வசந்தகாலம், கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் மற்றும் வசந்தகாலம்
(கொரியா)
அவளைப் படகில் ஏற்றி, கரையை நோக்கிச் செலுத்துகிறார். படகு போகிறது. அவன் வீட்டுக்குள் போய், புத்தர் சிலை முன் அமர்ந்து அழுதபடி பிரார்த்திக்கிறான். பிறகு ஓடி வந்து பார்க்கிறான். அவள் படகிலிருந்து இறங்கி நடக்கிறாள். மாஸ்டர் கரையிலிருக்கும் கதவை மூடுகிறார்.
இரவு. இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுக்கிறான். பிறகு மெதுவாக எழுந்து, ஒரு துணிப்பையில் புத்தர் சிலையைப் போட்டுக் கொள்கிறான். சேவலைத் தூக்கிக் கொண்டு படகில் ஏறி, படகைக் கரைக்கு விடுகிறான். மாஸ்டர் கண்களைத் திறக்கிறார். அமைதியாக அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார். அவன் கரையில் ஒற்றையடிப் பாதையில் நடக்கிறான். சேவலும் தனியே நடந்து போகிறது.
மழைக்காலம்
மாஸ்டர் எங்கோ வெளியில் போய்விட்டு, வீட்டுக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு வருகிறார். பொருள்களோடு ஒரு பூனையையும் அவர் கொண்டு வந்திருக்கிறார். ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரிக்கிறார். அதைச் சுற்றியிருந்த செய்தித் தாளில் ஒரு குட்டிச் செய்தி: “”முப்பது வயது இளைஞன், மனைவியைக் கொன்றுவிட்டு ஓட்டம்.”
மாஸ்டர் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு, வீட்டுக்குள் வருகிறார். இளைஞனுடைய பழைய உடையை எடுத்துத் தைக்க ஆரம்பிக்கிறார்.
கரையில் அந்த இளைஞன் வந்து நிற்கிறான். ஆளே மாறிப் போயிருக்கிறான். ஜீன்ஸ் பேண்ட், கோட் அணிந்திருக்கிறான். முகம் முழுக்கக் கோபமும் வெறுப்பும் மண்டிக் கிடக்கின்றன. மாஸ்டர் அவனைப் பார்த்துவிட்டுப் படகை எடுத்துக் கொண்டு கரைக்கு வருகிறார்.
அவனைப் படகில் ஏற்றிக் கொள்கிறார். “”நீ ரொம்ப மாறிப் போயிட்டே” என்கிறார். அவனுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கிறார். அவன் வெறுப்போடு பேசுகிறான். வீட்டுக்கு வந்ததும், தான் கொண்டு வந்த பையைத் திறந்து புத்தர் சிலையை எடுக்கிறான். அந்தச் சிலையை அது இருந்த பழைய இடத்திலேயே வைக்கிறான்.
தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ரத்தக்கரை படிந்த ஒரு கத்தியை எடுக்கிறான். தரையில் அமர்ந்து, அந்த மரவீட்டின் தரையை ஆங்காரமாகக் குத்துகிறான். இரவு. மாஸ்டர் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்க, இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறான்.
காலையில் படகை எடுத்துக் கொண்டு கரைக்குப் போகிறான். கரையில் இருக்கும் குட்டை நீரில் இறங்கி நின்று கொண்டு, ஆங்காரத்தோடு “தொப்! தொப்!’ என்று அடிக்கிறான். அமைதியில்லாமல் இங்குமங்குமாக அல்லாடுகிறான். வீட்டுக்கு வந்து பிரார்த்தனை செய்கிறான். வீட்டுக்கு வெளியே மாஸ்டர் பூனையைத் தடவியபடி அமர்ந்திருக்கிறார்.
பிரார்த்தனை முடிந்ததும், அவன் ஒரு பேப்பரில் “மூடு’ (நட்ன்ற்) என்று எழுதுகிறான். அந்தப் பேப்பரை எடுத்துக் கண், மூக்கு, வாய் ஆகியவற்றில் ஒட்டிக் கொண்டு, மூச்சை அடக்கித் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான்.
அவன் முனகும் சத்தம் கேட்டு மாஸ்டர் உள்ளே வருகிறார். அவன் தற்கொலைக்கு முயற்சிப்பதைப் பார்க்கிறார். ஒரு கம்பை எடுத்து அவனை அடி அடியென அடிக்கிறார். திட்டுகிறார்.
இளைஞன் கைகால்கள் கட்டப்பட்டு, உத்திரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறான்.
