Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Thol Thirumavalavan’ Category

‘Arundhathi caste needs separate reservation quota’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் . உடன் சட்டப் பேரவை உறுப்பினர் செல்வ பெருந்தகை, மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை செயலர் கோவிந்தராஜ், பொருளாளர் நந்தகோபால், பொதுச் செயலாளர் பாபு நாயுடு, மாநிலத் தலைவர் முத்துவேல்ராஜ் மற்றும் புரவலர் சி.எம்.கே. ரெட்டி.

சென்னை, பிப். 5: அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் வலியுறுத்தினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியது:

தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கான ஒதுக்கீட்டுடன் சேர்த்து அருந்ததியினர் இனத்துக்கும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அருந்ததியினர் இனத்துக்கு தனி ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

தாழ்வு மனப்பாண்மையால் ஒரு மொழி அழிந்துவிடக் கூடாது. இதற்காகவே தமிழைப் பாதுகாப்பதில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் பங்கெடுத்து வருகிறது.

இதனால் மற்ற மொழிகளுக்கு இந்த இயக்கம் எதிரிகள் கிடையாது.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதே விடுதலை சிறுத்தைகளின் முதல் குறிக்கோளாகும். ஆதிக்கம், அடக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகிய மூன்றையும் ஒழித்தால்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். இதனடிப்படையில்தான் தற்போது மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்கப்பட்டுள்ளது.

மொழியின் வழியில் மக்களை ஒருங்கிணைத்து வளம் பெறச் செய்யும் உயர்ந்த நோக்கத்துக்காக துவக்கப்பட்டுள்ள இந்தப் பேரவைக்கு விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றார் திருமாவளவன்.

விழாவில்

  • அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைவர் சி.எம்.கே. ரெட்டி,
  • ஹைதராபாத் ஹனுமந்தராயா கல்வி அறக்கட்டளை செயலாளர் பி. பாலாஜி,
  • தமிழ்நாடு மகாஜன சங்க மாநிலத் தலைவர் சி. வெங்கடசுப்பு,
  • பி. முத்துராஜ்,
  • எஸ். பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மொழிச் சிறுபான்மையினர் நலத்துக்கென தனி வாரியம் ஒன்றை அரசு அமைத்திடவேண்டும்.

விடுதலைக்கு முழக்கமிட்டு உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கவேண்டும். மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளை மீண்டும் அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை: தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சௌராஷ்டிரம் உள்ளிட்ட தமிழல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கான பாதுகாப்புப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

மொழி சிறுபான்மையோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். இந்தப் பேரவையின் புரவலராக சி.எம்.கே. ரெட்டி, மாநிலத் தலைவர் பி. முத்துவேல்ராஜ், பொதுச் செயலராக பாபு நாயுடு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

—————————————————————————————————————————-
அருந்ததியர் உள் ஒதுக்கீடு: நியாயமும் அவசியமும்

பிரபஞ்சன்


தலித்துகளில் ஒரு பெரும் பிரிவான அருந்ததியர்கள், தலித்துகளுக்கான 18 சதம் இட ஒதுக்கீட்டில், தமக்கு ஆறு சதம் உள் ஒதுக்கீடு வேண்டுகிற இயக்கம் மேலெழுந்திருக்கிறது. அறம், மற்றும் நியாயம் சார்ந்ததுமான கோரிக்கை இது. தமிழக அரசும், உள் இட ஒதுக்கீடு தொடர்பான பரிசீலனையைத் தொடங்கி இருக்கிறது. பரிசீலனையின் முடிவு அருந்ததியர்களுக்கு நியாயம் வழங்குவதாகவே இருக்கும். இருக்க வேண்டும்.

