Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Touch’ Category

Raman Raja: Science & Technology – New Inventions and Innovations: Research and Developments for Practical use

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

நெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை!

ராமன் ராஜா – தினமணிக் கதிர்

2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:

* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்!

* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது? இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும்! கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.

ஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)

* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.

* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்!

* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.

* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்!

ஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ?

* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.

*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான்! நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.

இந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.

ஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.

இப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.

Posted in Audio, Buildings, Chicago, Civil, computers, Computing, Conservation, Construction, Design, designers, Development, DSP, Electricity, energy, Environment, Find, Fuels, Hardware, Hitech, Innovations, Invent, Invention, M$, Microsoft, MP3, MS, music, Nano, Nanotech, Nanotechnology, Natural, Palm, Plastics, Pollution, Power, R&D, Recycle, Research, RnD, Science, Solar, Songs, structures, Surface, Tall, Tech, Technology, Touch, Touchscreen | Leave a Comment »

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »