செய்தியும் சிந்தனையும்
கங்கை வந்ததா தஞ்சைக்கு
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருவிசைநல்லூர் கிராமத்தில் ஒரு வீட்டில் கிணற்று நீரைப் பெற்றுக் கொள்வதற்காக ஆண்களும் பெண்களும் மிக நீண்ட வரிசையாக நின்றனராம். பெருமிதத்தோடு ஒளிப்படம் எடுத்துப் போட்டிருக்கிறது ஏடு! சிறீதர அய்யவாள் என்பவர், 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீடாம் அது. அந்த வீட்டுக் கிணற்றில் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை ஆறிலிருந்து நீர் வந்து சேர்க்கிறதாம். அதை வாங்கிக் குடிப்பதற்குத்தான் கூட்டமாம்.
அச்சுப்பிழை சரிவர திருத்தப்படாமல் செய்தி வந்துவிட்டது என்று கூற வேண்டும். சிறீதர அய்யர்வாள் வீடு என்றிருக்க வேண்டும். அவர் வீட்டில்தான் ஒரு தப்பிதமும், ஓர் அற்புதமும் நிகழ்ந்ததாக எழுதியிருக்கிறார்கள்.
அவர் வீட்டில் இறந்து போனவர்க்குச் “சிரார்த்தம் தரும் நாளன்று பசியால் மிகவும் வாடிய ஒருவர் சாப்பிட ஏதாவது கேட்டாராம். சிரார்த்தச் சடங்கு செய்யும் பார்ப்பனர் வரத் தாமதம் ஆகும் என்கிற நிலையில் பசித்தவர்க்கு உணவு தந்துவிட்டாராம் சிறீதர அய்யர். இந்தச் செய்தி தெரிந்ததும் மொத்த அக்ரகாரமும் தாண்டிக் குதித்ததாம்! எப்படி சிரார்த்தம் தரும் முன்பே – பித்ருக்கள் சாப்பிடும் முன்பே – மனிதர்கள் சாப்பிடலாம், சாப்பாடு தரலாம் எனக் கொதிப்புடன் கேட்டதாம் பார்ப்பனச் சேரி.
சிறீதர் அய்யர் சொன்ன சமாதானத்தைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்து ஊரைவிட்டு விலக்கி வைத்து விட்டார்களாம். வேறு வழியில் இல்லாமல் அவரும் தண்டனையை ஏற்றுக்கொண்டு விட்டாராம்.
யாருடனும் பேசாமல், பழகாமல், உதவியைக் கேட்டுப் பெறாமல் மிகவும் துன்பப்பட்டு வந்த நிலையில் அக்கிராமப் பெரியவாள்கள் பெரிய மனது வைத்துப் பரிகாரம் கூறினார்களாம். மனு தர்மத்திற்கு எதிராக நடந்துகொண்ட தோஷத்தைப் போக்கிடுவதற்காகக் கங்கையில் குளித்துப் பரிகாரம் செய்து வந்தால் பார்ப்பன ஜமாவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார்களாம்.
ஏழையான சிறீதர் அய்யர் அந்தக் காலத்தில் எப்படிக் கங்கை நதிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய முடியும் எனப் பரிதவித்தாராம். அவரது நிலையைக் கண்ட பகவான் அவர் வீட்டுக் கொல்லைப்புறக் கிணற்றில் கங்கையை வரச் சொன்னாராம். கங்கை கிணற்றில் பாய்ந்து நிரம்பி வழிந்ததாம். நொங்கும் நுரையுமாகப் பொங்கிப் பிரவகித்த கங்கையைக் கண்டு ஊரே ஆச்சரியமடைந்ததாம். பார்ப்பனப் பெரியவாள் எல்லாம் சிறீதர அய்யரிடம் பகவான் கருணை காட்டியதைக் கண்டு சிறீதர அய்யருக்கு அபவாதமும் அபராதமும் விதித்தமைக்காக வருந்தினார்களாம்.
இந்த அற்புதம் நடந்த நாளான கார்த்திகை அமாவாசையன்று அந்த வீட்டின் கிணற்று நீரைக் குடிப்பதற்காகத்தான் கூட்டம் வருகிறதாம். இந்த விளக்கத்தை ஏடு எழுதவில்லை.
சில கேள்விகள் உண்டு. அவற்றிற்கு விடையாவது கிடைக்குமா?
(1) சிறீதர அய்யர் வீட்டுக் கிணற்றில் வந்தது கங்கை நீர்தான் என்பதற்கு ஏதாவது அடையாளம் உண்டா?
(2) இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கங்கை ஆறு திருவிசைநல்லூர் கிணற்றில் பொங்குவது எப்படி சாத்தியம்?
(3) 2007 இல் கிணற்றில் கங்கை நீர் பொங்கி பிரவகித்ததா?
(4) வாங்கிக் குடிக்கக் கூடிய அளவு தூய நீரா கங்கையில் ஓடுகிறது? (1000 கோடி ரூபாய் செலவு செய்தும் அழுக்கான ஆறுகளில் அதற்குத்தானே முதல் இடம்!)