மிகுந்த கொந்தளிப்புகள் நிறைந்த சூழ்நிலையில், அருந்ததியர் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் எடுத்துச் சொல்லும் ஆவணங்கள் போல, வரலாற்றுச் செறிவோடு இரண்டு அறிவார்ந்த வெளியீடுகள் வந்திருக்கின்றன. ஒன்று, சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான ம. மதிவண்ணன் எழுதிய உள் ஒதுக்கீடு சில பார்வைகள் எனும் புத்தகம். மற்றது, “சுவடு -ஐனவரி 2008′ மாத இதழில் வெளிவந்திருக்கும், தமிழக மனித உரிமைக் கழகத்தின் தலைவரும் சிறந்த சிந்தனையாளருமான அரங்க.குணசேகரனின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான, ஆழம் கொண்ட மிகச் சிறந்த நேர்காணல்.

மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பெரும் கவனம் பெற்றுள்ள அருந்ததியர் எழுச்சி, இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1920-ம் ஆண்டு எல்.சி. குருசாமியால் அருந்ததிய மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. 1942-ல் அருந்ததியர் ஊழியர் சங்கம், சமத்துவ சமாஜம், 1958-ல் அருந்ததியர் முன்னேற்ற சங்கம் என்று ஒரு தொடர்ச்சி இயக்கமாக அது இருக்கிறது.

1993 முதல் உள் ஒதுக்கீடுப் போராட்டம் தீவிரம் அடைகிறது.

1996-ல் ஆதித் தமிழர் பேரவை உள் ஒதுக்கீடுக் கோரிக்கையை முன் எடுத்து, எழில் இளங்கோவன் எழுதிய “அடுக்குமுறை இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்குச் சமூக நீதி’ என்ற முக்கியமான நூலை வெளியிடுகிறது. 4.8.1995-ல் தினமணியில் வெளியான பெருமாள் ராஜின், “கடையனுக்குக் கடையன் கதி என்ன?’ என்னும் கட்டுரை பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்தது.

23.4.2000-ம் நாள் சென்னையில் பெருமாள் ராஜை முதன்மை ஆலோசகராகவும், வழக்கறிஞர் சேகரை அமைப்பாளராகவும் கொண்டு அமைக்கப்பட்ட “அருந்ததியர் தனி இட ஒதுக்கீடு போராட்டக் குழு’ , அக்காலத்து முதல் அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கைகள் இச்சமயத்தில் முக்கியமாகக் கருதத்தக்கவை. சாத்தியமான கோரிக்கையும் அதுவே.

முதல் கோரிக்கை: அருந்ததியர்க்கு ஆறு சதவீத தனி இடஒதுக்கீடு.

இரண்டாம் கோரிக்கை: தமிழ்நாடு ஷெட்யூல்ட் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 78 சாதிப் பெயர்களில் உள்ளவற்றில், குலத் தொழில் மற்றும் செய் தொழில் முறையை அடிப்படையாகக் கொண்டு கீழ்காணும் பிரிவுகளாகப் (குரூப்) பிரிக்கலாம்:

குரூப் (அ)

  • அருந்ததியர்,
  • சக்கிலியர்,
  • மாதாரி,
  • மாதிகா,
  • பகடை,
  • செம்மான் முதலானவர்கள்.

குரூப் (ஆ)

  • பறையர்,
  • சாம்பவார்,
  • மாலா,
  • சம்பன்,
  • தோட்டி,
  • வெட்டியார்,
  • வள்ளுவர் முதலானவர்கள்.

குரூப் (இ)

  • தேவேந்திர குலத்தார்,
  • பள்ளர்,
  • காலாடி,
  • பண்ணாடி.

குரூப் (ஈ)

  • குரவன்,
  • தொம்பர்,
  • சித்தனார்,
  • நாயாடி,
  • புத்திரி,
  • வண்ணார்,
  • மற்ற பட்டியல் சாதிகளில் மேலே சொல்லப்படாதவர்கள்.

