பிரச்சினை: ஓரம்போ… ஓரம்போ!!
க. ஆனந்த பிரபு
டபுள் டக்கர், வெஸ்டி புல், பளபளக்கும் நீல, சிவப்பு பஸ்கள் என புதுப்புது பஸ்களாகப் பறக்க விட்டாலும், கடைசி மூச்சை விடுவதற்காக காத்திருக்கும் “தள்ளுராஜா… தள்ளு’ பஸ்களும் சென்னையில் அதிகம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
அவை டெர்மினஸிருந்து முக்கி முனகிப் புறப்பட்டு லொடக்லொடக்கென்று ஓடி, போகிற வழியில் பிரேக் டவுனாகி வேறு பஸ் பிடித்து போவதற்குள் இன்டர்வியூவே முடிந்துபோகிற சோக அனுபவங்களும் பலருக்குத் தொடரத்தான் செய்கிறது.
ஒரு கற்பனைக்காக, எல்லாருமே புகைபிடிப்பதை விட்டு விட்டாலும், பஸ்கள் புகைபிடிப்பதை விடாது போலிருக்கிறது.
தேய்ந்துபோன டியூப் அடிக்கடி பஞ்சராகிக்கொண்டே இருப்பது போல போக்குவரத்துறையில் மட்டும் இதுபோன்ற கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்பழன் சொல்கிறார் :
சென்னை மாநகரத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 554 பஸ்கள் இருக்கின்றன. இதில் சுமார் ஆயிரத்து 700 முதல் ஆயிரத்து 800 பஸ்களே இயங்கும் நிலையில் உள்ளன. மீதமுள்ள சுமார் 700 பஸ்கள் பழுதடைந்து இயங்காத நிலையில் உள்ளன.
மத்திய அரசு போக்குவரத்துச் சட்டத்தின்படி ஒவ்வொரு பேருந்தும் அதிகபட்சமாக 6 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 6 ஆண்டு காலம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்துப் பஸ்களும், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 6 லட்சம் கிலோ மீட்டரைத் தாண்டியும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாகவே மாநகர பஸ்கள், பாதி வழியிலே நின்று விடுவதும், நிறைய பஸ்கள் புகைகளைக் கக்குவதுமாக இருக்கிறது. இது பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
மாநகரப் பேருந்துகளைப் பராமரிக்க போதுமான அளவு ஊழியர்கள் இல்லாமையாலும் போதுமான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இல்லாமையாலும் போக்குவரத்து கழகம் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி நடத்தி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் பேருந்துகளுக்கு ஏற்ற உதிரிப்பாகங்களும் இல்லை. அப்படியிருந்தாலும் அவற்றின் தரம், நிலைப்புத்தன்மை வெறும் பெயரளவிலேயே இருக்கிறது.
1970-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு ஒரு வண்டிக்கு 7.5 பேர் வீதம், பணியாளர்களை நியமிக்கப் பட வேண்டும் என்று அப்பொழுதே மத்திய அரசால் அமைக்கப்பட்ட பட்டாபிராமன் குழு பரிந்துரை செய்தது. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆள் குறைப்பின் காரணமாக அதை ஒரு வண்டிக்கு ஒரு நபர் வீதம் குறைத்து 6.5 பேர் வீதம் பணியாளர்களை மட்டும் வைத்து இன்றளவும் இயக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை எழுத்து மூலமாகவும், போராட்டம் மூலமாகவும் எடுத்துக்கூறியும் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கத் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.” என்கிறார் அவர்.
இவரின் குரல்போலவே ஒரு பேருந்தில் பயணிக்கிறபோது நாம் கேட்ட சில ஆதங்கக் குரல்களையும் இங்கே தருகிறோம்:
“”பஸ் டிக்கெட் விலை ஏத்தலைன்னு சொல்லுறாங்க. ஆனா சாதா கட்டண பஸ்ûஸக் கண்ணுலையே காணோம். கூடுதல் காசு கொடுத்து போறதைத் தவிர எங்களுக்கு வேற வழி என்ன இருக்கு?” என்றனர் கோயம்பேட்டில் காய்கறி மார்க்கெட்டிற்குப் போகும் இரு பெண்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் ஆவேசத்தோடு, “”ராத்திரி பத்து மணிக்கு மவுண்ட்ரோடே கூட பஸ் இல்லாம அஸ்தமித்துப் போகிறது. ஒன்பதரைக்கே நைட் சர்வீஸ் ஆரம்பித்து ரெட்டைப் படி பிடுங்கிறது என்ன நியாயம்? எங்கே கூட்டம் அதிகம் இருக்கிறதோ அங்க குறைவான பஸ்ûஸ விடுறாங்கன்னா பாருங்களேன். தொழிலாளர் கூட்டம் நிரம்பி வழியும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து தாம்பரத்துக்குப் போக ஒரே ஒரு பஸ்தான். அதுவும் ராத்திரியிலதான் தெரியுமா?” என்று உரக்கக் கத்தினார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரும் தங்கள் சோகக் கதைகளை ஆவேசமாகச் சொல்லிக்கொண்டே இருந்தனர். லொடக்லொடக் என பஸ் போய்க்கொண்டே இருந்தது.
