ஸ்ரேயாவுக்கு நெருக்கடி!
சென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.
இதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்:
நடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.
ஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.
உறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.
முன்னணி நடிகைகளான
- ஸ்ரேயா,
- ஜெனீலியா,
- ஜோதிர்மயி,
- தமன்னா,
- நவ்யா நாயர்,
- சிந்துதுலானி,
- நடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.
ஆனால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:
அனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.
இனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.