இலங்கையில் கட்சித் தாவல்
இலங்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் கட்சி மாறி ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து பதவி பெற்றுள்ளதன் விளைவாக இலங்கை அரசியலில் புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒன்றுபட்ட தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவை உண்டாக்கலாம் என்று கருதப்படுகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் கட்சித் தாவல் எதிர்பார்க்காமல் நிகழ்ந்த ஒன்று அல்ல. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் இடையே கடந்த அக்டோபரில் ஒத்துழைப்புக்கான உடன்பாடு ஏற்பட்டது. நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் ஒன்றுபட்டு தீர்வு காண்பது என்பதே இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சம். அப்போதிலிருந்தே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் அரசில் பங்கு பெற வேண்டும் என்று கோரி வந்தனர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி பிளவுபட்டது. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியில் பகிரங்கமாகவே எதிர்ப்பு கிளம்பியது. இவரை எதிர்த்தவர்கள் கட்சியில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஏற்கெனவே கோரி வந்தவர்கள். இவர்கள் ஆளும் கட்சிக்குத் தாவுவதைத் தடுக்க கடைசி நேரம்வரை முயற்சி நடந்தது. புத்த பிக்குகளும் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் ஆளும் கட்சிக்குத் தாவ விரும்பியதாகவும் ஆனால் 20 பேருக்கு மேல் வர வேண்டாம் என்று இலங்கை அதிபர் ராஜபட்சய கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 20 பேருக்கு மேல் கட்சி மாறினால் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிட்டிருக்கும். அப்போது தீவிரப் போக்குக் கொண்ட சிங்களர் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துவிடும். இதை ராஜபட்சய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் கூட்டு சேர்ந்துதான் இலங்கை சுதந்திரக் கட்சியானது ஆட்சியைப் பிடித்தது. இனி அக் கட்சியை ராஜபட்சய நம்பி நிற்க வேண்டி இராது. அந்த நிலை வரக்கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஜனதா விமுக்தி பெரமுணா தீவிரமாக எதிர்த்தது.
இதற்கிடையே கட்சி தாவிய எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இப்போது 20 எம்.பி.க்கள் கட்சி தாவியுள்ளதன் மூலம் ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது என்பது உண்மையே. ஆனால் ராஜபட்சயவுக்கு தமது கட்சிக்குள் தலைவலி காத்து நிற்கிறது என்று கூறலாம். இதுவரை வெளியுறவு அமைச்சராக இருந்த சமரவீரா, அதிபர் ராஜபட்சயவுடன் கருத்து வேறுபாடு கொண்டவர். இப்போது சமரவீராவிடமிருந்து வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க, இலங்கை அரசில் தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 பேர் காபினட் அந்தஸ்து கொண்டவர்கள். சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு இவ்வளவு அமைச்சர்கள் தேவையா என்று கேட்கலாம். ஆனால் ஆட்சி அதிகாரம் என்று வரும்போது இதெல்லாம் கவனிக்கப்படுவதில்லை.
கட்சித் தாவலைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில், ஆளும் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு முறிந்து விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஆகவே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எதிர்க்கட்சியினர் அரசுடன் ஒத்துழைக்க முன்வராமல் போகலாம்.