இந்த “குரூப்’ வகை அடிப்படையில் விகிதாச்சார அளவுப் பிரிப்பு சாத்தியமான யோசனையாக அமைந்தது. இதுபோன்ற ஒரு பிரிப்பு, ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சுமார் மூன்று ஆண்டுகள், இம்முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாதிகாக்கள் என்கிற அருந்ததியர் வேகமான வளர்ச்சி பெற்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களிலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும், அடித்தள மக்களிலேயே அடித்தள மக்களாக வைக்கப்பட்டவர்களாகவும், கண்ணியமற்ற பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டவர்களாகவும், முன்னேற்ற வெளிச்சம் என்பதையே இதுவரை காணாத மக்களாகவும், மிகச் சாதாரண வாழ்க்கைக்கும் கூட போராட வேண்டியவர்களாகவும் வாழ்கின்ற அருந்ததியர் இன மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஈரமற்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இல்லை. முக்கியமான அடித்தள மக்கள் அரசியல் தலைவர்கள் எல்லோருமே, உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் இப்படிக் குறிப்படப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில், அருந்ததியர் தொகை கணிசமாக இருப்பதால், ஆந்திராவில் உள்ளதுபோல இம்மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் (2006) அறிக்கையில் தாழ்த்தப்பட்டோரில் சாதி வாரி இட ஒதுக்கீடு எனும் தலைப்பில் தரப்பட்ட வாக்குறுதி:

அருந்ததியர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் உரிய பங்கினைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையை மாற்றிட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனித்தனியான மக்கள் தொகை அடிப்படையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே ஏற்ற வழியாகும்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உள் ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகிறார். தமிழக மனித உரிமைக் கழகத் தலைவர் அரங்க குணசேகரன், எப்போதுமே அருந்ததியர்களை ஆதரித்தும், உள் இட ஒதுக்கீட்டை ஒப்புக்கொண்டும் வந்திருக்கிறார்.

ஆக, அருந்ததியர் சகோதரர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கிடைப்பதில் பெருந்தடை ஏதும் இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.

என்றாலும், உள் இட ஒதுக்கீட்டுக்கு மிகச் சிலரால், ஐயம் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ எதிரான ஓரிரண்டு கருத்துகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை இவை:

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோருவதால் தலித்துகளின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாதா?

அரங்க குணசேகரன், “சுவடு’ இதழில் முன்வைத்த பதிலில் இருந்து சில பகுதிகள், அக்கேள்விக்குச் சிறந்த தெளிவைத் தரும்.

“”1931-ல் வட்ட மேசை மாநாட்டில் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதிகள் கேட்டு டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷாரிடம் கோரியபோது, அதை மறுத்த காந்தி, இது இந்துக்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்றார்.

1980-ல் தொடங்கி 1990-ஐயும் தாண்டி முற்போக்குத் திசைவழியில் கருக்கொண்டு உருவான தலித் இயக்கங்கள் கிராமங்களில் சாதித் தமிழர்கள் அல்லது சாதி இந்துக்கள் என்பவர்கள் தலித்துகள் மீது தொடுக்கின்ற அடக்குமுறைகள் குறித்து, தமிழின, தமிழ்த்தேச அரங்குகளில் விவாதத்தைக் கிளப்பியபோது, இத்தகைய கேள்விகள் தமிழின ஒற்றுமைக்கு எதிரானது என்று சில தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது.

நிறைவாக உள் இட ஒதுக்கீடு பெறுவதால் தலித் ஒற்றுமை கெட்டுவிடுமானால் கெட்டுவிட்டுப் போகட்டும். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பெறமுடியாத அவல நிலை தொடர்வதால் தலித் ஒற்றுமை பாதுகாக்கப்படுமானால் அந்த ஒற்றுமையைத் தூக்கிக் கடலில்தான் போடவேண்டும்.”

உள் இட ஒதுக்கீடு தொடர்பாக, மற்றுமொரு முக்கியமான கேள்விக்கு அரங்க குணசேகரன் சொன்ன பதில் வருமாறு: “”மொத்தப் பரப்பான 18 விழுக்காட்டில் தங்கள் பங்கைப் பெற முடியாமல்தான் இவர்கள் ஆறு விழுக்காடு கேட்கிறார்கள். 18 விழுக்காட்டில் பறையர், பள்ளர்களுக்கு இணையாக அருந்ததியர் தங்கள் பங்கைப் பெற்றிருந்தால் உள் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையே எழுந்திருக்காதே. போட்டித் தேர்வுகளில், பள்ளி, கல்லூரி மதிப்பெண்களில் பறையர், பள்ளர் அளவுக்கு உரிய மதிப்பெண் குறியீட்டை எட்ட முடியாமல்தான் இவர்கள் பின்தங்கிக் கிடக்கிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பார்ப்பனர்களிடமிருந்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மீண்டும் பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து இன்று இசுலாமிய, கிருத்துவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.”