—————————————————————————————————
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் டவுன் ஸ்களில் டிக்கெட் எந்திரம் அறிமுகம்
சென்னை, ஜுலை. 17-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. ஓட்டை உடைசலான பஸ்கள் ஒதுக்கப்பட்டு நவீன சொகுசு பஸ்கள் விடப்பட்டுள்ளன.
பயணிகள் நீண்ட தூரம் சொகுசாக பயணம் செய்ய ஏதுவாக `அல்ட்ரா டீலக்ஸ்’ பஸ்கள் விடப்பட்டுள்ளது.
டவுன் பஸ்கள் சொகுசு இருக்கைகளுடன் தற்போது விடப்படுகின்றன. சென்னை யில் புதிதாக விடப்பட்டுள்ள டவுன் பஸ்கள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பத்துடன் புகையை வெளியேற்றாத பாரத் நிலை மூன்று மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடக, கேரளா மாநில அரசு போக்குவரத்து கழகங்களில் கண்டக்டர்கள் டிக்கெட் கையால் எழுதியோ, அச்சடித்த டிக்கெட்டை கிழித்தோ கொடுப்பது இல்லை. சாப்ட் வேர் பொருத்தப்பட்ட கையடக்கமான சிறிய எலக்ட்ரானிக் எந்திரம் மூலம் டிக்கெட்
வழங்கப்படுகிறது.இந்த முறையை தமிழக அரசு போக்குவரத்து கழகங் களிலும் பின்பற்ற அமைச்சர் கே.என்.நேரு முடிவு செய்தார். அதன்படி பரீட்சார்த்த முறையில் சென்னையில் 5 பஸ்களில் டிக்கெட் எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
கண்டக்டர் எளிதாகவும், விரைவாகவும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க உதவும் இந்த மெஷினின் மதிப்பு ரூ.8000. அரை கிலோ எடை கொண்ட மெஷினில் உள்ள பட்டனை அழுத்தினால் டிக்கெட் வெளிவரும்.
ஒவ்வொரு `ஸ்டேஜ்’-க்குரிய கட்டணம் அதில் சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். பயணிகள் எத்தனை டிக்கெட் கேட்டாலும் விரைவாக கொடுக்க முடியும்.
ஒவ்வொரு ஸ்டேஜ்க்கு உரிய கட்டணமும் தானாக மாறிக் கொண்டே இருக்கும். தனி நபருக்கு டிக்கெட் கொடுப்பதாக இருந்தாலும் குடும்பத்துக்கும் மொத்தமாக டிக்கெட் கொடுப்பதாக இருந் தாலும் இந்த முறை மிக எளிது. ஒரே டிக்கெட்டில் எத்தனை பேர் பயணம் செய்யவும் அதில் குறிப்பிட முடியும்.
கண்டக்டர் ஒவ்வொரு ஸ்டேஜிலும் வினியோகம் செய்யப்பட்ட டிக்கெட் எத்தனை, ஏறிய பயணிகள் விவரம் போன்றவற்றை எழுத தேவையில்லை. மெஷின் மூலம் டிக்கெட் வழங்கும் போது அதில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். டிக்கெட் பரிசோதகர் கூட மெஷினில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் பயணிகள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரம் தெரிந்து விடும்.
டவுன் பஸ்களில் எவ்வளவு பேர் பயணம் செய்தாலும் நவீன டிக்கெட் மெஷின் மூலம் விரைவாக டிக்கெட் கொடுக்க இயலும்.
