சொக்கநாதர் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் ஆவணி மூல உற்சவத் திருவிழாவில் சனிக்கிழமை “புட்டுக்கு மண் சுமந்த’ கோலத்தில் சுந்தரேசுவரர்.
மதுரை, ஆக. 26: அருள்மிகு சொக்கநாதர் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சவம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நரியைப் பரியாக்கியது உள்ளிட்ட திருவிளையாடல் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுரையில் வாணிய வைசிய குலத்தைச் சேர்ந்த பக்தையான வந்தியம்மை மூதாட்டிக்கு மோட்ச வீடு அளிக்கும் வகையில் அருள்மிகு சோமசுந்தரர் இயற்றிய 61-வது திருவிளையாடலாகிய புட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி, அருள்மிகு புட்டு உற்சவ வகையறா கட்டளைக்கு சொந்தமான புட்டு சொக்கநாதர் கோயில் மைதானத்தில் நடைபெற்றது.
இதனையடுத்து பிற்பகலில் அருள்மிகு சொக்கநாதருக்கு தங்கக் கூடையில், மண் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் வந்தியம்மை பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு புட்டுத் தோப்பு பகுதியில் கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். சுவாமி உலாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.