இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவு கலைகிறது: குமரி மாவட்டத்தில் கனரக ரப்பர் ஆலை அமையுமா?
நாகர்கோவில், ஜூன் 12: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக ரப்பர் ஆலை அமைவது கனவாகிப்போவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ரப்பர் பூங்கா என்று தற்போது பேசிவரும் திட்டச் செயல்பாடும் ஆமை வேகத்தில் இருக்கிறது. இதன்மூலம் எதிர்பார்க்கும் அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரமுடியாது என்பது அதிர்ச்சியான விஷயம்.
நாட்டின் ரப்பர் உற்பத்தியில் 8 சதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. நாட்டிலேயே தரம் உயர்ந்த ரப்பர் இங்குதான் கிடைக்கிறது என்று தேசிய ரப்பர் வாரியமே சான்று அளித்துள்ளது.
மாவட்டத்தில் தமிழக அரசுக்குச் சொந்தமான 5 ஆயிரம் ஹெக்டேர் வன பூமியில் ரப்பர் மரங்களால் 2,500 தொழிலாளர்கள் நேரடியாக வேலை பெற்று வருகிறார்கள். தனியார் பதிவு தோட்டங்களும், சிறு தோட்டங்களுமாக மேலும் 15 ஆயிரம் ஏக்கரிலும் ரப்பர் பயிர் செய்யப்படுகிறது.
குறிப்பாக கல்குளம், விளவங்கோடு, தோவாளை வட்டங்களும், மலையோரப் பகுதிகளில் ஆறுகாணி முதல் காட்டுப்புதூர் வரை சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது.
ரப்பர் மரத்திலிருந்து பால் வடிப்புத் தொழிலில் மட்டும் 2,500 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் சுமார் 40 டன் “ரப்பர் லாக்டஸ்’ கிடைக்கிறது. ஒரு வாரத்தில் ரூ.2 கோடிக்கான ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்டத்திலிருந்து ரப்பர் லாக்டஸ் தமிழகத்தின் பிற தொழில் மையங்களுக்கும், இதர மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. டயர், டியூப். பலூன்கள், ஸ்பாஞ்சுகள், கையுறைகள் உள்ளிட்ட பொருள்கள் இவற்றில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்திலேயே இந்த ரப்பரை பயன்படுத்தி கனரக ரப்பர் ஆலை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இயற்கை அளித்த கொடையான இந்த ரப்பரை பயன்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று படித்த இளைஞர்கள் ஆண்டாண்டு காலமாகக் காத்திருக்கிறார்கள்.
கனரக ரப்பர் ஆலைத் திட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் தரப்பில் பேசப்பட்டு வந்தாலும், அதைச் செயல்படுத்த பிள்ளையார் சுழி போடக் கூட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் முன்வரவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆலை அமைக்கப்படும் என்று, கடந்த 1991-ம் ஆண்டே முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிகள் மாறிமாறி வந்தும் அதைச் செயல்படுத்தவோ, அதுகுறித்த ஆய்வு நடத்தவோ, நிதி ஒதுக்கவோ யாரும் முன்வரவில்லை.
கனரக ரப்பர் ஆலைத் திட்டம் குறித்து சட்டப் பேரவையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் பேசியும் அரசுத் தரப்பிலிருந்து சாதகமான பதில்கள் தெரிவிக்கப்படவில்லை.
இச் சூழ்நிலையில்தான் செண்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா திட்டம் குறித்து சமீபகாலமாகப் பேசப்படுகிறது. ஆனால், அதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆமைவேகத்தில் இருக்கின்றன.
இளைஞர்கள் நலன் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆலை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.