ஊதிய உயர்வும் நிதிச் சுமையும்!
டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்
அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2008-ல், இந்தியா முழுவதும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பரிசைப் போல அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
1997 வாக்கில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான 5-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோது, அப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊதிய உயர்வுப் பரிந்துரைகளை அமல்படுத்தியதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதிச் சுமையை அவை சரிக்கட்டுவதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனது. வரும் ஆண்டுகளில் அதே நிலைமை மீண்டும் ஏற்படும்.
இன்றைய சூழலில், புதிய ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. தனியார் துறையில் உள்ள அதிகாரிகளின் ஊதியங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தனியார் துறைக்கு இணையாக அரசு அதிகாரிகளுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.
இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், அரசுத் துறைகளைப் பொருத்தவரை, பெருந்தொகையை ஊதியமாகவும் கொடுத்துக்கொண்டு, பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களையும் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என்பதுதான். ஏனென்றால், அரசுத் துறைகளில் இப்போது பல லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அதில் 90 சதவிகிதமாக இருக்கும் சி மற்றும் டி பிரிவுகளில் தேவைக்கு அதிகமாக ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அரசுத் துறைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், ஒரே வேலையையே வேறு ஊழியர்கள் திரும்பவும் செய்வதையும் தவிர்த்துவிட்டால், பணித் திறனும் வேகமும் அதிகரிக்கும்.
நவீன தகவல் தொடர்பு முறைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வேலைத்திறனைப் பெருமளவில் அதிகரிக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்வராமல், தனியார் துறைக்கு இணையாக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்கள் மட்டும் உயர வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. ஏற்கெனவே, பல மாநில அரசுகளின் நிர்வாகச் செலவினங்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் ஊதியம் இன்னும் அதிகரித்தால் கூடுதல் நிதிச் சுமையை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்காக, அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்கக் கூடாது என்று இங்கு வாதிடவில்லை; மாறாக, சி மற்றும் டி பிரிவு ஊழியர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்.
“உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதியம்’ குறித்து அவ்வப்போது பேசப்பட்டுவருகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் நடைபெற்றுவரும் பல்வேறு விதமான பணிகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை வகைப்படுத்தி, அந்த ஊழியர்களின் உற்பத்தித் திறனை வரையறுக்க ஒரு திட்டவட்டவமான உத்தியை வகுப்பதென்பது அனேகமாக இயலாத காரியமென்றே தோன்றுகிறது.
எடுத்துக்காட்டாக, காவல் துறை ஆய்வாளரின் உற்பத்தித் திறனை வரையறுப்பது எப்படி? அவர் எத்தனை குற்ற வழக்குகளில் புலனாய்வை முடித்திருக்கிறார் என்பதைக் கொண்டு அவருக்கு ஊதியத்தை வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அவர் புலனாய்வு செய்த வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கும்; வழக்குகளைச் சரியாகப் புலனாய்வு செய்யாததால், நீதிபதியின் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே “புலனாய்வுத் திறமை’க்காக அந்த ஆய்வாளர் ஊக்கத்தொகையையும் பெற்று, அதன் காரணமாகவே பதவி உயர்வும் பெற்றுச் சென்றுவிட்டிருப்பார்.
ஒரு மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித் திறனை எவ்வாறு வரையறுக்க முடியும்? அந்த மாவட்டத்தில் சில விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள்; எனவே அந்த மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் அவர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.
தனியார் துறையில் லாபமே நோக்கம். எனவே, அதே அளவுகோலைப் பயன்படுத்தி அரசுத் துறை ஊழியரின் பணியை வரையறுக்க முடியாது.
எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் பெட்ரோலியத் துறைச் செயலரை எடுத்துக்கொள்வோம். அவர் செய்யும் அதே பணியை தனியார் துறையில் அவர் செய்துகொண்டு இருந்தால், அவரது ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகவோ அல்லது ரூ.10 கோடியாகவோ இருக்கக்கூடும். ஆனால் அரசுத் துறையில் அந்த ஊதியத்தை வழங்குவது குறித்து யோசிக்க முடியுமா?
இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய’ முறையை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், அத்தகைய வளர்ந்த நாடுகளில் இருந்து, இந்தியவைப் போன்று, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையே வேறு வகையான உறவு நிலவும் நாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.
நம் நாட்டில், “ஆண்டுதோறும் பணியை மதிப்பிடும் முறை’ ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அது இப்போது செயலற்றுப் போய்விட்டதற்கு இன்றைய பணி நிலைமைகளும், அரசுப் பணிகளில் நிலவும் அரசியல் செல்வாக்கும் தலையீடுகளுமே முக்கிய காரணங்கள். எனவே, “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய முறை’யால், இப்போதைய குறைபாடுகளைப் போக்கிவிட முடியாது.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது கேடு விளைவிக்கும் யோசனையாகும். 1997-ல் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிய பொழுதே அதை நான் எதிர்த்தேன். ஆனால், அதன் பிறகு புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, ஊழியர் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திவிட்டது.
ஊழியர்கள் 2 ஆண்டுகள் தாமதமாக ஓய்வுபெறுவர் என்பதால், அவர்களது வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை (கிராஜுட்டி) போன்றவற்றை இரு ஆண்டுகள் கழித்துக் கொடுத்தால் போதும். எனவே புதிய அரசின் முதல் ஆண்டு பட்ஜெட்டில் நிதிச் சுமை குறைவாக இருக்கும். அது புதிய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று காரணம் கூறப்பட்டது. இந்த வகையான குறுகியகாலப் பயனைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவது மிகத் தவறானது.
ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்த்தப்படுவதால், ஏராளமான இளைய வயதினருக்கு பதவி உயர்வுகள் தள்ளிப்போகின்றன. அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். திறமை குறைந்த ஏராளமான பணியாளர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்குப் பணியில் தொடரும் நிலை ஏற்படும். அடுத்த நிலையில் இருப்போருக்கு அவர்கள் தடைக்கற்களாகவும் மாறிவிடுவார்கள். எனவே, ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கூடாது.
நிர்வாகச் சீர்திருத்தம் குறித்தும் கூறப்படுகிறது. ஆனால், ஊதியக் கமிஷனின் பரிந்துரையில் நிர்வாகச் சீர்திருத்தம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறும்பொழுது, பெரும்பாலும் அது தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கிறதே தவிர, நடைமுறைச் செயல்பாடுகளின் தரத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவவில்லை. அரசியல்வாதிகள் ~ அதிகாரவர்க்கத்துக்கு இடையிலான உறவுகள்தான் நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமாகும். அதைக் களையாமல் சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் விளையாது.
உற்சாக மிகுதியில், மாநில அரசுகளால் தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அபரிமிதமான ஊதிய உயர்வை ஊதியக் குழு பரிந்துரைக்காது என எதிர்பார்ப்போம். அதேபோல, அதை தேர்தலுக்கு முன் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, அரசியல் நோக்கத்தில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளை மத்திய அரசும் வாரி வழங்கிவிடாது என்று நம்புகிறோம்; இல்லையெனில், அவை மாநில அரசுகளின் நிதி நிலைமைமீது பெருத்த அடியாக அமைந்துவிடும்.
(Rs. in crores) |
Year |
Gross Revenue |
Interest payment per year |
Net |
Pay |
% of net |
Pay Bill | Pension Bill |