குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
ருக்மணி அருண்டேல்
திருவேங்கிமலை சரவணன்
25.07.07 தொடர்கள்
‘‘எங்க வீட்டுப் பெண் பரதநாட்டியம் கத்துக்கிறா’’ _ பொது நிகழ்ச்சியில் பட்டுப்புடவை சரசரக்கும் பெண் தன் செல்ல மகளை இன்னொரு பெண்மணிக்கு பெருமையுடன் அறிமுகப்படுத்துவதைப் பார்க்கலாம். இன்று பரதநாட்டியம் கற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய கௌரவமாகி விட்டது. குறிப்பாக நகரங்களில் மாலை வேலைகளில் பல வீடுகளில் ‘தக திமி’ ‘தகதிமி’ என்று ஜோராக சலங்கை ஒலி கேட்க முடிகிறது. அது ஒரு இதமான அனுபவம். சொல்லப்போனால் ‘என், பெண் பரதநாட்டியம் ஆடுவாள்’ என்பது பெண் பார்க்கும் படலத்தின் போது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. இன்று பரத நாட்டியம் ஒரு தெய்வீக கலையாக தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஊடுறுவி விட்டது:
இந்தக் கலைக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தந்து தெய்வீக நிலைக்கு உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர்களில் முக்கியமானவர் ருக்மணி அருண்டேல் என்கிற அற்புதப் பெண்மணி!
‘‘பரதநாட்டியம் என்பது இந்திய பாரம்பரியத்தின் முக்கியமான அடையாளம்!’’ உலகத்தில் இருக்கிற அத்தனை கலை ஆர்வலர்களும் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் பரதநாட்டியம் என்பது மிகப்பெரிய சமூக இழுக்காக கருதப்பட்டது. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் ருக்மணி என்கிற சாதனைப் பெண்ணின் எதிர்நீச்சல் உங்களுக்குப் புரியும்!
‘கலா«க்ஷத்ரா’ என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி பரதநாட்டியத்துக்கு மறுபிறவி கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ருக்மணி அருண்டேல்.
நீலகண்ட சாஸ்திரி_சேஷம்மாள் தம்பதியினருக்கு 1904_ம் ஆண்டு பிப்ரவரி 29_ம் நாள் மதுரையில் பிறந்தவர் ருக்மணி. நீலகண்ட சாஸ்திரிகள் வடமொழியில் ஞானம் நிரம்பப் பெற்றவர். நிறைய வேதாந்தப் புத்தகங்கள் எழுதியவர்.
அந்தக் காலகட்டத்தில் பால்ய விவாகம்தான் நடைமுறையில் இருந்தது. சிறுமி ருக்மணிக்கும் குழந்தைத் திருமணம் நடத்த பெரியவர்கள் முற்பட்டார்கள். ஆனால், ருக்மணி ஸ்திரமாய் மறுத்து விட்டார். சின்ன வயதிலேயே கர்நாடக சங்கீதம் பயின்றார். அப்போதே அவருக்கு கலைகளின் மீது நாட்டம் வந்துவிட்டது.
ருக்மணியின் தந்தைக்கு சென்னையிலுள்ள தியாஸாஃபிகல் சொஸைட்டியில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ருக்மணிக்கு வயது ஏழு. தந்தையுடன் சேர்ந்து தியாஸாஃபிகல் சொஸைட்டியில் தானும் சேர்ந்து கொண்டார் ருக்மணி.
அங்கு அவர் வாழ்க்கை கலைகளை நோக்கித் திரும்புகிறது. வாழ்க்கையில் காதலும் வருகிறது. தியாஸாஃபிகல் சொஸைட்டியில் அருண்டேல் என்ற வெளிநாட்டுக்காரரும் பணியாற்றி வந்தார். அருண்டேல் தலை சிறந்த கல்வியாளர். ருக்மணி, அருண்டேல் இருவரின் மன எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தனது பதினாறாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அருண்டேலுக்கு அப்போது வயது நாற்பது. பிறகு மும்பையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் ருக்மணி நிறைய பயணங்களை மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திலும் தென்படும் ரசனையான விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதில் ருக்மணி கெட்டிக்காரர். அப்படித்தான் ரஷ்ய ‘பாலே’ டான்ஸரான ‘அன்னாபாவ்லா’ வின் நடனம் ருக்மணியை ஈர்த்தது. 1928_ல் அன்னாபாவ்லாவின் நடனம் மும்பையில் நடந்தது. தன் கணவருடன் மும்பைக்குச் சென்று பார்த்தார். பிறகு ருக்மணியும், அருண்டேலும் மும்பையிலிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்குப் பயணமானார்கள்.
அதிர்ஷ்டவசமாய் அருண்டேல் தம்பதிகள் சென்ற அதே கப்பலில் ‘அன்னாபாவ்லா‘வும் பயணம் செய்து கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட ருக்மணிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. ‘அன்னாபாவ்லா’ வைச் சந்தித்து நடன விஷயங்களைப் பற்றி நிறைய பேசித் தெரிந்து கொண்டார்.
