தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடைசிறப்பு நிருபர்
புதுதில்லி, ஜன. 12: மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.
இந்த வழக்கில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி, சாட்சிகளில் ஒருவரான முத்துராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக்பான் மற்றும் லோகேஸ்வர் சிங் பன்டா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.
தமிழக அரசுக்கும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிற பதில்மனுதாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
முத்துராமலிங்கம் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள அழகிரி, தன்னிடம் உள்ள ஏராளமான பண பலத்தையும் ஆள் பலத்தையும் பயன்படுத்தி வருகிறார். வழக்கு விசாரணை நடைபெறும் போதெல்லாம், அழகிரியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூட்டத்தைத் திரட்டி நீதிமன்றத்துக்கு வந்து கோஷமிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீதிமன்ற அறைக்குள் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சாட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பீதியை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.
அரசுத் தரப்பு சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருட்டிணனின் சகோதரர் உள்பட மேலும் பல சாட்சிகள், மிரட்டல் காரணமாக நீதிமன்றத்துக்கு வருவதற்கே பயப்படுகிறார்கள்.
வழக்கை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவருக்கும் மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், தற்போதைய (திமுக) அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சம்பந்தப்பட்ட நீதிபதி மாற்றப்பட்டுவிட்டதாக அதற்குக் காரணம் கூறியிருக்கிறது.
தற்போதைய அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் சார்பில், ஏற்கெனவே ஆஜரானவர். அதனால், வழக்கு விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படாவிட்டால், நீதியே கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடும் என்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
——————————————————————————————
தா.கிருட்டிணன் கொலை வழக்கு: துணை மேயர் உள்பட 11 பேர் ஆஜர்
மதுரை, ஜூன் 2: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்து மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை கே.கே. நகரில் உள்ள அவரது வீடு அருகே 2003 மே 20-ம் தேதி தா.கிருட்டிணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக் கொலை தொடர்பாக மு.க.அழகிரி, அவரது ஆதரவாளர்களான தற்போதைய
- மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன்,
- எஸ்ஸார் கோபி,
- கராத்தே சிவா,
- ஈசுவரன்,
- மணி,
- சீனிவாசன்,
- பாண்டி,
- ராஜா,
- கார்த்திகேயன்,
- பாலகுரு,
- முபாரக் மந்திரி,
- இப்ராகிம் சேட் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மதுரை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த டிசம்பர் மாதம் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது, சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்ததன்பேரில், இவ் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு, வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகினர். மு.க.அழகிரி, கராத்தே சிவா ஆகிய 2 பேர் ஆஜராகவில்லை.
வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி டீக்காராமன் உத்தரவிட்டார்.