வண்டலூர்-மீஞ்சூர் இடையே 62 கி.மீ. நீள “வெளிவட்டச் சாலை’
பா. ஜெகதீசன்
சென்னை, செப். 25: சென்னையிலும், அதை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் வகையில் 62 கி.மீ. தூரத்துக்கு “வெளிவட்டச் சாலை’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகரின் எல்லைக்கு வெளியே வடக்கே உள்ள மீஞ்சூரையும், தெற்கே உள்ள வண்டலூரையும் இணைக்கும் வகையில் இச்சாலை உருவாக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.500 கோடி செலவில் 4 வழிப்பாதையாக இச்சாலை அமைக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
- சென்னை -திருச்சி சாலை,
- சென்னை -பெங்களூர் சாலை,
- சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலை,
- சென்னை -நெல்லூர் நெடுஞ்சாலை,
- திருவொற்றியூர் -பொன்னேரி -பஞ்சட்டி சாலை ஆகிய 5 சாலைகளையும் இணைக்கும் வகையில் இந்த வெளிவட்டச் சாலையை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நிலம் கையகப்படுத்த நடவடிக்கை: வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியின் முதற்கட்டமாக வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து திருவள்ளூர் நெடுஞ்சாலை வரை 29.2 கி.மீ. நீளத்துக்குத் தேவையான நிலங்களை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கையகப்படுத்தி உள்ளது.
அங்கிருந்து மீஞ்சூர் வரையிலான எஞ்சிய சுமார் 33 கி.மீ. தூரத்துக்குத் தேவைப்படும் நிலங்களைக் கையகப்படுத்தும் பணி முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சாலையை இரு வழித் தடங்களிலும் சேவைப் பாதையுடன் கூடிய 6 வழிப் பாதையாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டத்தின் முதற்கட்டமாக, இச்சாலை ரூ.500 கோடி செலவில் 4 வழிப்பாதையாக அமைக்கப்படும்.
இத்திட்ட நிறைவேற்றம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு, விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும். அதன் பிறகு சாலை அமைப்புப் பணிகள் தொடங்கப்படும்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஆய்வு: சென்னைப் பெருநகரப் பகுதியில் நிலவும் அனைத்துப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரிவான ஆய்வை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான நடுத்தர -நீண்டகாலத் திட்டங்களை வகுக்கவும், அவற்றின் மூலம் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சிகளுக்கு உதவி: சென்னை நகர எல்லைக்கு வெளியே பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள
- உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகளை அகலப்படுத்துதல்,
- புதிய இணைப்புச் சாலைகளை அமைத்தல்,
- தெரு விளக்குகள் அமைத்தல்,
- குடிநீர் வசதி ஏற்படுத்துதல்,
- மயான மேம்பாடு,
- குப்பைகளை அகற்ற வாகனங்கள் வாங்குவது ஆகிய பணிகளை மேற்கொள்ள 90 சதவீத அளவுக்கு நிதியுதவியைக் குழுமம் அளிக்கிறது.
- மரம் நடுதல்,
- குளம் -குட்டைகளைத் தூர் வாருதல்,
- பூங்கா சீரமைப்பு,
- மழைநீர் வடிகால் அமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளுக்கு ஆகும் செலவில் 80 சதவீதத்தை மானியமாகக் குழுமம் அளிக்கிறது. எஞ்சிய தொகையில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளும், 15 சதவீதத்தைத் தொண்டு நிறுவனங்களும் ஏற்கின்றன.
இத்திட்டங்களின் கீழ் 2006-2007-ம் நிதியாண்டில் ரூ.4.2 கோடி அளவுக்கு நிதியுதவியைக் குழுமம் அளிக்க உத்தேசித்துள்ளது.