காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் நடிகர்-நடிகைகள் ஊர்வலம்: ஆளுநரிடம் மனு
பெங்களூர், பிப். 14: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் பெங்களூரில் நடந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள் திரளாக கலந்து கொண்டனர்.
காவிரியில் தமிழகத்தக்கு 192 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பிப்ரவரி 5-ம் தேதி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக கர்நாடகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு நடந்தது. இந்நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடனக்கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற இந்தப் பேரணி குமாரபார்க்கில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிலிருந்து தொடங்கி ஆளுநர் மாளிகையை அடைந்தது.
இப்பேரணியில் பிரபல கன்னட
- நடிகர் விஷ்ணுவர்தன்,
- மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார்,
- ராகவேந்திர ராஜ்குமார்,
- புனித் ராஜ்குமார்,
- நடிகை தாரா,
- மாலாஸ்ரீ,
- ஜெயந்தி,
- ஜெயமாலா,
- அனுபிரபாகர்,
- சுதாராணி மற்றும் புதுமுக நடிகர்-நடிகைகளும் கலந்துகொண்டனர்.
திரைப்படக் கலைஞர்களின் பேரணியை முன்னிட்டு விரைவு அதிரடிப்படை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பேரணி காரணமாக பெங்களூரில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை, குமார குருப்பா சாலை மற்றும் ராஜ்பவன் சாலை போன்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இப்பேரணியில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்தும், “காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்’ போன்ற கோஷங்களை திரைப்படக் கலைஞர்கள் எழுப்பினர். பேரணியில் கலந்துகொண்ட கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தல்லம் நஞ்சுண்டஷெட்டி கூறியதாவது:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் இப்பேரணி இத்துடன் நிறைவடைந்து விடாது. இது போராட்டத்தின் தொடக்கமே. கர்நாடகத்துக்கு நீதி கிடைக்கும் வரை கர்நாடக திரைப்படத்துறை போராடும் என்றார்.
பேரணி ஆளுநர் மாளிகையை அடைந்தவுடன்
- நடிகர் விஷ்ணுவர்தன்,
- திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் தல்லம் நஞ்சுண்டா ஷெட்டி,
- துணைத் தலைவர் சாரா கோவிந்து,
- திரைப்படத் தயாரிப்பாளரும்,
- மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியுமான பர்வதம்மா ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஆளுநர் மாளிகைக்குச் சென்றது.
கர்நாடக மாநில ஆளுநர் டி.என். சதுர்வேதியைச் சந்தித்து காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு நீதி கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.