புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 மார்ச், 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்
![]() |
![]() |
தேர்தல் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது |
இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகண சபையின் முதலாவது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழனன்று ஆரம்பமானது.
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 37 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை அடுத்த வியாழக்கிழமை வரை மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலையொட்டி வீதித் தடைகளும் வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படும் 35 உறுப்பினர்களுடன் கூடுதல் வாக்குககளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு போனஸ் உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்கான தேர்தலின்போது, 9 லட்சத்து 82 ஆயிரத்து 728 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.
1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து திருகோணமலையில் வரதராஜபெருமாள் அவர்கள், ஒருங்கிணைந்த அந்த மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் தலைமையிலான மாகாணசபையின் ஆட்சிமன்றம் சுமார் ஒரு வருட காலம் செயல்பட்டது.
அதன் பிறகு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தேர்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் முடங்கிப்போயின.
இதனிடையே கடந்த ஆண்டு இலங்கையின் உச்சநீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் தனித்தையாக பிரிக்கவேண்டும் என அளித்த தீர்ப்பை அடுத்து இவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன.
இவ்வாறு பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைக்கான முதல் தேர்தல் வரும் மேமாதம் நடைபெறவுள்ளது. .
ஏற்கனவே மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள், மத்திய அரசுகளினால் படிப்படியாக பறிக்கப்பட்டுள்ளதாக கூறும் வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எஸ்.எஸ்.எம் ஹனீபா, நடைபெறவிருக்கும் தேர்தல் முதலமைச்சர் தெரிவுக்கான ஒன்றாகவே தான் நோக்குவதாகக் குறிப்பிடுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையார் டி.கிருஷ்னானந்தலிங்கம் தெரிவிக்கிறார்.
‘பிரபாகரன்’ திரைப்பட இயக்குநர் இலங்கையில் உண்ணாவிரதம்
![]() |
![]() |
மருத்துவமனையில் இயக்குநர் பீரிஸ் |
சென்னையில் ஜெமினி ஸ்டூடியோவுக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இயக்குநர் துஷாரா பீரிஸ், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினையும் ஆரம்பித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
பிரபாகரன் என்ற தனது திரைப்படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்போதே, சுமார் 200க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இவர், தனது படச்சுருள்களும், பிரதிகளும் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்திய அரசும், இலங்கை அரசும் இதில் உடனடியாகத் தலையிட்டு தனது படச்சுருள்களை தனக்கு மீளப் பெற்றுத்தரும் வரை தனது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
தனது படம் தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை என்றும், இது தமிழர் விரோதத் திரைப்படம் அல்ல என்றும் தெரிவித்த துஷாரா பீரிஸ், 30 வருடகால யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிங்கள, தமிழ் பாமர மக்களே என்பதனை எடுத்துக்காட்டுவதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.
இதனிடையே சர்ச்சைகுரிய இந்தத் திரைப்படம் வியாழனன்று சென்னையில் தமிழ் ஆர்வலர்களுக்குத் திரையிடப்பட்டது. தமிழக திரைப்படத் துறையைச் சேர்ந்த பலருடன் இந்தப் படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
பிரிட்டனில் தஞ்சம்கோரும் அகதிகள் நிலை மோசம்: சுயாதீன ஆய்வு முடிவு
![]() |
![]() |
அகதிகள் நிறைய பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள் |
பிரிட்டனில் அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் விவகாரம் பற்றி ஆராய்ச்சி செய்த சுயாதீன ஆணையம் ஒன்று, மனிதாபிமான மற்றும் நாகரீக வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தில் இருக்கவேண்டிய தரத்திலல்லாமல் மோசமான நிலையை அகதிகள் எதிர்கொள்ள நேரிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அரங்கில் பிரிட்டனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயம் இது. தஞ்சம் கோருவோர் தொடர்பான பிரிட்டனின் கொள்கைகள் குறித்து நடத்தப்பட்ட இந்த சுயாதீன ஆராய்ச்சியில் அதிர்ச்சிதரும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள், ஆர்வலர்கள் என்று பல் வேறு தரப்பினரோடு. தஞ்சம் கோரிய அகதிகளும் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டனர். அவர்களது வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டு இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிக்கையின் முடிவுகளை பிரிட்டனின் எல்லைகள் மற்றும் குடிவரவுத் துறை நிராகரித்துள்ளது. உறுதியாகவும் அதே நேரம் மனிதாபிமானத்துடனும் தமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும். கவனமாகவும் பரிவுடனும் தாங்கள் அகதிகளைக் கையாளுவதாகவும் அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 மார்ச், 2008
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி முடிவு
![]() |
![]() |
அஸாத் சாலி |
எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் வியாழனன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதில் போட்டியிடப்போவதாக முடிவு செய்திருக்கின்றது.
இம்மாத முற்பகுதியில், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பாதுகாப்பு காரணங்களைக் கூறி அதில் பங்குபெற ஐக்கிய தேசியக் கட்சி மறுத்திருந்தது.
