கல்வி: மூணு லட்சம் புத்தகங்கள்! முன்னூறு ரூபாய்!
பி.முரளிதரன்
சாதனை படைத்த மேதைகளின் பள்ளி, கல்லூரி பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அவர்களின் வறுமைப் பக்கங்கள் நம்மை வருத்தும். பாடப் புத்தகங்கள் வாங்க முடியாமலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும் கஷ்டப்பட்டிருப்பர். இந்தக் கஷ்டத்தை வளரும் இன்றைய தலைமுறையினர் எவ்விதத்திலும் படக்கூடாது என்ற நோக்கில் செயல்பட்டு வருபவர் கணேசன்.
இதற்காக சென்னை சைதாப்பேட்டையில் ‘ஆர்.இ.சி. புக் பேங்க்’ என்ற பெயரில் புத்தக வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். இவ்வங்கி மூலம் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை வழங்கி வருகிறார். இதுதொடர்பாக கணேசன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
”தஞ்சாவூர் அருகில் உள்ள கோபாலபுரம் என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த எனக்கு, இளம் வயதிலேயே படிப்பில் ஆர்வம் அதிகம். அந்தக் கிராமத்தில் பத்தாவது வரை படித்த முதல் ஆள் நான்தான். அதன் பிறகு, சென்னையில் உள்ள விவசாயப் பொறியியல் துறையில் வேலை கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் வந்து நிரந்தரமாகத் தங்கினேன்.
கணிதம் பாடத்தில் எனக்கு ஆர்வம் இருந்ததால், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்தேன். முதலில் சிறு வகுப்புகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்த நான், நாளடைவில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் டியூஷன் சொல்லிக் கொடுக்கத் துவங்கினேன். குறிப்பாக, என்ஜினீயரிங் பயிலும் மாணவர்களுக்குக் கணிதப் பாடம் சொல்லிக் கொடுத்தேன்.
அப்போது, என்னிடம் படிக்க வந்த மாணவர்கள் சிலர் புத்தகம் வாங்க மிகவும் சிரமப்பட்டனர். என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களின் விலை மிகவும் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம். இப்படிப்புகளுக்கான ஒரு புத்தகத்தின் மிகக் குறைந்தபட்ச விலையே ரூ.300-க்கு மேல் தான் உள்ளது.
இவ்வாறு சிரமப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தக வங்கியைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன்படி, 2000-ம் ஆண்டில் ‘ஆர்.இ.சி. புக் பேங்க்’ என்ற புத்தக வங்கியைத் துவங்கினேன். என்ஜினீயரிங் படிப்புகளான பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.சி.ஏ., போன்ற பாடப் பிரிவுகளுக்கான பாடப் புத்தகங்கள் இந்த வங்கியில் உள்ளன.
துவக்கிய முதல் ஆண்டிலேயே சுமார் 500 பேர் இந்த வங்கியின் மூலம் பயனடைந்தனர். தற்போது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலன் பெற்றுள்ளனர். இந்தப் புத்தக வங்கியில் தற்போது ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்தப் புத்தக வங்கியில் உறுப்பினர்களாகச் சேர, மாணவ, மாணவியர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகையாக (இஹன்ற்ண்ர்ய் ஈங்ல்ர்ள்ண்ற்) ரூ.1,800 வசூலிக்கப்படுகிறது. இந்தக் காப்பீட்டுத் தொகையை நான்கு ஆண்டு படிப்பை முடித்த பிறகு, அவர்களிடம் 50 சதவீதத்தை திருப்பிக் கொடுத்து விடுவோம். அத்துடன், ஒரு செமஸ்டருக்கு ரூபாய் 300 கட்டணமாக வசூலிக்கிறோம்.