அவனைக் கட்டியிருக்கும் கயிறு ஒரு மெழுகுவர்த்தி ஜ்வாலையில் பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டுக்கு வெளியே மாஸ்டர், மரத்தரையில் பூனையின் வாலை ஒரு கறுப்பு மையால் தொட்டுத் தொட்டு எதையோ எழுதுகிறார். மந்திரச் சொற்கள் போல இருக்கிறது.
இளைஞனைக் கட்டியிருந்த கயிறு ஜ்வாலை பட்டுப் பொசுங்கி அறுந்து போகிறது. இளைஞன் கீழே விழுகிறான். தன் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறான். அவனுடைய நீண்ட முடியை, ரத்தக் கரை படிந்த கத்தியால் அவனே வெட்டிக் கொள்கிறான். தன் பழைய ஆசிரம உடையை அணிந்து கொண்டு, வீட்டை விட்டு வெளியே வருகிறான்.
மாஸ்டர் அவனைத் திரும்பிப் பார்க்காமல், தரையில் எழுதியபடி சொல்கிறார்.
“”உன்னை நீயே கொன்னுக்கறது நடக்காது. நான் எழுதியிருக்கிற எழுத்து மேல அந்தக் கத்தியால செதுக்கு. ஒவ்வொரு எழுத்தை வெட்டும்போதும், உன்னைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாப் போயிடும்.”
அவன் மாஸ்டர் மரத்தரையில் எழுதியிருக்கும் எழுத்துகளை ஒவ்வொன்றாகத் தன் கத்தியால் அழகாக செதுக்க ஆரம்பிக்கிறான்.
கரையில் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நின்று குரல் கொடுக்கிறார்கள். மாஸ்டர் படகில் வந்து அழைத்துப் போகிறார்.
அவர்கள் அந்த இளைஞனைக் கைது செய்ய வந்தவர்கள். அவனைப் பார்த்து இருவரும் துப்பாக்கியை உயர்த்த, அவனும் கத்தியைத் தூக்குகிறான். மாஸ்டர் அவனை அதட்டுகிறார். “”நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கே? ஒழுங்கா உக்காந்து எழுத்துகளை செதுக்கு.”
அவன் மறுபடியும் தரையில் அமர்ந்து எழுத்துகளைச் செதுக்க ஆரம்பிக்கிறான். மாஸ்டர், போலீஸ்காரர்களிடம் அவன் எல்லா எழுத்துகளையும் செதுக்கி முடித்த பிறகு, அவர்கள் அவனை அழைத்துப் போகலாம் என்கிறார்.
“”இது என்ன எழுத்து?”
“”பிரஜனபரமித சூத்ரம்.”
“”செதுக்கி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?”
“”நாளைக்குக் காலையில் முடிஞ்சுடும்.”
போலீஸ்காரர்கள் இருவரும் ஒரு ஓரமாக அமர்கிறார்கள்.
இளைஞன் தொடர்ந்து எழுத்துகளை செதுக்கியபடி இருக்கிறான்.
போலீஸ்காரர்கள், ஏரித் தண்ணீரில் ஒரு டப்பா மிதப்பதைப் பார்க்கிறார்கள். தங்கள் துப்பாக்கிகளை எடுத்து குறி பார்த்து மாறி மாறிச் சுடுகிறார்கள்.
ஆனால் டப்பாவைச் சுட முடியவில்லை. குறி தப்பிக் கொண்டே இருக்கிறது. துப்பாக்கி சத்தம் இளைஞனை, திடுக்கிட வைக்கிறது. அவன் மிரண்டு போய்க் கோபத்தோடு அவர்களைப் பார்க்கிறான். மாஸ்டர் ஒரு சிறிய கல்லை எடுத்து, வெகு சாதாரணமாக டப்பாவை நோக்கி எறிகிறார். கல் மிகச் சரியாக டப்பாவைத் தாக்குகிறது. போலீஸ்காரர்கள் பிரமித்துப் போய் பார்க்கிறார்கள்.
இரவு முழுக்க இளைஞன், தரையெங்கும் எழுதியிருக்கும் எழுத்துகளைக் கத்தியால் செதுக்குகிறான். போலீஸ்காரர்கள் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞன் அப்படியே தரையில் சுருண்டு படுத்துத் தூங்குகிறான். போலீஸ்காரர் தன் கோட்டைக் கழற்றி இளைஞனுக்குப் போர்த்திவிடுகிறார்.
