ஆவணம்: நாடக இராமானுஜம்!
நாடகங்கள் என்றதும் சபா நாடகங்கள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. நவீன நாடகங்கள் என்ற பிரயோகம் சிலருக்கு அறிமுகமாகியிருக்கலாம்.
“”நடிப்பவர் தனியாகவும் பார்வையாளர் தனியாகவும் இரண்டு பகுதிகளாகச் செயல்படுவதை நவீன நாடகங்கள் மாற்றுகின்றன. சொல்லப் போனால் பார்வையாளர்களையும் அந்த நாடகத்தின் ஓர் அங்கமாகவும் அவர்களையும் படைப்பாளியாகவும் மாற்றும் சக்தியாக நவீன நாடகங்கள் இருக்கின்றன”- என்கிறார் நவீன நாடகத்தின் முக்கிய நபரான சே. இராமானுஜம்.
இவரைப் பற்றி ஆவணப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. எழுதி இயக்கியிருப்பவர் சி.அண்ணாமலை. இந்த ஆவணப்படத்தைக் குறித்து அவரிடம் கேட்டோம்.
“”வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பது போல இந்திய நாடக மேதையான இப்ராபீம் அல்காசியிடம் சிறந்த மாணவர் என்று பெயர் எடுத்தவர் இராமானுஜம்.<
நாடகம் என்பது இன்னொரு வாழ்க்கை. நாடகம் என்பது நாடக ஆசிரியன், நடிகன், பார்வையாளனை ஒருங்கிணைப்பது என்பது இவருடைய நாடகத் தன்மையின் முக்கியமான வித்தியாசம். கடந்த 45 ஆண்டுகளாக இவர் நவீன நாடகத்துக்காகப் பாடுபட்டுவருகிறார்.
ஷேக்ஸ்பியர், டி.எஸ். எலியட், பிரெக்ட், தாகூர், பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், இந்திரா பார்த்தசாரதி, ஜி. சங்கரபிள்ளை, ந.முத்துசாமி, ஜெயந்தன் உள்ளிட்டோரின் நாடகங்களை இவர் இயக்கியிருக்கிறார்.
தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாடகங்கள் இயக்கியிருக்கிறார். நாடகத்தை எழுத்தில் பார்ப்பதற்கும் நடிப்பில் கொண்டு வருவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நடிப்பு என்பது உடல் செயல்பாடு, உச்சரிக்கும் மொழியின் ஓசை, அதற்கான காட்சியின் பின்புலத்தில் நாடகம் நிகழ்த்தப்படுகிறது” என்கிறார் இராமானுஜம்.
பல மொழி நாடகங்களை இயக்கியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது “”நான் பல மொழி நாடகங்களை இயக்கி வருகிறேன். அத்தனை மொழிகளிலும் எனக்குப் பாண்டித்யம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அந்தந்த மொழியின் ஓசையை வைத்தே சரியாக வந்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என அவர் உறுதியாகக் கூறுகிறார்.
தேசிய நாடகப் பள்ளியில் முறையாகப் பயின்ற நாடக இயக்குநர்களில் முக்கியமானவராக இன்று நம்மிடையே இருப்பவர் ராமானுஜம்.
கேரளம், மைசூர், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ஏராளமான நாடகங்களை அரங்கேற்றியவர்- பல நாடக எழுத்தாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் என்பதால் அங்கெல்லாம் சென்று ஆவணங்கள் சேகரித்தோம். ஏறத்தாழ ஓராண்டுகாலத்துக்கு மேல் இந்த ஆவணத்துக்கு அவகாசம் தேவைப்பட்டது.
அவருடைய நாடகத்துக்கான நடிகர்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, கிடைத்த நடிகர்களை வைத்துதான் நாடகம் செய்கிறேன். ஒரு நடிகனைப் பிறக்க வைக்க முடியாது, உருவாக்கத்தான் முடியும். அவனிடம் மறைந்து இருக்கும் திறமைகளை வெளிக்கொணர பயிற்சி தேவைப்படுகிறது என்கிறார்.
நாற்காலிக்காரர், வெறியாட்டும், மெüனபுறம், கருப்புத் தெய்வங்கள் இவருடைய நாடகங்களில் முக்கியமானவை. இப்போது 400 ஆண்டு பழைமையான கைசீக நாடகத்தை ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஏகாதசி அன்று திருக்குறுங்குடி கோவிலில் அரங்கேற்றி வருகிறார். ஆண் டுதோறும் அந்த நாடகத்துக்கான பழைய வரலாறுகள் கிடைக்கும்போதெல்லாம் அவற்றையும் அதில் சேர்த்து வருகிறார்.
72 வயதான பேராசிரியர் ராமானுஜத்துக்கு உண்மையான காணிக்கை இந்தப் படம்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் சி. அண்ணாமலை
. முத்தையா வெள்ளையன்