இவ்வாறு வசூலிக்கப்படும் தொகைக்கு, ஒவ்வொரு செமஸ்டருக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000 ரூபாய் மதிப்புள்ள பாடப் புத்தகங்களை வழங்குகிறோம். இந்தப் புத்தகங்களை தங்களுடைய படிப்பு முடிந்த பிறகு திருப்பிக் கொடுத்தால் போதும். இடையில் தரத் தேவையில்லை. அத்துடன், நான்கு ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க முடியாமல், அரியர்ஸ் வைக்கும் மாணவர்களுக்கு அவர்கள் அத்தாள்களை மீண்டும் எழுதி பாஸôகும் வரையிலான காலத்திற்கும் இப்புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக, நாங்கள் கூடுதலாக எந்தவிதக் கட்டணமும் வசூலிப்பதில்லை.
மேலும், காப்பீட்டுத் தொகை கட்ட முடியாமல் கஷ்டப்படும் மாணவ, மாணவிகளுக்கு காப்பீட்டுத் தொகை இல்லாமலும் புத்தகங்களை படிப்பதற்கு அளிக்கிறோம். இதுதவிர, மாணவர்கள் தங்களுடைய கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, அவர்கள் படித்த பாடப் புத்தகங்களை எதிர்காலத் தேவைகளுக்காக தங்களிடமே வைத்துக் கொள்ள விரும்பினால், குறைந்த விலைக்கு அப்புத்தகங்களை அவர்களுக்கே விற்று விடுகிறோம்.
தமிழ்நாடு புக் ஹவுஸ் மற்றும் டெக்னிக்கல் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஆகிய பதிப்பகங்களிடமிருந்து என்ஜினீயரிங் பாடங்களுக்கான புத்தகங்களை வாங்குகிறோம். இதைத் தவிர, பிரபல புத்தக நிறுவனங்களிடமிருந்தும் புத்தகங்களை கொள்முதல் செய்கிறோம். நடப்பு செமஸ்டர் வகுப்புகளுக்காக இதுவரை எங்களிடமிருந்து ஏழாயிரம் பேர் என்ஜினீயரிங் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
மேலும், ஆண்டு தோறும் என்ஜினீயரிங் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் தலா பத்து பேருக்கு இலவசமாக பாடபுத்தகங்களை வழங்குகிறோம். இதுதவிர, கல்விக் கட்டணம் உள்ளிட்ட உதவிகளையும் அளிக்கிறோம். இதற்காக, எங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.50,000 செலவாகிறது.
தற்போதுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களுக்கு வேண்டிய பாடப் புத்தகங்கள் அவர்களுடைய கல்லூரி நூலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை மாணவர்கள் வீட்டுக்கு கொண்டு வந்து படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களே அவர்களிடம் உள்ளது. ஆனால், எங்களிடம் ஏராளமான புத்தகங்கள் இருப்பதால், அதை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம்.
இதுதவிர, என்ஜினீயரிங் படிப்புகளுக்கான புத்தகங்கள் அனைத்தும் ஒரே கடையில் கிடைக்காது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டி உள்ளது. ஆனால், எங்களுடைய புத்தக வங்கியில் அனைத்துப் பாடங்களுக்கான புத்தகங்களும் கிடைக்கின்றன. இதனால், மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அலைச்சல் மிச்சமாகிறது.
அத்துடன், மாணவர்கள் கேட்கும் சில புத்தகங்கள் எங்களிடம் இல்லையென்றால், உடனடியாக அவற்றை சம்மந்தப்பட்ட பதிப்பகத்திடமிருந்து வரவழைத்து தருகிறோம். இவற்றிற்கு எல்லாம் மேலாக, எங்கள் வங்கியில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்களுக்கு தங்களுடைய பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறோம். இதற்காக, அனைத்துப் பாடங்களிலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்க் குழுவும் எங்களிடம் உள்ளது.
வெளியூர் மாணவர்களின் வசதிக்காக, தற்போது, நாங்கள் திருச்சியில் எங்களுடைய புத்தக வங்கியின் கிளையை தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கோவையிலும் ஒரு கிளையைத் துவக்க உள்ளோம். மேலும், வெளியூர் மாணவர்களின் வசதிக்காக, தபால் மூலமாகவும் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல், மாணவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த வங்கியை நடத்தி வருகிறேன்” என்றார்.