: நாளை பட்ஜெட்டில் அறிவிப்பு

பா. ஜெகதீசன்

சென்னை, மார்ச் 22: மக்களுக்குக் கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் மேலும் 1,000 தனியார் மினி பஸ்களை இயக்கும் திட்டம் மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த ஆயிரம் பஸ்களில் 500 பஸ்களை சென்னைப் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான அறிவிப்பும், மொத்தம் எத்தனை மினி பஸ்கள் இயக்கப்படும் என்கிற விவரமும் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கலாகும் அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

க்ஷமினி பஸ் வந்த பாதை:/க்ஷ போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி அளிப்பதற்காக 1998-ல் மினி பஸ்களை இயக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆய்வை மேற்கொண்டது. 3,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க வாய்ப்பு உள்ளது என்பது அப்போது தெரிய வந்தது.

தமிழகத்தில் 1,100 மினி பஸ்களை இயக்குவது தொடர்பாக 1.6.2005-ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசின் ஆணைக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. பின்னர் அத்தடையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.

அதைத் தொடர்ந்து, மினி பஸ்களை எந்தெந்த வழித் தடங்களில் இயக்குவது, அவற்றுக்கான கட்டண விகிதங்கள் உள்ளிட்டவை குறித்து அரசு ஆலோசனை நடத்தியது.

க்ஷஅரசின் நிலை:/க்ஷ இந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, மினி பஸ்கள் தொடர்பான தனது நிலையை ஆளுநர் உரையில் அப்போதே தெளிவுபடுத்தியது. “இந்த அரசால் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்’ என அதில் தெரிவித்திருந்தது.

க்ஷசென்னையில்…:/க்ஷ சென்னையில் 3 வழித்தடங்களில் 500 மினி பஸ்களை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

(1) கோயம்பேடு -பூந்தமல்லி நெடுஞ்சாலை, (2) கிழக்குக் கடற்கரைச் சாலை -திருவான்மியூர் தெற்கு, (3) பழைய மாமல்லபுரம் சாலை -திருவான்மியூர் பஸ் நிலையம் என 3 முக்கிய வழித்தடங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மினி பஸ்கள் இயங்கும்.

க்ஷமாவட்டங்களில்…:/க்ஷ மினி பஸ் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக தலா 100 மினி பஸ்கள் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலாக மினி பஸ்கள் விட திட்டமிடப்பட்டுள்ளது.

இதர 19 மாவட்டங்களில் இயக்கப்படும் மினி பஸ்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்குமா என்பது நிதிநிலை அறிக்கையில் தெரியும்.
=================================================================================

Posted in ADMK, Anbarasan, Automatic, Blue Line, Bus, Chennai, Depot, Diesel, DMK, Expenses, Express, fare, Fuel, Gas, Government, Inflation, InfoTech, IT, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, KN Nehru, Luxury, M Service, Madras, Map, Ministry, MK, MK Stalin, MTC, Nehru, Offline, Orange Line, Pallavan, Petrol, PP, Price, PTC, Rise, service, SEZ, Ticketing, Tickets, Training, Tranportation, Transport, Yellow Line | Leave a Comment »

IAF pilot killed in air show rehearsals crash

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: விமானி சாவு

 பெங்களூர் எலகங்கா விமானப் படை பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கிக் கிடக்கும் விமானப் படை ஹெலிகாப்டர். இவ் விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார்.

பெங்களூர், பிப். 3: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை விமானி இறந்தார்; மற்றொரு விமானி காயமடைந்தார்.

பெங்களூர் எலகங்கா விமானப்படை பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரில் (ஏஎல்எச்) விமானப்படை விமானிகள் பிரியே சர்மா, வி.ஜெய்டெலே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டு 9-வது ஓடு பாதையில் தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. இதைக் கண்காணித்த விமானப்படையினர் தீயணைப்பு வாகனத்துடன் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரியே சர்மாவையும், ஜெய்டேலேயையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் பிரியே சர்மா வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெய்டேலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்பரை ஓட்டிச் சென்ற விமானிகள் இருவரும் விமானப்படையில் சாகசங்கள் நிகழ்த்தும் “சரங்க்’ படைப்பிரியைச் சேர்ந்தவர்கள்.

பெங்களூரில் பிப்ரவரி 7-ம் தேதி சர்வதேச விமான கண்காட்சி துவங்குவதையடுத்து சரங்க் படைப் பிரிவினர் எலகங்கா விமான பயிற்சி நிலையத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நீதிமன்றம் (சிஓஐ) விசாரணை நடத்தும். இந்த விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார்.

Posted in advanced light helicopter, Air Force, ALH, Bangalore, Chopper, crash, Defense, Dhruv, HAL, Helicopter, Hindustan Aeronautics Limited, IAF, Indian Air Force, pilot, Priye Sharma, rehearsals, Squadron Leader, Training, V Jetley, Wing Commander, Yelahanka | Leave a Comment »