அருந்ததியர், தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஆறு சதம் உள் ஒதுக்கீடு கோருவதில் எந்தத் தவறும் இல்லை. சகல நியாயங்களும் அவர்கள் பக்கமே இருக்கின்றன.

தமிழக முதல்வரின் மேசை மேல் இருக்கும் இக் கோரிக்கை துரிதமாகச் செயல் உருப்பெற ஒருங்கிணைந்த பிரசாரம் மிக அவசியம். தலித்துகள் மட்டுமல்ல, தலித்துகள் அல்லாதோர்கள் அருந்ததியர் பக்கம் திரள வேண்டும். மனிதர்கள், தாங்கள் மனிதர்கள்தாம் என்று நிரூபித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. மனிதர்களாக இருந்து சிந்திப்போம். செயல்படுவோம்.

Posted in Arundhathi, Arunthathi, Babu Naidu, Caste, Chennai, CMK Reddy, Communities, Community, Dalit, Govindharaj, Govindhraj, Govindraj, Groups, Language, Languages, Madras, Muthuvelraj, Nandhagopal, Organizations, Reservation, SC, Scheduled Caste, Scheduled Tribe, ST, Telugu, Thiruma, Thirumavalavan, Thol Thiruma, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 6 Comments »

“Supreme Court crosses its Boundaries” – ‘Reservations are not meant for 2.5 lacs p.a. salaried folks’

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 25: இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வரும் 31-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக அக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை தொடர்பான முடிவுகளை மத்திய அரசு தான் எடுக்க முடியும். அவற்றில் நீதிமன்றங்கள் தலையிடுவது அதிகார வரம்பு மீறல் ஆகும்.

  • “50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
  • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.
  • பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

Posted in 2.5 Lakhs, Condemn, Creamy Layer, Dalit Panthers, Percentage, Reservations, Salary limits, Supreme Court, Thol Thiruma, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 4 Comments »

‘DMK Alliance victory is Asurargal’s victory’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

விடுதலை சிறுத்தைகள் இணைந்ததால் தி.மு.க. கூட்டணியின் வலிமை கூடியிருப்பது நிரூபணம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை, அக்.20-

விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையான – முதிர்ச்சியான தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் அவரது இயல்பான அணுகுமுறைகளே தி.மு.க. கூட்டணியின் இந்த அமோக வெற்றிக்கு அடிப்படையாகும். விடுதலை சிறுத்தைகளின் வரவால் தி.மு.க. கூட்டணியின் வலிமை மேலும் கூடியிருக்கிறது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தது, இந்த அமோக வெற்றியின் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்து வரவால் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரிதும் பயனில்லை என்றாலும், போட்டியிட்ட குறைவான இடங்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.

குறிப்பாக

  • கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி கவுன்சிலர்கள், 4 பேரூராட்சி கவுன்சிலர்கள்,
  • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சி மன்ற தலைவர்,
  • தர்மபுரி மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 3 பேரூராட்சி கவுன்சிலர்கள், 5 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்,
  • பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு பேரூராட்சி கவுன்சிலர்,
  • வேலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி கவுன்சிலர், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒரு ஒன்றிய கவுன்சிலர்,
  • சேலம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அத்துடன், தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு மிகப்பெருமளவில் பயன்பட்டிருக்கிறோம் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த தீபாவளி நரகாசுரனை கொன்றதற்காக அல்ல; நரகாசுரனும், நரகாசுரனின் வாரிசுகளும் வென்றதற்காக கொண்டாடப்படும் தீபாவளி ஆகும். தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றி அசுரர்களின் வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Posted in Alliance, Asurar, civic elections, Dalit Panthers, DMK, Local Body Polls, Tamil Nadu, Thirumavalavan, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »