தடுமாறுகிறார் முதல்வர், ஏன்? – மாலன்
“தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது’ என்ற கருணாநிதியின் கூற்றையும், அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும், அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலையாளர்கள் மனதில் தீர்ப்பில் என்னதான் சொல்லியிருக்கிறது’ என்ற கேள்வி எழுந்திருக்கும்.
கருணாநிதி அளித்திருக்கும் விளக்கங்கள், அவர் இந்த விஷயத்தில் சற்றுக் குழம்பிப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. முதலில் “தடை செய்யப்பட்ட இயக்கம்’, “பயங்கரவாத இயக்கம்’ என்ற இரண்டும் ஒன்றெனக் கொள்ளும் மயக்கம் அவரிடம் காணப்படுகிறது.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனியொரு சட்டம் ( மய்ப்ஹஜ்ச்ன்ப் ஹஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் ( ல்ழ்ங்ஸ்ங்ய்ற்ண்ர்ய் அஸ்ரீற் 1967) ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. பொடா சட்டம் என்பது பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம். இன்று காலாவதியாகிவிட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே அதன் ஆதரவாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு பொடா சட்டம் தேவையில்லை. அதை இன்று பயன்படுத்தவும் இயலாது. காலாவதியான சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? ஆனால் இந்தப் பிரச்னையில் கருணாநிதி பொடா சட்டம் குறித்துப் பேசியிருப்பது அவரது குழப்பத்தையோ அல்லது பிரச்னையைத் திசை திருப்பும் அவரது விருப்பத்தையோ காட்டுகிறது.
சரி, பொடா சட்டம் குறித்த வழக்கின் தீர்ப்பு என்னதான் சொல்கிறது? ( அஐத2004நஇ456) குற்றவியல் நீதி பரிபாலனத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று ம்ங்ய்ள் ழ்ங்ஹ.
‘ஙங்ய்ள் ழ்ங்ஹ’ என்ற லத்தீன் வார்த்தைக்கு “குற்ற மனப்பான்மை’ என்று பொருள். வெறும் செயலின் அடிப்படையில் மாத்திரமே ஒருவரைக் குற்றம் செய்தவராகக் கருதக்கூடாது. குற்றம் செய்யும் மனப்பான்மையோடு அந்தச் செயல் செய்யப்பட்டதா என்பதே ஒருவரைக் குற்றம் புரிந்தவரா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற லத்தீன் வாசகத்தின் அடிப்படையில் உருவானதுதான் குற்றவியல் நீதி பரிபாலன முறை.
பொடா சட்டத்தின் 20, 21, 22 ஆகிய பிரிவுகள், செயலைக் கணக்கில் கொள்கின்றனவே அன்றி, குற்ற மனத்தைக் கருதிப் பார்க்கவில்லை. எனவே அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அந்தச் சட்டப்பிரிவுகள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கக் கோரி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒரு பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமோ, திட்டமோ இல்லாமல், ஒருவர் கூட்டத்தில் பேசினாலோ அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாலோ அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை எனத் தாங்கள் எண்ணுவதாகத் தெரிவித்தார்கள். சட்ட வார்த்தைகளையும், அலங்கார நடையையும் உரித்து விட்டுப் பார்த்தால், அவர்கள் சொல்வதன் பொருள், “வேண்டும் என்று செய்யாமல் தெரியாமல் செய்தால் அதைக் குற்றமாகப் பார்க்க வேண்டாம்’ என்பதுதான்.
திருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல் (அதாவது “தெரியாமல்’) அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா? கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் “தெரியாமல்’ செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. “”விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக” என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா? ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா?
எனவே கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வரிகள் திருமாவளவனின் பேச்சுகளுக்குப் பொருந்துவதாக இல்லை. அந்த வரிகளைச் சொல்லப்பட்ட சூழலில் இருந்து தனியே பிய்த்தெடுத்து, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காத தனது அரசின் செயலை நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார் கருணாநிதி.
இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை எனப் பேசியவர், பின்னர் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, தேவையானால் ஒரு சட்டம் கொண்டு வரவும் தயார் என்கிறார்.
அதாவது பொடா சட்டத்தை விடவும் கடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டு வரவும் அவர் தயார். ஒரு காலத்தில் பொடா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த அவர், இப்படித் தலைகீழான மாற்றத்துக்குத் தயாரானது எதன் பொருட்டு? விடை எல்லோரும் அறிந்தது. காங்கிரசை எப்படியாவது குளிர்வித்து கூட்டணியையும் அரசையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கருணாநிதி எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்.
இதில் இன்னொரு வேடிக்கை. திருமாவளவனது கூட்டத்திற்கு சில நாள்கள் முன்னதாக காவல்துறைத் தலைவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ஆனால் முதல்வர், அப்படி நடவடிக்கை எடுக்கச் சட்டமே இல்லை என்பது போலப் பேசுகிறார். சட்டமே இல்லை என்றால் காவல்துறைத் தலைவர் நடவடிக்கை எடுப்பேன் எனச் சொல்வது எப்படி? சட்டம் இருக்கிறது என்றால், முதல்வர் அதைப் பயன்படுத்தத் தயங்குவது ஏன்?
நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் எனத் தவறாகப் பிரசாரம் செய்யப்படுகிறது என்றும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியது எந்த அடிப்படையில்? அவர் ஒரு தமிழர் என்ற அடிப்படையிலா?
அப்படியானால் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட எத்தனையோ ஆயிரம் தமிழர்களுக்காக இரங்கல் தெரிவித்து கருணாநிதி இரங்கல் கவிதைகள் எழுதியிருக்கிறாரா?
இந்திய அமைதிப்படையில் பணியாற்றி விடுதலைப் புலிகளுக்குப் பலியான மேஜர் பரமேஸ்வரனுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா? கதிர்காமர் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா? மனிதாபிமான அடிப்படையில் என்றால் போரில் இறந்த எல்லா மனிதர்களுக்கும் அல்லவா அவர் இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும்?
தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒருவிதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்ச்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்ச்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம்.
தமிழ்ச்செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப்படையில் இருந்த பலர், போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர்.
இந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு, கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது.
தமிழ்ச்செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு. அவரது மரணம் விடுதலைப் புலிகளுக்கு இழப்பு. அந்த இழப்புக்குக் கருணாநிதி அனுதாபப்படுகிறார் என்றால் அவர் யார் பக்கம்?
விடுதலைப் புலிகளை அவர் ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை. ஜெயலலிதா எதிர்க்கிறார். தான் எதிர்க்கிறேன் என்பதை வாக்கு வங்கியை இழக்க நேரிடலாம் என்ற “ரிஸ்க்கை’யும் பொருள்படுத்தாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார். கருணாநிதியோ தி.மு.க.வோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?
(கட்டுரையாளர்: முன்னாள் தினமணி ஆசிரியர்)