என்று தணியும் சுதந்திர தாகம்?
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய பேநசீர் புட்டோ, மனித குண்டுத் தாக்குதலுடன் பாகிஸ்தானில் வரவேற்கப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இப்படியொரு வெடிகுண்டு கலாசாரத்தை அரசும், பாகிஸ்தானிய ராணுவமும் ஆதரித்ததன் விளைவை இப்போது அந்த நாட்டு அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம்.
தீவிரவாத சக்திகள் தங்களுக்கு மத முலாம் பூசிக் கொள்வதன் மூலம் அரசின் ஆதரவும், ராணுவத்தின் உதவியும் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டதன் விளைவுதான், பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள்.
ஜெனரல் பர்வீஸ் முஷாரஃப் எந்தத் தீவிரவாத சக்திகளின் துணையோடு ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ அந்த சக்திகளை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி அடக்கவும் ஒடுக்கவும் முயன்றால், அந்தத் தீவிரவாத சக்திகள் எப்படிப் பேசாமல் இருக்கும்?
பாகிஸ்தானைப் பொருத்தவரை ஆட்சியில் அமர்வதற்கு ஒன்று பஞ்சாபியராக இருக்க வேண்டும் அல்லது சிந்தியாக இருக்க வேண்டும். லாகூரைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் பஞ்சாப் என்றும், கராச்சியைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் சிந்து என்றும் அழைக்கப்படும். ஜெனரல் முஷாரஃபும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். சிந்துப் பகுதியைச் சார்ந்தவர் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ. அமெரிக்காவின் துணையோடு பிரதமர் முஷாரஃபும், பேநசீர் புட்டோவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முஷாரஃப் அதிபராகத் தொடர்வது என்றும், பேநசீர் புட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதான் பிரச்னைக்கு அஸ்திவாரமே. அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரீஃபும், பேநசீர் புட்டோவும் கைகோர்த்து மீண்டும் மக்களாட்சி நிலவப் போராடுவதை விட்டுவிட்டு பேநசீர் புட்டோ, அதிபர் பர்வீஸ் முஷாரஃபுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா? பேநசீர் மீது சாட்டப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படும் என்பதுதான்.
பேநசீர் புட்டோவுக்கு சிந்து மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல, நவாஸ் ஷரீஃபும் சரி, பஞ்சாப் மாகாணத்தின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்தான். ஆனால் இருவருக்குமே இருக்கும் பொதுவான பலவீனம், அவர்களது சுயநலமும், ஊழல் குற்றச்சாட்டுகளும். ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு, அதிபராகவும் முஷாரஃப் தொடரலாமா என்கிற கேள்விக்கு விரைவிலேயே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க இருக்கிறது.
பாகிஸ்தானிய அரசியலும் சரி, அரசியல் தலைவர்களும் சரி அமெரிக்காவின் கைப்பாவைகளாகத்தான் செயல்பட முடியும் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அந்த அளவுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் அமெரிக்க ஆதிக்கம் ஊடுருவி இருக்கிறது. இதன் விளைவுதான் அதிகரித்து வரும் தீவிரவாதம். இதுவரை அண்டை நாடான இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானிலேயே தங்களது கைவரிசையைக் காட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மத முகமூடியை அணிந்துகொண்டு அப்பாவி மக்களை உயிர்ப்பலி கொள்ளும் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால், முதலில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடு பாகிஸ்தானில் இருக்கக் கூடாது; இரண்டாவது, ஆட்சியில் ராணுவம் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும்; மூன்றாவது, பாகிஸ்தானில் முறையான தேர்தல் நடைபெற்று மக்களாட்சி மலர வேண்டும். இல்லையானால், எல்லாம் வல்ல இறைவன்தான் பாகிஸ்தானைக் காப்பாற்ற வேண்டும்!
———————————————————————————————————————————————-
நம்பிக்கை நட்சத்திரமல்ல, பேநசீர்!
எம். மணிகண்டன்
அரசியல்வாதிகள் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பார்கள் என்பதால் அரசியலை, பரமபத விளையாட்டுடன் ஒப்பிடுவதுண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு இந்த ஒப்பீடு மிக நன்றாகவே பொருந்தும்.
புட்டோ தூக்கிலிடப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது, ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார் பேநசீர். ஆனால் 1988-ல் அவர் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் அவர்மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டபோது, மக்களின் மதிப்பை இழந்தார்.