மாஸ்டர் படுக்கையிலிருந்து எழுந்து வருகிறார். அவன் செதுக்கிய மரத்தணுக்குகளைப் பெருக்குகிறார். மூலிகைகளில் பெயிண்ட் தயாரித்து, அவன் செதுக்கிய ஒவ்வொரு எழுத்திலும் வர்ணம் பூசுகிறார்.
இளைஞன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறான். போலீஸ்காரர்கள் இருவரும் மாஸ்டருடன் சேர்ந்து, எழுத்துகளுக்கு வர்ணம் பூசுகிறார்கள். உச்சிப் பொழுதில் எல்லா எழுத்துகளும் வண்ணம் பூசப்பட்டு ஒளிர்கின்றன. மாஸ்டர் இளைஞன் படுத்திருக்கும் இடத்துக்கு வருகிறார். அவனை எழுப்புகிறார். “”எந்திரி! போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!”
இளைஞனை போலீஸ்காரர்கள் படகில் ஏற்றுகிறார்கள். அவனை விலங்கு போடாமல் கெüரவமாக அழைத்துப் போகிறார்கள். படகில் ஏறி துடுப்புப் போடுகிறார்கள். மாஸ்டர் படகில் இருக்கும் இளைஞனை அன்பு ததும்பும், ஏக்கமாகப் பார்க்கிறார்.
போலீஸ்காரர்களுக்குத் திகைப்பு, எவ்வளவு தரம் துடுப்புப் போட்டும் படகு முன்னோக்கி நகராமல் அப்படியே நிற்கிறது.
“”படகு நகர மாட்டேங்குது” என்கிறார் ஒரு போலீஸ்காரர். வீட்டிலிருந்து மாஸ்டர் இளைஞனைப் பார்த்துக் கையசைக்க, இப்போது படகு நகர்கிறது.
அவர்கள் இறங்கியதும், கரையில் இருந்த கதவு தானாக மூடுகிறது. படகு தானாகவே வீடு நோக்கி வருகிறது. மாஸ்டர் வேதனையோடு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார்.
மாஸ்டர் ஒரு பேப்பரில் Shut’ என்று எழுதுகிறார். படகில் சிதை அடுக்குவது போல சில விறகுகளை அடுக்குகிறார். தன் துறவி ஆடையையும், செருப்பையும், ஜபமாலையையும் சுழற்றி புத்தர் சிலை முன் வைக்கிறார்.
கண், காது, வாய், மூக்கில் Shut’ என்று எழுதிய பேப்பர் ஒட்டப்பட்டிருக்க, படகு துவாரத்தைத் திறந்து விட்டுவிட்டு, சிதையில் ஏறி அமர்ந்து தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறார். சிதை எரிகிறது.
அந்தப் படகிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, ஏரி நீரில் நீந்தியபடி வீட்டுக்குள் வருகிறது. மாஸ்டர் கழற்றி வைத்த ஆடையின் மேல் சுருண்டு படுத்துக் கொள்கிறது.
குளிர்காலம்
கதவு திறக்கிறது. இப்போது வீட்டைச் சுற்றி இருக்கும் ஏரித்தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து போயிருக்கிறது. பனி பொழிந்து கொண்டிருக்கிறது. ஜெயிலிலிருந்து இளைஞன் திரும்பி வருகிறான். உறைந்து போயிருக்கும் நீரின் மேல் நடந்து போகிறான். வீடு பூட்டியிருக்கிறது. சற்று தூரத்தில் பாதி மூழ்கிய நிலையிலிருக்கும் படகைக் கும்பிடுகிறான். வீட்டைத் திறக்கிறான்.
மாஸ்டரின் உடை மேல் படுத்திருக்கும் பாம்பு ஊர்ந்து போகிறது. இளைஞன், படகு மூழ்கியிருக்கும் பனியை வெட்டி, மாஸ்டரின் அஸ்தியை எடுக்கிறான். பனிக்கட்டியை வெட்டி ஒரு இடத்தில் ஊற்றுத் தோண்டுகிறான். ஊற்றுத் தண்ணீரில் முகம் கழுவிக் கொள்கிறான்.
புத்தர் சிலை முன் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறான். மேசை டிராயரைத் திறந்து, மாஸ்டர் வைத்துவிட்டுப் போன புத்தகத்தை எடுத்துப் படிக்கிறான். அதில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து உடற்பயிற்சி செய்கிறான். பனி கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பிக்கிறது.
இரவு. முகத்தைத் துண்டால் இறுகக் கட்டிய ஒரு பெண் கரைக்கு வருகிறாள். அவள் கையில் ஒரு கைக் குழந்தை. அவனிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு புத்தர்சிலை முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தபடி அழுகிறாள்.
