Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Thumbai’ Category

Mooligai Corner: Herbs & Naturotherapy – Thumbai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

மூலிகை மூலை: நஞ்சுக்கு எதிரி தும்பை!

விஜயராஜன்

எதிர் அடுக்குகளில் அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையுடையது. இது இரண்டு அடிக்குமேல் வளராத சிறுசெடி இனமாகும். இதன் வேர்கள் மூன்று அங்குலத்துக்கு மேல் வளராத குத்துச் செடிக்கு எப்படி வேர் இருக்குமோ அதைப் போன்றுதான் இருக்கும். நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளை உடையது. இந்தத் தண்டுப் பகுதியின் அடியில் இருந்து வளர வளரக் குறுகலான பட்டை போன்று செல்லக்கூடியது. இந்தத் தண்டின் நுனியில் வட்ட வடிவில் காய் போன்ற முடிச்சு இருக்கும். அந்த முடிச்சில் பல அரும்புகள் தேன்கூடு போல அடுக்கி வைத்தாற்போல் இருக்கும். அந்த முடிச்சின் அரும்பில் இருந்து பாத வடிவிலான தேன் நிறைந்த வெண்மையான நிறத்தை உடைய சிறு மலர்கள் பூத்திருக்கும். அதே அரும்பில் 4 இலைகள் எதிர்த்து எதிர்த்து விரிந்திருக்கும். இலைகள் அடியும் நுனியும் மெலிந்தது போன்று நடுப்பகுதி சற்று அகலத்துடன் காணப்படும். இலை, பூ மருத்துவக் குணம் உடையது. இலை கோழையை அகற்றவும், உடல் வலிமையைப் பெருக்கவும் கூடியது. வாந்தி உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது. பூ முறைநோய் அகற்றும் குணம் கொண்டது. தமிழ்நாடெங்கும் மாரி காலத்தில் ஈரமுள்ள இடங்களில் தானாகவே வளரக்கூடியது.

வேறு பெயர்கள்: பொருகல், பழபாகல், வைகுண்டம், அதோமுகி, கடற்கொடி, சத்திரம்.

வகைகள்: பெருந்தும்பை, கவித்தும்பை, பேய்த்தும்பை, பித்தாருசம், சன்னிநாயகம்.

ஆங்கிலத்தில்: Leucas aspera, Spreng, Lamiaceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பிலாது சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.

தும்பை இலை, கீழா நெல்லி இலை, சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

தும்பைச்சாறு 1 மில்லியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து குடிக்கக் கொடுத்து, தேள் கொட்டிய கடிவாயில் தும்பையிலையை அரைத்துக் கட்ட விஷம் கீழே இறங்கும். கடுப்பும் நீங்கும்.

தும்பையிலை, குப்பைமேனி இலை, நாய்கடுகு இலை இவற்றைச் சமஅளவில் எடுத்து அரைத்து உடம்பில் பூசி 3 மணிநேரம் கழித்து வெந்நீரில் குளித்துவர நமது உடலில் பூச்சிக் கடியினாலோ, வேறு சில காரணத்தாலோ ஏற்பட்ட தடிப்பு, நமைச்சல், சொறி, சிரங்கு குணமாகும்.

நஞ்சுள்ளவை நம்மைத் தீண்டிவிட்டால் தும்பையிலைச் சாறு 50 மில்லியுடன் சிறியாநங்கை இலைச்சாறு 2 சொட்டு கலந்து குடிக்கக் கொடுக்க சிறிது நேரத்தில் வாந்தியும் பேதியும் உண்டாகி விஷம் முறிந்து குளிர்ந்த உடம்பு சூடாகி ஜன்னி நீங்கும்.

உடம்பில் சூடு ஏறுகிறது என்றால் விஷம் முறிகிறது என்று அர்த்தம். பேதி அதிகமானால் தயிர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு கொடுக்க பேதி நீங்கும். மேலும் விஷம் தீண்டியவர்களை 24 மணி நேரத்திற்குத் தூங்க விடக் கூடாது. எப்போதும் தலை மட்டும் உயரத்தில் இருக்க வேண்டும். தாழ்வாக இருக்கக் கூடாது.

தும்பையிலை, உத்தாமணியிலை சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து இருவேளை தொடர்ந்து குடித்துவர ரத்தப்போக்கு, தாமதமாகப்படுகின்ற மாதவிலக்கு சரியாகும்.

தும்பையிலைச் சாறு நாகதாழியிலைச் சாறு வகைக்கு 50 மில்லி அளவு எடுத்து கலந்து குடிக்க கருந்தேள், செந்தேள் ஆகியவற்றின் கொடிய விஷம் இறங்கும். கடித்த இடத்தில் சிவனார் வேம்பு இலையைக் கசக்கி அழுத்தித் தேய்க்க விஷம் தானாக இறங்கும்.

தும்பைப் பூ 50 கிராம் எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து அதில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகத் தலைபாரம், நீரேற்றம் குறையும்.

தும்பை இலை, கீழாநெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவாக எடுத்து அரைத்து பாக்கு அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர எப்படிப்பட்ட நாள்பட்ட மஞ்சள் காமாலையானாலும் குணமாகும்.

Posted in Allopathy, Alternate, Antidote, Body, cure, Doctor, Health, Herbs, Homeopathy, Lamiaceae, Leucas aspera, Medicine, Mooligai Corner, Naturotherapy, Poison, Spreng, Thumbai, Thumpai, Unani, Yunaani, Yunani | Leave a Comment »