இது நியாயமா?
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.
சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.
இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?
இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.
முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.
இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?