இரவில் அவள் உறங்கும்போது, அவள் முகத் துணியை விலக்கப் பார்க்கிறான் இளைஞன். அவள் அவன் கையைப் பிடித்துக் கொள்கிறாள். இரவில் இளைஞன் உறங்கியதும், அந்தப் பெண் குழந்தையை விட்டுவிட்டு, வேகமாக வெளியே போகிறான். இளைஞன் ஊற்றுக்காகத் தோண்டிய குழியில் கால் வழுக்கி விழுந்து விடுகிறாள்.
காலை அந்தப் பெண்ணுடைய குழந்தை, அம்மாவைத் தேடி அழுதபடி, தவழ்ந்து தவழ்ந்து வெளியே வருகிறது. அவள் விழுந்த ஊற்றுக்குழிக்கருகே வந்து அழுகிறது. ஊற்று நீரில் அந்தப் பெண் அணிந்திருந்த ஒற்றைச் செருப்பு நீரில் மிதக்கிறது. இளைஞன் ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக் கொள்கிறான்.
இளைஞன் ஒரு பெரிய துரட்டுக் கோலைக் கொண்டு வந்து, குழிக்குள் விட்டு, அந்தப் பெண்ணின் சட்டையோடு சேர்த்து அவளைத் தூக்கிக் கரையில் இழுத்துப் போடுகிறான். அவள் முகத்தை மூடியிருக்கும் துணியை அவிழ்த்துப் பார்க்கிறான். ஒரு புத்தர் சிலையின் முகம் தெரிகிறது.
இளைஞன் அலமாரியிலிருந்து ஒரு போதிசத்வர் சிலையை எடுக்கிறான். ஒரு ஆட்டுக் கல்லை கயிற்றில் கட்டி, தன் இடுப்போடு சேர்த்துப் பிணைத்துக் கொள்கிறான். சிலையைத் தூக்கிக்கொண்டு, ஆட்டுக்கல்லை இழுத்தபடி நடக்கிறான்.
இழுத்து, இழுத்து, காடு, மேடு எல்லாம் கடந்து, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு மலை உச்சியில் ஏறி, தான் கொண்டு வந்த போதிசத்வர் சிலையை ஓர் இடத்தில் வைக்கிறான். அது அவன், தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தண்டனை. மீன், தவளை, பாம்பு ஆகியவற்றைத் துன்பப்படுத்தியதெல்லாம் இடையிடையே அவன் நினைவுக்கு வருகிறது.
வசந்தகாலம்
இப்போது அந்த இளைஞன்தான் மாஸ்டராக மாறியிருக்கிறான். அந்தப் பழைய மாஸ்டர் மாதிரியே தோற்றம். அந்தக் கைக்குழந்தை வளர்ந்து, நாம் ஆரம்பத்தில் பார்த்த சிறுவனாக மாறியிருக்கிறது. அதே முகம். சிறுவன் அமர்ந்திருக்க, மாஸ்டர் அவன் உருவத்தைப் படமாக வரைகிறார்.
சிறுவன் வீட்டுமேல் ஏறும் ஒரு ஆமையைப் பிடித்து விளையாடுகிறான். அதே பழைய குறும்புத்தனத்துடன் மலைமேல் இருக்கும் போதிசத்வர் சிலை மெüனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
“சுழற்சி விதி’ என்பார்களே அதை நேரில் பார்த்ததுபோல ஒரு பிரமை படம் முடிந்ததும் தோன்றுகிறது. மனித வாழ்க்கைத் துளியைப் படமாக எடுத்திருக்கும் இயக்குனர் கீடக்கீம்மை (Ki-duk kim) எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தின் கதையும் இயக்குனருடையதுதான்.
இப்படி ஒரு அற்புதமான சூழலை, நாம் நேரில் பார்த்ததுபோல ஓவியமாக வரைந்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டாங் ஹையோன் பேக் (Dong-hyeon Back). ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான ஜி-ஆங் பார்க்கின் (Ji-Woong park) இசை.
கேள்விகளால் ஆனது உலகம். எத்தனையோ கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் மானுட மந்தை அலைவுற்றிருக்கிறது. இருந்தாலும் விடையைத் தேடிப் புதுப்புதுக் கேள்விகளுடன் மானுடப் பயணம் தொடர்ந்தபடி இருக்கிறது. அன்பு என்ற ஆயுதத்தை ஏந்தியபடி!