ஆனால் தற்போது அங்கு இடம்பெற உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்பதற்கு கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயருமான அஸாத் சாலி, தமிழ்பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு முயற்சியாகவே கட்சி இதில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தமது கட்சி முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்த அஸாத் சாலி, இந்தத் தேர்தலின் தானும் ஒரு முக்கிய வேட்பாளராக போட்டியிடப்போவதாகத் கூறினார்.
வவுனியா தூப்பாக்கிசூட்டில் சிவிலியன்கள் பலி
இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை இராணுவ முன்னரங்க பகுதியை நோக்கி விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து தப்பிவந்ததாகத் தெரிவிக்கப்படும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது இருதரப்பிலிருந்தும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3 பேர் காயமடைந்துள்ளனர், 5 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் தமிழர் என்றும் ஏனைய அனைவரும் சிங்களவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை இராணுவத்தினர் உலங்கு வானூர்தி மூலமாக உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் இராணுவ பொலிசாரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ள தகவல்களின்படி, தாங்கள் மொத்தம் 12 பேர் என்றும், தங்களை 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி, 3 வள்ளங்களில் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று முரசுமோட்டை – வள்ளிபுனம் பகுதியில் தங்களைத் தடுத்து வைத்திருந்ததாகக் கூறியிருக்கின்றனர்.
அங்கிருந்து 4 தினங்களுக்கு முன்னர் தப்பிவந்து, புதனன்று பகல் ஓமந்தை முன்னரங்கப் பகுதியில் இராணுவ பகுதியை நோக்கி வந்தபோது தங்களைக் கண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், எனினும் தாங்கள் தொடர்ந்து ஓடியபோது இராணுவத்தினரும் தங்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் மன்னார் ஆலங்குளம் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கத் தளங்கள் மீதும், கிளிநொச்சி விசுவமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் வள்ளங்கள் கட்டும் தளத்தின் மீதும் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் உலங்கு வானூர்திகளும், தாக்குதல் விமானங்களும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தி அவற்றை அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
மட்டக்களப்பில் அதிரடிப் படையினர் மீது கிளேமோர் தாக்குதல்
![]() |
![]() |
மருத்துவமனையில் காயம்பட்ட பெண்ணொருவர் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டு தாக்குதல் சம்பவத்தில் 2 பொலிசார் கொல்லப்பட்டுள்ளார்கள்.
சம்பவத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 4 பேர், 3 சிவிலியன்கள் என 7 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்த ஜப்பானிய உதவி நிறுவனக் குழுவொன்றின் வாகனத் தொடரனிக்கு பாதுகாப்பின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிசாரே இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட வாகனத் தொடரனியும் வழமை போல் காலை நேர வீதிக் கண்கானிப்பில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் வாழைக்காலை சந்தியை அடைந்தபோது, தூரத்திலிருந்து இந்த கிளேமோர் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என பாதுகாப்பு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் பற்றிய சிங்களப் படம் இயக்கியவர் சென்னையில் ‘தாக்கப்பட்டார்’
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்த படத்தை இயக்கிய இலங்கை திரைப்பட இயக்குநர் துஷாரா பீரிஸ் அவர்கள், தமிழகத் தலைகர் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனர் சுப.வீரபாண்டியன் அவர்கள், இந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பது குறித்தும், தங்களின் எதிர்ப்பு ஏன் என்பது குறித்தும் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
—————————————————————————————————————–
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராஜேந்தர் தனது தமிழக அரச பதவியை இராஜினாமா செய்தார்
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தான் வகித்துவந்த தமிழக அரசின் சிறு சேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா கைகொடுப்பதாகக் குற்றஞ்சாட்டும் ராஜேந்தர் அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குவதையும், பயிற்சிகளை வழங்குவதையும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கைத் தமிழர் ஒருவர்தான் கொலை செய்தார் என்பதற்காக, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையும் புறக்கணிப்பது நியாயமல்ல என்றும் ராஜேந்தர் கூறினார்.
தான் எந்த விதமான வன்முறை இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவே தான் குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் என்பது ஒரு அங்கம் என்றும், அது மாத்திரமே இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்தத் தமிழினம் என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் ராஜேந்தர் தெரிவித்தார்.
அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கடற்புலிகளின் படகை மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை கூறுகிறது
![]() |
![]() |
கடற்புலிகள் |
இலங்கையின் வடகிழக்குக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் படகுத் தொகுதி ஒன்றுடன் தாம் சண்டையிட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கடற்புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ள போதிலும், அதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்று அது எதுவும் கூறவில்லை.
கடற்படைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு, அதில் பத்து சிப்பாய்கள் கொல்லப்பட்டதை அடுத்த சில தினங்களில் இந்த மோதல் நடந்துள்ளது.
அந்தக் கடற்படைப்படகை தமது தற்கொலைக் கடற்கரும்புலிகள் தாக்கியதாக விடுதலைப்புலிகள் முன்னர் கூறியிருந்தனர்.
ஆனால், அந்தப் படகு கடற்கண்ணி ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்தது.