புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008
இலங்கையில் மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் கடும் மோதல்கள்
இலங்கையின் வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடந்துவருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை, மடு மாதா தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து எறிகணைகளை வீசி வருவதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர் 1999இல் அங்கு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், அதனை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர், மடுமாதா ஆலய வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியை சுற்றி கண்ணிவெடிகளை அவர்கள் புதைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த மோதல்கள் காரணமாக மடுமாதா தேவாலயம் மற்றும் அதனைச் சுற்றிவரவுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே வவுனியா கூமங்குளம் பகுதியில் இரண்டு பொதுமக்கள் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மடு தேவாலயம் – பின்னணித் தகவல்கள்
சுமார் முப்பது வருடமாகத் தொடருகின்ற இலங்கையின் இந்த உள்நாட்டு மோதலில், முதல் தடவையாக, அந்த மடு தேவாலயத்தின் முக்கிய திருச்சொரூபமான கன்னி மரியாளின் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆலயத்தில் இருந்து வியாழனன்று அகற்றப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்கு பொறுப்பான மன்னார் மறைமாவட்ட ஆயரான ராயப்பு ஜோசப் அமைதி வேண்டி வெள்ளிக்கிழமையன்று ஒருநாள் உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் அறிவித்துள்ளார்.
இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற இந்த வழிபாட்டிடத்தை இராணுவத்தினாலோ அல்லது விடுதலைப்புலிகளாலோ பாதுகாக்க முடியாது போயுள்ளது. இந்நிலையில் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூபத்தை அகற்றுவதற்கான ஆயரின் முடிவானது அங்கு நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளமாகும்.
டச்சுக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேவாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்டது. தம்மை அழிவிலிருந்து காப்பாற்றியது இந்த கன்னிமரியாளின் சொரூபம்தான் என்று அவர்கள் நம்பினார்கள்.
மடு தேவாலயத்தின் வரலாறு மற்றும் தற்போது அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008
மடு மாதா திருவுருவச்சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது
இலங்கையின் வட பகுதியில் தொடருகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக, அங்கு பிரபலமான மடு மாதா தேவாலயத்தின் முக்கிய திருவுருவச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழுகின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களால் வணங்கப்படுகின்ற இந்த மடு மாதா தேவாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டதாகும்.
மடுவை நோக்கி வீசப்படுகின்ற கடுமையான எறிகணை வீச்சுக்கள் காரணமாக மடு மாதா தேவாலயத்தை அண்டியிருந்த மக்கள் எல்லாம் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
![]() |
![]() |
தேவாலய வளாகத்துக்கு அருகில் பல எறிகணைகள் வந்து வீழ்ந்துகொண்டிருப்பதாகவும், இந்த நிலையில் அங்கு இருப்பது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்த பங்கிற்கான மதகுருமார், தற்போது ஆலயத்தின் முக்கிய திருவுருவச் சிலையையும் அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்வதாகவும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயரான இராயப்பு ஜோசப்பு தமிழோசைக்குத் தெரிவித்தார்.
அந்தப் பகுதியில் இருந்து தேடிவரும் மக்களுக்கு அருள்பாலித்து வந்த மாதா சிலையை அங்கிருந்து அகற்ற நேர்ந்தமை தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆயர் கூறினார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கிழக்கு மாகாணத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்தது
![]() |
![]() |
மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர் |
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைக்கான தேர்தல்களில் 37 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்புகளில், 1342 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இலங்கை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 19 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 4 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
![]() |
![]() |
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள் |
மட்டக்களப்பு மாவட்டத்தில், 11 உறுப்பினர்களுக்கான போட்டியில், 14 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இவற்றில் 2 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஒரு சுயேச்சைக்குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில், 14 அரசியல் கட்சிகளும், 26 சுயேச்சைக்குழுக்களும் அங்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. ஆனால், அவற்றில் 11 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மாத்திரமே அங்கு ஏற்கப்பட்டிருந்தன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா; கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குகின்றனர்
இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் புதனன்று தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் தாம் மூவரும் தலைமை வேட்பாளர்களாகப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு அதன் சார்பில் எதிர்வரும் போட்டியிடப்போவதாகத் அறிவித்துள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கட்சியின் தலைமைப்பீடம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட எடுத்த முடிவினாலேயே தான் அரசுடன் இணைந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென்பதே முஸ்லிம் மக்களின் பேரவா என்றும் இதனை அடைவதற்கு தான் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.
போட்டியிடப்போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இதனிடையே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதனன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு புதனன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த விருப்பமில்லாத இலங்கை அரசு,, பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு கிழக்கில் திணிக்க முயல்வதாகவும், இதன் ஒருபடியாகவே அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரைக் கையாளாக அரசு வைத்திருப்பதாகவும், இவர்கள் மூலம் பலாத்காரமாகவும் வற்புறுத்தியும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறமுயல்வதாகவும், கூட்டமைப்பு குற்றம்சாட்டி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மன்னாரின் மடுப் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை
![]() |
![]() |
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடு தேவாலயத்துக்கு அருகில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் தொடரும் நிலையில், மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி புதன்கிழமையன்று மன்னார் நகரில் அமைதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், மடுப்பகுதியை சமாதான வலயமாக்க இலங்கை ஜனாதிபதியிடம் கோரும் மகஜர் ஒன்றை மன்னார் அரச அதிபரிடம் கையளித்தனர்.
இதே கோரிக்கையை அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைத்தனர். புனித பாப்பரசருக்கும் அங்குள்ள நிலைமைகள் குறித்த தகவல்களை தாம் அனுப்பி வைத்தாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் வில்பத்து சரணாலயப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.