Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘TR Ramanna’ Category

EV Saroja – Lifesketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

ஈ.வி.சரோஜா!

எஸ்.விஜயன்


தமிழ் திரைப்பட ரசிகர்களின் முன்னாள் கனவு கன்னியரில் ஒருவர் நடிகை ஈ.வி. சரோஜா. கடந்த நவ., 3, ’06 அன்று காலமான அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி, “தஞ்சை மாவட்டத்தில் நான் வாழ்ந்த திருவாரூருக்கு அருகில் உள்ள எண்கண் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஈ.வி.சரோஜா!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த சரோஜா, தன் ஆறாவது வயதிலேயே நடனம் பயின்று அரங்கேற்றம் செய்தவர். 1948ல் தன் 13வது வயதில் சென்னை வந்தவர், 1952ல், தன் 15வது வயதில் “என் தங்கை’ யில் அறிமுகமானார். அதில், அவர் எம்.ஜி. ஆருக்கு தங்கையாக நடித்தார். இதற்கு பின் சரோஜா நடனத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களாகவே பார்த்து நடித்தார். குலேபகாவலி சந்திர பாபு, காத்தவராயன், மதுரை வீரன், (“வாங்க… மச்சான் வாங்க வந்து வழியைப் பார்த்து போங்க…’ என்ற பாடல் பெரிதும் பிரபலம்) புதுமைப் பித்தன், படிக்காத மேதை (சிவாஜிக்கு தங்கை), பாக்யலட்சுமி (ஜெமினி ஜோடி) பிள்ளைக்கனியமுது மற்றும் மணப்பந்தல் (எஸ்.எஸ். ஆர்.ஜோடி) நல்லவன் வாழ்வான் (நம்பியார் ஜோடி)

“வீரத்திருமகன்’ (புரட்சிப் பெண்ணாக வருவார். “கேட்டது கிடைக்கும்… “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…’ ஆகிய பாடல்களில் வரும் சரோஜாவின் நடனம் பிரபலம்) ஆகிய தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் 30 படங்களிலும், கன்னடம், சிங்களம் (வட இந்திய நடனக் கலைஞர் கோபி கிருஷ்ணா நடித்த படம்) ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். நாகேஸ்வர ராவுடன் மட்டும் 10 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, “இத்ரு மித்ரலு’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

மீன்களை போன்ற கண்கள் என்பார்களே… அது ஈ.வி. சரோஜாவுக்கு இருந்தது. அவரது கண் அசைவுக்கே, அதிலும் புருவங்களை அவர் ஏற்றி இறக்கும் போது ரசிகர்களெல்லாம் ஆர்ப்பரிப்பர். நடனத்தில் அவரது வேகம் அபாரமானது. “குலேபகாவலி’யில், “குல்லா போட்ட நவாப்பு… செல்லாதுங்க ஜவாப்பு…’ என்ற பாடலில் சந்திர பாபுவுடன் அவரது நடன அசைவுகள் ரசிகர்களையும் ஆடச் செய்யும். எத்தகைய நடனப் பாடல் என்றாலும் அதில் சரோஜாவின் நடன அசைவுகளில் துளியும் விரசம் இருக்காது.


“உத்தம புத்திரன்’ படத்தில் சிவாஜியுடன், “யாரடி நீ மோகினி…’ பாடலில் ஹெலன் நடனம் ஆடியிருப்பார். அந்தப் பாடலில் நடிக்க முதல் அழைப்பு வந்தது ஈ.வி. சரோஜாவுக்குத் தான். அதில், ஆடை கொஞ்சம் குறைந்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட போது, மறுத்து விட்டார் சரோஜா.

சரோஜா நல்ல அழகி என்பதால் அவருக்கு கதாநாயகியாக நடிக்க ஆரம்பம் முதலே வாய்ப்புகள் வந்தன. ஆனால், பெரும்பாலும் அவற்றை தவிர்த்து வந்திருக்கிறார்.

கதாநாயகர்களுடன் டூயட் பாடுவது, நெருங்கி நடிப்பதிலெல்லாம் அவருக்கு உடன்பாடில்லை. அவரிடம் இருந்த கூச்ச சுபாவமும் அதற்கு ஒரு காரணம், அவர் கடைசியாக நடித்த படம், “கொடுத்து வைத்தவள்!’ அவரது சகோதரர் ஈ.வி. ராஜன், ஈ.வி.ஆர்., பிக்சர்ஸ் என்ற பேனரில் தயாரித்த இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். தன் சகோதரருக்காக எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுக்கிறார் என்பதால் நாயகியாக நடிக்க சம்மதித்தார் சரோஜா.

உலகமெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை மேடையில் நடத்தியிருக்கிறார் சரோஜா. இயக்குனரும், டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பியுமான டி.ஆர்.ராமண்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

பொது நிகழ்ச்சிகளில் சரோஜா பங்கேற்று வந்தாலும், மேடையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் கடைசி வரை தவிர்த்தே வந்திருக்கிறார்.

Posted in Anjali, Biosketch, EV Saroja, Kollywood, Lifesketch, Madurai Veeran, Memoirs, MGR, Sivaji, Tamil Cinema, Tamil Movies, TR Rajakumari, TR Ramanna | Leave a Comment »