1993-ல் மீண்டும் பிரதமரானபோது, அவர் மீது முன்பைவிட அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளே எழுந்தன. அதனால் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து, போலந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பேநசீரும் அவரது கணவர் ஸர்தாரியும் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களைக் காட்டின.
இதனால் சிறைக்குச்செல்ல வேண்டும் என்று அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினார் பேநசீர். அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, நாட்டைவிட்டே வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தபோதும் சரி, அவரும் அவரது கட்சியினரும் மக்களைப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை.
கடந்த 18-ம் தேதி பேநசீர் பாகிஸ்தான் திரும்பியபோது, அவர் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து 139 பேர் இறந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஆனால் சம்பவம் நடந்த சில வினாடிகளுக்குள் பேநசீர் கட்சியைச் சேர்ந்த பெரிய தலைவர்கள்முதல் குட்டித் தலைவர்கள்வரை அனைவரும் தங்களது சொகுசு கார்களில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர் என்பதுதான் இறந்தோர் குடும்பங்களுக்கு வேதனை அளித்த சேதி.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைக் கொண்டுசெல்வதற்குக்கூட போதுமான வாகனங்கள் இல்லை. இறந்தவர்கள் அனாதைப் பிணங்களாகத் தெருவிலே கிடந்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பேநசீரைத் தவிர வேறு யாரைக் குறை கூறினாலும் அது ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஏனென்றால் தனது வருகை ரத்தகளறியாக மாறப் போகிறது என்பது பேநசீருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் முன்பே தெரியும்.
முஷாரப் ஆட்சியில் மக்களைத் தவிக்கவிட்டு இவ்வளவுகாலம் பேநசீர் எங்கே போயிருந்தார் என அவரது கட்சியினரே கேள்வி எழுப்புகின்றனர். முஷாரபுடன் முறையின்றி ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே அவர் பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார் என்பதில் மக்களுக்கும் கோபமிருக்கிறது.
முஷாரப் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் முன்பைவிடச் சுதந்திரமாக இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவி செய்தவர் என்பதால் முஷாரபுக்கு மேலைநாடுகளின் ஆதரவு இருக்கிறது.
லால் மசூதி, பழங்குடி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மத அடிப்படைவாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அப்படியிருந்தும் முஷாரபை மக்களுக்குப் பிடிக்காமல் போனதற்கு காரணம், அவர் பதவிக்கு வந்தவிதமும், பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்யும் தந்திரங்களும்தான்.
ஆனால், இந்தத் தந்திரங்கள் அனைத்தையும் இதற்கு முன்பே செய்தவர்தான் பேநசீர். அவரும் தனது வசதிக்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தியவர்தான். தனது குடும்பத்தினருக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கி சட்டம் ஒழுங்கைக் கேலிக்கூத்தாக்கியவர்தான்.
பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமரானாலும், இப்போது அவருக்கும் முஷாரபுக்கும் இடையே இருக்கும் சுமுக உறவு தொடர்ந்து இருக்கப்போவதில்லை. அதற்குக் காரணம் முஷாரப் கையில் இருக்கும் ஆட்சிக் கலைப்பு அதிகாரம்தான். இதற்கான அரசியல்சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.
ஆட்சியைப் பிடிப்பதே சிரமம் என்பதால், இரண்டில் மூன்று பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது முடியாத விஷயம். இச் சட்டத் திருத்தத்தால் ஏற்கெனவே ஒருமுறை பதவியை இழந்த பேநசீர், பதவியில் நீடிக்க வேண்டுமானால் முஷாரபுக்கு அடிபணிந்தே சென்றாக வேண்டும். அதனால், தத்தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முஷாரபும் பேநசீரும் புதிய தந்திரங்களை பிரயோகிப்பார்கள்.
அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக முஷாரபை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், பேநசீருக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். ஏனென்றால் முஷாரபைக் காட்டிலும் அமெரிக்காவின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பவர் பேநசீர். முஷாரபுக்கு ஒருபடி மேலேபோய், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கக்கூட பேநசீர் தயங்கமாட்டார்.
பேநசீரும், முஷாரபும் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமராவார். ஆனால் முன்புபோல் பேநசீரிடம் பாகிஸ்தான் மக்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பாகிஸ்தானை ஆட்சி செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? புட்டோவின் மகள் என்பதைத் தவிர.