ரஷ்ய- ஜார்ஜிய விவகாரம் கடுமையாகிறது
![]() |
![]() |
ரஷ்ய இராணுவ வளாகத்தை ஜார்ஜிய துருப்புக்கள் சுற்றி வளைத்துள்ளனர் |
உளவு பார்த்தாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விவகாரம் முற்றி வருவதன் அறிகுறியாக ஜார்ஜியாவின் தலைநகர் டிபிலிசியில் இருக்கும் தனது தூதரை திரும்ப அழைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜார்ஜியாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்றும் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி இவனாவ் தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய தூண்டிவிடும் சம்பவத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிகாரிகள் திட்டமிட்டனர் என்று ஜார்ஜியா கூறுகிறது.
தலைநகர் டிபிலிசியில் உள்ள ரஷ்ய இராணுவ வளாகத்தை ஜார்ஜிய துருப்புக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த வளாகத்தினுள் தாங்கள் விசாரிக்க விரும்பும் மற்றுமொரு ரஷ்ய அதிகாரி தஞ்சம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஜார்ஜியாவில் உள்ள ரஷ்ய அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளியேற வேண்டும் என்று ரஷ்யா உத்திரவிட்டுள்ளது. டிபிலிசியில் இருக்கும் ரஷ்ய தூதரகம் விசா விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை நிறுத்திவைத்துள்ளது.