இந்த புதிய திட்டத்தை அனைத்து போக்குவரத்து கழகங்களிலும்நடை முறைப்படுத்த அமைச் சர் கே.என்.நேரு உத்தர விட்டுள்ளார். முதல் கட்டமாக 10 ஆயிரம் டவுன் பஸ்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து புறநகர் பஸ்களிலும், விரைவு பஸ் களிலும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் இருந்து டிக்கெட் மெஷின் கொள்முதலுக்கான டெண்டர் கோரப்படுகிறது.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் எந்திரம் கொடுக்கும் போது, அதை கையாள்வது குறித்த பயிற்சியும் கண்டக்டர்களுக்கு அளிக் கப்படும். இந்த மெஷின் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை ஒரு நாளைக்கு வழங்க முடியும்.
————————————————————————————————–
நிறுத்தத்தில் நிற்க முடியாமல் பயணிகள் ஒதுங்கிச் செல்கின்றனர்.
ஆக்கிரமிப்புகளின் பிடியில் பஸ் நிறுத்தங்கள்
சென்னை, ஆக. 30: சென்னை நகரில் பெரும்பாலான பஸ் நிலையங்களும், நிறுத்தங்களும் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.
பஸ் நிறுத்தங்களில் இருந்தும் விலகி நிற்கும் பயணிகள், பஸ்களை விரட்டிச் சென்று பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த பஸ் நிறுத்த ஆக்கிரமிப்புகளால், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினத்தோறும் அவதிப்படுகின்றனர்.
சென்னை நகரில் 1,200-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பவை 364. மீதமுள்ளவை போக்குவரத்துத் துறையின் கீழ் வருகின்றன.
ஆனால், உண்மையில் இவற்றில் பெரும்பாலான பஸ் நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கியிருக்கின்றன.
கடைகளும், வாகனங்களும்… சென்னையில் ஜாம்பஜார், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் கடைகளை ஒட்டியபடி, பஸ் நிறுத்தங்கள் அமைந்துள்ளன.
இதனால், கடைகளுக்கு வருவோர் மற்றும் அந்தக் கடைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வாகனம் மற்றும் பொருள்களை பஸ் நிறுத்தத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் பஸ்
“”பஸ் நிறுத்தங்களை பைக்குகள் மட்டும் ஆக்கிரமிக்கவில்லை. ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமிக்கின்றன. குறிப்பாக, எழும்பூர், கடற்கரை ரயில் நிலைய பஸ் நிறுத்தங்களில் நிற்பது ஆட்டோக்கள் தான்.
இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, பஸ் டிரைவர்கள் பஸ்ûஸ சிறு தூரம் தள்ளி நிறுத்துகின்றனர். இதை எதிர்பார்க்காத பயணிகள் ஓடிச் சென்று ஏறுகின்றனர். இன்னும் சில பஸ்கள் சாலையின் நடுவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், “திடீர்’ போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார் ரயில் – பஸ் பயணிகள் நலச் சங்க தலைவர் ரவிக்குமார்.
குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பெண்கள் அதிகம் வரும் இடங்களுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில், அவர்கள் அமர்வதற்குக்கூட இடம் இருப்பதில்லை.
பஸ் நிலையங்களில்… பஸ் நிறுத்தங்கள் மட்டுமின்றி, சென்னை நகரின் சில பஸ் நிலையங்களும் கடும் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கின்றன. பிராட்வே பஸ் நிலையத்தின் உள்ளே இப்போது ஏராளமான கையேந்தி பவன்கள்.
கடையில் உள்ளவர்கள் தங்களது பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கழுவி பயணிகள் நிற்கும் இடத்திலேயே ஊற்றுகின்றனர். பஸ் நிலையத்தில் பெரும்பாலான கடைகள் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றனர். இதைக் கண்டு, மிரளும் பயணிகள் வேறு இடம் நோக்கிச் செல்கின்றனர். பஸ் வரும் நேரத்தில் ஓடிவந்து ஏறுகின்றனர்.
பஸ் நிறுத்தங்கள் இல்லாமல் அவதி: பூந்தமல்லி, குமணன்சாவடி, போரூர் போன்ற சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் பஸ் நிறுத்தமே இல்லை என்பதும் மற்றொரு குறை.
காஞ்சிபுரம், வேலூர் போன்ற ஊர்களுக்குச் செல்ல பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர்.
இந்த நிறுத்தத்தில் நிழற்குடை உள்பட எந்த அடிப்படை வசதியும் கிடையாது. வெட்ட வெளியில் தான், நிற்க வேண்டிய அவலம் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.