அப்போதுதான் ‘அன்னாபாவ்லா’ திடீரென்று ருக்மணியைப் பார்த்து, ‘‘நீங்கள் கலாரசனை உடையவராக இருக்கிறீர்கள். நடனத்திற்கேற்ற உடற்கட்டும் இருக்கிறது. நீங்கள் ஏன் டான்ஸ் கற்றுக் கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய நடன குருவான ‘கிளியோநோர்டி’யை ருக்மணிக்கு ரஷ்ய நடனம் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். ஆக, ருக்மணி முதன் முதலில் ரஷ்ய நடனத்தைத்தான் கற்றார். ‘‘ரஷ்ய பாலே நடனத்தைத் தொடர்ந்து நாட்டியமும் கற்றுக் கொள்ளுங்களேன்…’’ என்று அன்னா பாவ்லாவே ருக்மணிக்கு ஆலோசனை கொடுக்க, ருக்மணியின் ஆர்வம் பரதம் பக்கம் திரும்பியது. அந்தச் சமயத்தில் பரதநாட்டியம் இந்தியாவில் அவ்வளவு பிரபலம் கிடையாது. நாட்டியங்களை பெண்கள் ஆடுவது இழுக்கு என்கிற தவறான எண்ணம் அப்போது மக்களிடையே இருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் 1933 மியூசிக் அகாடமியில் ‘சதிர்’ எனும் நடனக் கச்சேரியை பந்தநல்லூர் ராஜேஸ்வரி, ஜீவரத்தினம் சகோதரிகள் நிகழ்த்தினார்கள் ‘சதிர்’ நடனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ருக்மணி அந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்.
ஆனால், அவர் நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ள முடியவில்லை. பல பரதநாட்டிய ஆசிரியர்கள், ருக்மணியைப் பார்த்து. ‘‘நீங்கள் எல்லாம் புதுமை, புரட்சி என்ற பேரில் வருவீர்கள். இதெல்லாம் கலைக்கு உதவாது’’ என்று அவரை ஏளனமாக விமர்சித்தார்கள். ஆனால், ருக்மணிக்கு இந்தக் கலையை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சிஷ்யை ஆனார். சிறப்பாகக் கற்றார்.
தியாஸாஃபிகல் சொஸைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு முன்னிலையில் நடந்த பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் ருக்மணியின் பரதம் அரங்கேறியது. சீனிவாச சாஸ்திரி, ராமசாமி ஐயர், சிவஸாமி ஐயர் என்று ஏகப்பட்ட ஜாம்பவான்கள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் ருக்மணியின் நடனத் திறமை பளீரென்று பளிச்சிட்டது.
ஜேம்ஸ் கஸின்ஸ் என்கிற பிரபலமான அயர்லாந்துக் கவிஞர் ருக்மணியின் அந்த நடனத்தை வெகுவாகப் பாராட்டினார். அது மட்டுமில்லாமல், ‘‘ருக்மணி தன்னுடைய இந்த அற்புதமான நடனத் திறமையை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நடன மையத்தை ருக்மணி ஏற்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இந்த வார்த்தைதான் ருக்மணிக்கு நடன மையத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.
நினைத்ததோடு மட்டுமில்லாமல் செயலிலும் சுறுசுறுப்பாக இறங்கினார் ருக்மணி. ஆரம்பத்தில் தான் ஆரம்பித்த நடனப் பள்ளிக்கு ‘இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று பெயர் வைத்தார். பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடனப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பின்னர் கலா«க்ஷத்ராவாக உருப்பெற்றது.
ருக்மணியின் நடன குருக்களான பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், அவரது மருமகனான சொக்கலிங்கப் பிள்ளையும் தான் கலா«க்ஷத்ராவின் முதல் நடன ஆசிரியர்கள். ஆரம்பத்தில் கலா«க்ஷத்ராவில் நடனம் கற்றுக் கொள்ள வந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான்.
துவக்க காலத்தில் ருக்மணி தேவியின் நடனத்திற்கு டாக்டர் பத்மாஸினியும், கமலா ராணியும்தான் பாடுவார்களாம். அப்போது வீடு வீடாகச் சென்று டிக்கெட்டுகளை விற்று நடன நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். ருக்மணி தேவியின் ஒரே குறிக்கோளே ‘நடனத்தில் இருக்கிற சர்ச்சைக்குரிய சில விஷயங்களை நீக்கினாலே மக்கள் எல்லோருமே நடனத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். நடனத்துக்கென்று ஒரு புனிதத் தன்மை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்’ என்பதுதான்.
கொஞ்சம், கொஞ்சமாக நடனமும் ஓர் அற்புதமான கலைதான் என்பதை ருக்மணி அருண்டேல் எல்லோருக்கும் புரிய வைத்தார். கலா«க்ஷத்ராவை ருக்மணி தேவி கலைகளின் பிறப்பிடமாகவே நினைத்தார். அதனால்தான் கலா«க்ஷத்ராவில் நடனத்திற்கு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளுக்கும் முக்கியத்துவம் தந்தார். பல்வேறு சமூகப் பணிகளிலும் கலா«க்ஷத்ரா ஈடுபட்டது.
ருக்மணி அருண்டேல் தமிழ் மொழி மேல் அளவு கடந்த பற்று வைத்திருந்தார். உ.வே.சா. கண்டெடுத்த ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்று திரட்டி ‘டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் லைப்ரரி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் தமிழ் மக்களுக்குக் கிடைத்திட வழி செய்தார்.
1939_ல் மரியா மாண்டிஸோரி வரவழைத்து குழந்தைகள் பள்ளிகளை இந்தியாவில் பல இடங்களிலும் துவக்கினார். 1945_ல் ருக்மணியின் கணவர் அருண்டேல் இறந்த பிறகும் கூட இவரது சமூகப் பணிகள் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. பரத நாட்டியக் கலைஞர்களுக்கான ஆடைகளைச் சீரமைத்த பெருமை ருக்மணி அருண்டேலுக்கு உண்டு. நடனத்துக்காகவே பாடுபட்ட ருக்மணி விலங்குகளின் நேசிப்பாளர். பெண் குலத்திற்கே ஒரு ரோல்மாடலாக விளங்கிய இவர். தனது 82வது வயதில் 1986_ல் மறைந்தார். பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும், அந்த மகா மேதையை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!.