விஜய் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை: திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு
சென்னை, டிச.25: “ஆதி‘ திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வரையில் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இச்சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசு அறிவித்துள்ள திரையரங்குகளுக்கான புதிய நுழைவுக் கட்டணத்தை முழு மனதோடு ஏற்றுக்கொள்வது.
திரைப்படங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அரசு அனுமதித்துள்ள நுழைவுக் கட்டணத்திற்கு உள்பட்டு நுழைவுக் கட்டணத்தை அவ்வப்போது மாற்றி அமைத்துக்கொள்ள அரசை கோருவது.
விஜய் நடித்த “ஆதி’ படத்தால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு கிடைக்கவில்லை. எனவே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், நடிகர் விஜய்க்கும் தொழில்முறையில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவு.
இனி வரும் காலங்களில் விநியோகஸ்தர்களுக்கு எம்.ஜி. மற்றும் எஃப்.எச். கொடுப்பதில்லை. மேலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 60 சதவிகிதமும், சிறு பட்ஜெட் படங்களுக்கு 50 முதல் 55 சதவிகிதம் வரையிலும் சதவிகித அடிப்படையில் படங்களைத் திரையிடுவது என்றும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.