புதிய பஸ் நிறுத்தங்கள் எப்போது?: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பஸ் நிறுத்தங்களை இடித்து விட்டு, புதிய பஸ் நிறுத்தங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி.
இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போதுதான் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
இந்த விஷயத்தில் மாநகராட்சியின் பணிகள் மந்தம் என்றால், பெரும்பாலான பஸ் நிறுத்தங்களைக் கையில் வைத்திருக்கும் போக்குவரத்துத் துறையோ கவலையே படாமல் இருக்கிறது. பஸ் பயணிகளின் பிரச்னையை புரிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் துறைகளை “உசுப்பி’ விடுமா அரசு நிர்வாகம்?.
———————————————————————————————–
ஏ.சி. வால்வோ பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைவிட இரண்டரை மடங்கு கட்டணம்
சென்னை, செப். 13: தமிழகத்திலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அதி நவீன குளிர்சாதன “வால்வோ’ பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்தில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தடம் எண் 21ஜி (தாம்பரம்-பிராட்வே), தடம் எண் 19ஜி (பிராட்வே-கோவளம்), தடம் எண் 70 (தாம்பரம்-ஆவடி), சென்னை விமான நிலையம்-பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களில் முதல் கட்டமாக 5 பஸ்களும், பின்னர் 5 பஸ்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முதல்வர் பார்வை:
இந்த நவீன பஸ்களில் இரண்டு பஸ்கள் செவ்வாய்க்கிழமை மாநகரப் போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு அருகில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் புதன்கிழமை தலைமைச் செயலகத்துக்கு வந்த பஸ்களை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார்.
ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர்க்காடு வீராசாமி, மாநகரப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆர். பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இரண்டரை மடங்கு கட்டணம்:
ஏ.சி. பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைக் காட்டிலும், இரண்டரை மடங்கு கட்டணம் வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 10-ம், அதிகபட்சம் ரூ. 50-ம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு வழித்தடத்திலும் இந்த பஸ்களை 12 நடைகள் இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டிங் மெஷின்கள் அறிமுகம்:
இந்த பஸ்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்குவதற்கு “டிக்கெட்டிங் மெஷின்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன. படிப்படியாக அனைத்து மாநகர பஸ்களிலும் டிக்கெட்டிங் மெஷின்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவீன கேமராக்கள்:
இந்த பஸ்ஸின் நடுப்பகுதி கதவு மற்றும் பின் பகுதியில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்.ஈ.டி. திரை டிரைவர் இருக்கைக்கு முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்ஸில் ஏறி, இறங்கும் பயணிகளையும், பின் பகுதியில் வரும் வாகனங்களையும் டிரைவர் கவனித்து, பஸ்ûஸ எளிதாக இயக்க முடியும்.
இந்த பஸ்களில் சென்சாருடன் கூடிய தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கதவுகள் மூடும்போது பயணிகளின் கை, கால், உடமைகள் சிக்கிக் கொண்டால் உடனே கதவுகள் தானே திறந்துவிடும்.
டிஜிட்டல் வழித்தட பலகைகள்:
பஸ்ஸின் முன் பகுதி, பின் பகுதி மற்றும் இடது பக்கவாட்டில் நவீன எல்.ஈ.டி. டிஜிட்டல் வழித்தடப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை அளிக்கும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 41 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
மொபைல் ரீசார்ஜ் செய்ய வசதி:
இந்த பஸ்களில் லேப்டாப் உபயோகிப்பவர்களுக்காக சிறப்பு வசதியும், மொபைல் ரீசார்ஜ் செய்துகொள்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு அவ்வப்போது தகவல்களை அளிக்கும் வகையில் மைக் மற்றும் ஆம்பிளிபையர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இனிமையான இசை ஒலிக்கவும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
45 டிரைவர்களுக்கு பயிற்சி:
தானியங்கி கியர் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இந்த பஸ்களை திறம்பட இயக்குவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 45 டிரைவர்களுக்கு, வால்வோ நிறுவனம் 15 நாள்கள் பயிற்சி அளித்துள்ளது. இந்த டிரைவர்களுக்கு தொப்பியுடன் கூடிய தனிப்பட்ட சீருடை வழங்கப்பட்டுள்ளது.
இணையதள முன்பதிவு:
ஏ.சி. வால்வோ பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் அதே நாளில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இணையதள முன்பதிவு முறையும் அறிமுகப்படுத்ப்பட உள்ளது.